கோட்டை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதெல்லாம் யுத்த பூமியைச் சேர்ந்த விஷயம். நாடு, நகரம் முழுவதையுமே படையெடுப்பதிலிருந்து ரக்ஷிப்பதற்காக செய்த முக்யமான ஏற்பாடே கோட்டை கட்டுவது. ரொம்பப் பெரிசாக பலமாகச் செய்வது இது. அதனால்தான் ‘என்ன கோட்டை கட்டிண்டிருக்கே?’ என்று கேட்கிற வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் ராணாக்கள் சித்தோரில் விசேஷமாகக் கோட்டைகள் கட்டினார்கள். சிவாஜியும் மஹாராஷ்டிராவில் நிறையக் கட்டியிருக்கிறார். அரண் என்று கோட்டை, அகழ் என்று அதைச் சுற்றி ஜலம் இருக்கும்படி வெட்டுவது முதலானவற்றில் தமிழ்நாட்டு மூவேந்தர்களும் சிறப்புப் பெற்றிருந்தார்கள். திருக்குறளில் ‘அரண்’ என்றே பத்துச் செய்யுள் கொண்ட ஒரு அதிகாரமிருக்கிறது. பொதுஜனங்களுக்கு யுத்த அபாயமில்லாமல் பெரிய காப்பாயிருந்தது அரண்தான். அதனால்தான் தர்மத்துக்கு அரண், ஸத்யத்துக்கு அரண் என்றெல்லாம் பெரியவர்களைக் கொண்டாடும்போது சொல்கிறோம்.

கோட்டைக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘துர்கம்’ என்று பெயர். ‘ஸுலபத்தில் பிரவேசிக்க முடியாதது’ என்று அர்த்தம். இஹத்திலும் பரத்திலும் பெரிய ரக்ஷையாக இருக்கிற அம்பிகையை ‘துர்கா’ என்கிறோம். வடக்கே ‘துர்க்’என்று முடிகிற அநேக ஊர்கள் அங்கேயெல்லாம் பூர்வத்தில் கோட்டைகள் இருந்ததைக் காட்டுகின்றன. ‘கட்’ (gad), ‘காடா’ (gada) என்று முடிகிற ஊர்களும் இப்படியேதான். தமிழ்தேசத்திலும் ஊத்துக்கோட்டை, புதுக்கோட்டை, செங்கோட்டை, பாளையங்கோட்டை என்று அநேக ஊர்கள் இருக்கின்றன. செஞ்சிக் கோட்டையும் வேலூர்க் கோட்டையும் ‘டூரிஸிட் ஸென்டர்’களாக இருக்கின்றன. இவற்றிலே எத்தனையோ மர்மங்கள்; பண்டங்களும் மநுஷ்யர்களும் (முக்யமாகக் ஸ்த்ரீகள்) எதிரிகள் கையில் சிக்காமலிருப்பதற்காக நிலவறை என்று அண்டர்-க்ரவுண்டில் வைத்திருப்பது முதலான பல ஏற்பாடுகள்.

வ்யூஹம் மாதிரியே கோட்டையிலும் பல அமைப்பு முறைகள் உண்டு. கோட்டை நிர்மாணத்தாலேயே நாடு நகரத்துக்கு க்ஷேமம் உண்டாகும்படியாக அவற்றை சாஸ்த்ரவத்தாக, மந்த்ர பூர்வமாகப் பண்ணவும் வழி இருக்கிறது. ‘சயனம்’ என்பதாக வேதத்தில் யஜ்ஞங்களில் செய்த கட்டுமானங்களுக்கான ரூல்களின் அடிப்படையிலேயே கோட்டை நிர்மாணம் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். மநுஷ்ய ஸாமர்த்யத்தோடு மந்த்ரங்களாலும், வைதிகமான வடிவமைப்புகளாலும் ஏற்படுகிற தெய்வ சக்தியும் கோட்டை அமைப்பதில் பிரயோஜனமாயிருந்திருக்கிறது. ஸ்ரீ சக்ரம், ஷ்ட்கோணம், ஸுதர்சன சக்ரம் என்றெல்லாம் சொல்பவை கூடச் சிலவித வடிவமைப்பினாலேயே திவ்ய சக்தியைப் பெறுவதுதானே? இப்படி காஞ்சிபுர நகரத்தையே ஸ்ரீ சக்ர ரூபத்தில் ஆசார்யாள் புனர் நிர்மாணம் பண்ணித் தந்தாராம். கோட்டையிலும் இப்படி சக்ராகாரம், பத்மாகாரம் என்று பல டிஸைன்கள். கோவிந்த தீக்ஷிதர் தஞ்சாவூரில் புதிதாக காருடமாக (கருட ரூபத்தில்) கோட்டைக் கட்டச் செய்தாரம்.

கோட்டை பற்றிய இப்படிப்பட்ட அருமையான தத்வங்கள், செய்முறை எல்லாவற்றையும் இப்போது நாம் கோட்டை விட்டுவிட்டு நிற்கிறோம்!பழைய கோட்டை அத்தனையும் relic -ஆக (இடிபாடாக) நிற்க விட்டிருப்பது தான் நம் பெருமையாயிருக்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is படை வகைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மல்யுத்தம்
Next