பொழுது போக்கும் புலன் கட்டுப்பாடும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பிரத்யக்ஷத்தில் நாம் பார்ப்பதில் இப்படிப் பொழுது போக்கு, உத்ஸாஹம், pleasures of the senses என்று இருப்பவை எல்லாமே மநுஷ்யனை ரொம்பவும் இழுத்துக் கொண்டு போகிற சக்தி உள்ளவையாயிருக்கின்றன. ‘இழுத்துக் கொண்டு’ என்றால் மேலேயா என்றால் அப்படியுமில்லை. பாட்டு, கூத்து, ஸினிமா, ஸ்போர்ட்ஸ் நாவல், பத்திரிகைகள் எல்லாம் சாப்பாடு திகட்டிப் போகாமல் ஊறுகாய் மாதிரி, கர்மாநுஷ்டானங்களில் ஸ்ட்ரெயின் ஆகாமல் ரிலாக்ஸ் செய்யவே இருக்க வேண்டும் என்று மட்டுந்தான் சாஸ்திரங்களில் அநுமதித்திருப்பது. கடைசி பக்ஷமாகத்தான் இவற்றுக்கு நம் மனஸையும் பொழுதையும் பொருளையும் கொடுக்க வேண்டும். ஆனாலும் ஈஸ்வர மாயையில் எப்படியிருக்கிறதென்றால் கொஞ்சம் இதுகளில் இறங்கினாலும் இவை சுழலாக நம்மை ஒரேயடியாக இழுத்துக் கொண்டு போய் இவற்றுக்காகவே நாம் ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணுகிற நிலைக்குக் கொண்டு நிறுத்துகின்றன.

இப்படியிருப்பதற்குக் காரணம் தற்போது நமக்குக் கர்மாநுஷ்டானம் ரொம்பவும் குறைந்து போயிருப்பதுதான். அநுஷ்டானம் நிறையச் செய்தோமானால் தன்னால் நல்லறிவு, சுத்தமான மனஸ், கட்டுப்பாடு, sense of proportion (எதற்கு என்ன அளவு என்ற நிர்ணயமான அறிவு) எல்லாம் உண்டாகிவிடும். அதனால் பொழுது போக்கையே வாழ்க்கைப் போக்காக, அதிலும் வழுக்கி விடுகிற போக்காக ஆக்கிக் கொள்ளாமல் எந்த அளவோடு ருசித்து விட்டு நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நிறுத்திக் கொள்வோம். இல்லாமலா இந்த தேசம் ஒரே ஸமயத்தில் ஆசார சீலங்களுக்கும் பெயர் எடுத்து அதே ஸமயத்தில் இத்தனை கலைகளுக்கும் களஞ்சியம் என்ற பெயரையும் பெற முடிந்திருக்கிறது?

விவேகத்தோடு அளவறிந்து இந்தக் கலைகளை அநுபவிக்காமல் அதியாகப் போனால் இவையே நம்மை ரொம்பவும் இறக்கி விடுகின்றன. ஜனரஞ்ஜகம் என்பதில் ஆடல், பாடல், எழுத்து எல்லாமே ரொம்பவும் கீழ்த்தரமாகி விடுகின்றன. விளையாட்டு மோஹம் மனிதனைப் பைத்தியமே ஆக்கி விடுகிறது. ஸினிமா ஸ்டார்கள் வந்து விட்டால் பகவானே தர்சனம் கொடுப்பதுபோல் ஆவேசமாகி விடுகிறார்கள். ‘கூத்தாடி’ என்பது திட்டு வார்த்தையாகத் தானிருக்கிறது என்பதிலிருந்தே இந்தக் கலைகளை எப்படித் தப்பாகப் பிரயோஜனப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது.

