படை வகைகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ரத-கஜ-துரக-பதாதி என்று ஸைன்யத்தில் நாலு வகை. இப்படிப் படையானது நாலு அங்கம் கொண்டதாயிருப்பதால்தான் ‘சதுரங்க ஸைன்யம்’ என்பது. விளையாட்டுக்களில் ஒன்றுக்கும் ‘சதுரங்கம்’ என்று பேர் இருக்கிறது. சொக்கட்டான், Chess என்பதெல்லாம் அதுதான், இதிலும் நால்வகைப் படை மாதிரியே காய்களை வைத்துக்கொண்டு அவற்றை இந்த ரீதியில்தான் நகர்த்தலாம் என்று விளையாட்டு போவதால் சதுரங்கம் என்று பேர் ஏற்பட்டிருக்கிறது.

ரத-கஜ-துரக-பதாதி என்பதில் ரதம் தேர்ப்படை, கஜம் யானைப்படை, துரகம் குதிரைப்படை, பதாதி காலாட்படை. ரதத்திலிருப்பவன் ரதத்திலிருப்பவனோடு, இப்படியே ஒவ்வொருவிதப் படையிலுமிருப்பவன் அதையே சேர்ந்த எதிராளியோடுதான் யுத்தம் பண்ண வேண்டுமென்று விதி.

இந்த நாளில் ‘ஆர்மி’க்கு ‘டிவிஷன்’ என்று பிரிவு இருக்கிற மாதிரி அந்த நாளிலும் கணக்கு இருந்தது. இத்தனை அக்ஷௌஹிணி கொண்ட ஸேனை என்பார்கள். ஒரு அக்ஷௌஹிணி* என்றால் நால்வகைப் படையிலும் எத்தனை யெத்தனை இருக்கணுமென்று கணக்கு உண்டு.

மஹாவீரர்கள்தான் ரதத்தில் இருந்துகொண்டு யுத்தம் செய்வார்கள். இப்படிபட்டவர்களில் ஒருத்தனாகவே இருந்துகொண்டு பதினாயிரம் பேரோடு யுத்தம் பண்ணும் திறமை பெற்றவனே ‘மஹாரதன்’ எனப்படுபவன். இந்த விஷயங்கள் மஹாபாரதத்தில் நிறைய வரும்.

யுத்த பூமியில் ஸைன்யத்தை அணிவகுத்து நிறுத்துகிறதில் பலவித டிஸைன்களின்படிச் செய்வார்கள். இவற்றுக்கு ‘வ்யூஹம்’ என்று பேர். கருட வ்யூஹம், பத்ம வ்யூஹம் என்றெல்லாம் கருடன், பத்மம் மாதிரியான ரூபம் வரும்படி ஸைன்யத்தை அமைத்திருப்பார்கள். உள்ளே போகப் போக ரொம்பச் சிக்கலான அமைப்பாக இருக்கும். இந்த வ்யூஹங்களைப் பிளந்து கொண்டு உள்ளே போய் யுத்தம் பண்ணி ஜயசாலியாகத் திரும்ப முடியும். அபிமன்யு க்ருஷ்ண பரமாத்மாவிடமிருந்து பத்ம வ்யூஹத்துக்குள்ளே பிரவேசிக்கிற முறையை மட்டும் தெரிந்து கொண்டு, அதிலிருந்து எப்படித் திரும்புகிறது என்று தெரிந்து கொள்ளாமலே கௌரவ ஸைன்யத்துக்குள் போய்த்தான் சத்ருக்களிடம் ஜீவனை இழந்தானென்று பாரதத்தில் இருக்கிறது.

நால்வகைப் படை தவிர கடற்படையும், கடல் யுத்த முறைகளும் உண்டு. இது Navy. Air Force என்கிற விமானப்படைதான் நவீன காலத்தைச் சேர்ந்தது. விமானங்கள் முற்காலங்களில் அபூர்வமாக தெய்வீக புருஷர்களாலும் அஸுரர்களாலும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தன. த்ரிபுராஸுரர்கள் ஒரு மாதிரி விமானப்படையெடுப்பு செய்தவர்கள்தான்.


* ஓர் அக்ஷௌஹிணி என்பது 21870 தேர்களும், அதே அளவு யானைகளும், அதைப்போல் மும்மடங்கான 65610 குதிரைகளும், ஐந்து மடங்கான 109350 காலாட்களும் கொண்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மூவகை ஆயுதங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கோட்டை
Next