அறுபத்துநாலு கலைகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சதுஷ்-ஷஷ்டி கலா அதாவது அறுபத்துநாலு கலைகள் என்று ஒரு கணக்குச் சொல்வதுண்டு. இந்தக் கலைகளாகக் கூட அம்பாள்தான் இருக்கிறாளென்பதால் அவளுக்கு ஸஹஸ்ர நாமத்தில் “சதுஷ்-ஷஷ்டி கலாமயி” என்று ஒரு நாமா இருக்கிறது. இந்த அறுபத்துநாலில் மேலே சொன்ன எல்லாம் வந்துவிடும்.

லலிதா ஸஹஸ்ர நாமத்துக்கு பாஸ்கர ராயர் என்கிறவர் பண்ணின பாஷ்யம் ரொம்பவும் முக்யமானது. அம்பாளுடைய அநுக்ரஹத்தால் எல்லாத் துறைகளிலும் ஆச்சர்யப்படும்படியான வித்வத் உள்ளவராக இருந்தவர் இந்த பாஸ்கர ராயர். இவர் அறுபத்துநாலு கலைகள் என்னென்ன என்று பல புராதன நூல்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தம்முடைய பாஷ்யத்தில் இன்னவென்று வரையறுத்துச் சொல்லியிருக்கிறார். வைதிக மதத்துக்கு ஆதாரமாயிருக்கிற வேதம், வேதாங்கம், உபாங்கம், உபவேதம் என்கிற பதினெட்டு வித்யாஸ்தானமுமே இந்தக் கலைகளில் வந்து விடுகின்றன. ஷட்தர்சனங்கள் என்பதைச் சேர்ந்த ஸாங்கியம், யோகம் முதலான ஆத்மார்த்தமான மற்ற சாஸ்திரங்களும் வந்துவிடுகின்றன. ஆனையேற்றம், குதிரையேற்றம் இவையும் வருகின்றன. மந்த்ர சக்தியால் பண்ணுகிற ஆகர்ஷணம், வச்யம், திரஸ்கரிணி என்ற கண்கட்டு வித்தை, இந்த்ர ஜாலம் என்னும் மாஜிக், பித்தளையைப் பொன்னாக்குகிற ரஸவாதம், வைத்யத்தை சேர்ந்த நாடி சாஸ்திரம், விஷத்தை இறக்கும் ‘காருட சாஸ்திரம்’, ரூப லக்ஷணத்தைக் கொண்டே ஒருத்தனின் குணத்தையும் வாழ்க்கைப் போக்கையும் நிர்ணயம் செய்யும் ‘ஸாமுத்ரிகா லக்ஷண சாஸ்திரம்’, ரத்னப் பரீக்ஷை முதலான பலவற்றை அறுபத்துநாலில் காட்டுகிறார். இதில் அழகுணர்ச்சி, ரஸிக மனஸ், இந்திரிய இன்பம் முதலியவைகளைப் பூர்த்தி பண்ணுவதாகவும் பல இருக்கின்றன. மாலை, வாஸனைப் பொடி, நகை நட்டு முதலியவை செய்வது, பின்னுவது, எண்ணெய் தேய்ப்பது, பக்ஷிகளுக்குப் பேச்சுச் சொல்லித் தருவது, யௌவனம் உண்டாக்குவது, புதிர் போடுவது, ஒருத்தர் முடிக்கிற வார்த்தையையே இன்னொருத்தர் ஆரம்ப வார்த்தையாய் வைத்து ‘அந்தாதி’ பாடுவது (அந்த – ஆதி என்பதே அந்தாதி ‘அந்த’- முடிவு;’ ஆதி’- ஆரம்பம்) , ஒருத்தர் ஒரு ‘ஐடியா’வை ஒளித்துப் பாதி மாத்திரம் சொல்லி விட்டுவிடுவதை இன்னொருத்தர் புரிந்து கொண்டு பாக்கியையும் சொல்லிக் கவிதையைப் பூர்த்தி செய்வதுதான் ‘ஸமஸ்யா பூர்ணம்’ – என்று இந்தக் கலைகளில் பல இருக்கின்றன. இவையும் காந்தர்வ வேதத்தில் வருவதாகவே வைத்துக் கொள்ளலாம். இப்படிப் பார்த்தால் ‘ஜர்னலிஸம்’ என்று தற்போது பஹுஜன வசீகரத்தோடு இருக்கிற பத்திரிகைத் தொழிலும் இதைச் சேர்ந்ததாக ஆகும். மொத்தத்தில் விசித்ரத்தைக் காட்டுவதெல்லாம் காந்தர்வ வித்தைகள் எனலாம். மாஜிக்தான் விசித்ரம் என்றில்லை. வார்த்தை விசித்ரமாய் பேசுவது, எழுதுவது, ஸ்வர தாள விசித்ரமாய் பாடுவதும் ஆடுவதும், ரஸ விசித்ரங்களைக் காட்டி நடிப்பது எல்லாமே விசித்ரந்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பெயர்க்காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பொழுது போக்கும் புலன் கட்டுப்பாடும்
Next