அநுஷ்டானமில்லாதபோது இந்திரியம் ஓடுகிறபடி ஓடவேண்டுமென்று தோன்றுகிறது. ‘ஜனங்கள் இப்படிப்பட்ட சரக்குதான் கேட்கிறார்கள்’ என்று அவர்கள் தலையில் பழியைப் போட்டுவிட்டு, கன்னா பின்னாப் பாட்டுப் பாடுகிறார்கள், புலன் வெறியைத் தூண்டிவிடுகிற ரீதியிலேயே எழுதுகிறார்கள், ஸினிமா எடுக்கிறார்கள், சித்திரம் போடுகிறார்கள். ஜனங்களும் அவர்கள் தலையில் பழியைத் திருப்பிப் போட்டு அவர்கள் இப்படிப்பட்ட சரக்குகளைத்தான் தருவதால் தாங்கள் அதையே எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது என்கிறார்கள். இதிலே ஜனங்களைவிடக் கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாக இந்தக் கலைகளை அப்யஸித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் அதிகம் பொறுப்பிருக்கிறது. இப்போது கண்டதை எழுதியும், பாடியும், நடித்தும், படம் பிடித்தும் கீர்த்தி, தனம் எல்லாம் ஸம்பாதித்து விடலாம். ஆனால், ‘இத்தனை ஜனங்களைக் கெடுத்ததற்கான தோஷத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு இதற்காக நாம் ஒருத்தனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்’என்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும். மளிகை ஸாமானில் கலப்படம் பண்ணினால் குற்றம்;குடி தண்ணீரைக் கெடுத்தால் குற்றம் என்றால் நேரே மநுஷ்யனின் ஆத்மாவையே கெடுப்பது இவற்றைவிடக் குற்றம்தானே? கலப்படத்துக்காக தண்டிக்கிறவன் நம் மாதிரி ஒருத்தன்தான். அவனிடமிருந்து தப்பியும் விடலாம். அல்லது லஞ்சம் கொடுத்து ஸரிப்படுத்திடலாம். ஆனால் தன் ஆத்மாவையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் கெடுத்ததற்காக ஒருத்தனைச் சிக்ஷிக்கிறானே, அவனிடமிருந்து தப்பவே முடியாது! அவனை நாம் வசியம் பண்ணிக் கொள்ளவும் முடியாது!இந்த நினைப்பு இருந்து விட்டால் கலைகளில் ஈடுபட்டவர்கள் தப்பு வழிக்குப் போக மாட்டார்கள். தெய்வ நினைப்பு, பய பக்தி, அநுஷ்டானம் இவை போனதில்தான் அடக்கம் போய்விட்டது; இந்திரியங்களின் வேகம் குறைவதால் ஏற்படுகிற பக்வம் வராமலே போகிறது. இதோடுகூடக் ‘கலைஞர்கள்’ என்று தாங்களாகவே தங்களுக்குக் கௌரவம் கொடுத்துக் கொண்டு பொதுஜனங்களும் அதில் மயங்கி இவர்களைக் கொண்டாடி முகஸ்துதி பண்ணுவதில் அஹம்பாவம் ஜாஸ்தியாகிவிடுகிறது. பழைய காலத்தில் போல, வித்வான்களைக் கூட்டி ‘அரங்கேற்றம்’ என்று செய்து, அவர்கள் ஒப்புக் கொண்டால்தான் ஒரு புஸ்தகத்தையோ, நாடகத்தையோ பிரசாரம் பண்ணலாம் என்றுமில்லாமல், ‘கருத்து ஸ்வதந்திரம், எழுத்து ஸ்வதந்திரம், பேச்சு ஸ்வதந்திரம்’ என்று வேறு ஏற்பட்டிருப்பதால், எதை வேண்டுமானாலும் ஆடிப் பாடி ஊரை வளைக்கலாமென்று நடந்து வருகிறது. சின்ன வயதிலிருந்தே மதக் கல்வி, மதாநுஷ்டானங்கள் இருந்தால் தான் ஸாத்விகம் ஏற்படும். அப்போதுதான் எத்தனை ஆட்டம், பாட்டம் இருந்தாலும் அதுகளும் முடிவில் உயர்ந்த ஸாத்விக லக்ஷ்யத்தில் சேர்ப்பதாக இருக்கும். முற்காலங்களில் இப்படித்தானிருந்தது. அநுஷ்டான ஸம்பந்தம் துண்டித்துப் போனபின்தான் ராஜஸ, தாமஸப் போக்குகளையே தூண்டிவிடுவதாக இந்தக் காந்தர்வ கலைகள் ஆகியிருக்கின்றன.

‘ Fine ‘ art, ‘லலித’ கலை என்றே இவற்றுக்குப் பெயர் சொல்கிறார்கள். இவை முரட்டுத்தனமான வேகங்களில் கொண்டுவிடுமானால் அந்தப் பேரே பொருந்தாது. நிஜமான fine art ஆனால் அது மனுஷ்யனை refine பண்ணுவதாகத்தான் இருக்க வேண்டும்…………

ஸங்கீதம் என்கிற இசையும், நிருத்யம் என்கிற ஆடலும், நாடகமும் காந்தர்வ வேதத்தைச் சேர்ந்த முக்யமான கலைகள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அறுபத்துநாலு கலைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அழகுணர்ச்சி ஆன்மாநுபவம்
Next