அழகுணர்ச்சி : ஆன்மாநுபவம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நிருத்யம் என்பது உணர்ச்சிகளை அபிநயமாக நடித்துக் காட்டாமல் ஒரு தாளத்துக்கும் சொல்லுக் கட்டுக்கும் ஏற்பக் காலால் ஜதிகளைப் போட்டுக் கொண்டு, கைகளால் பல விசித்திரங்களைச் செய்து காட்டுவதே* என்றும், நாட்டியம் என்பது ஒரு பாடலுக்கு அர்த்தத்தை விளக்கி அபிநயம் செய்து நடித்துக் காட்டுவது என்றும் பாகுபாடு சொல்வதுண்டு.

வெறும் அங்கசர்யையால், அதாவது சரீர சேஷ்டையால் எப்படி நிருத்யத்தில் ஸந்தோஷம் ஏற்படுகிறது? அதில் ரஸபாவ வெளியீடு எதுவும் இல்லையே!- என்றால் இதுதான் மநுஷ்யனின் ஸெளந்தர்ய ரஸனையில் உண்டாகிற ஸெளக்யம். Aesthetic sense என்று சொல்வார்கள். அழகை உணர்ந்து கொள்வதிலேயே ஒருவிதமான ஆத்மானந்தம் உண்டாகிறது. இது அழகு, இது அழகில்லை என்று அந்தராத்மாவுக்குள் எதுவோ ஒன்று. எடை போட்டுச் சொல்லி, அழகாயிருப்பதில் நம்மைச் சொக்க வைக்கிறது. ஒரு நாய் குடுகுடு என்று ஓடினால் அது அழகாயிருக்கிறதென்று நமக்கு உள்ளே தோன்றவில்லை. அதுவே ஒரு யானை திம் திம் என்று ஆடி அசக்கிக் கொண்டு, தும்பிக்கையையும் காதுகளையும் அதற்கேற்க அசைத்துக் கொண்டு வருவதைப் பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்கவேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு காக்கா தவ்வித் தவ்வி நடந்தால் அதிலே ஒரு மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படுவதில்லை. ஒரு ஹம்ஸம் ஒய்யாரமாகப் போனால் மனஸ் அதிலேயே ஈடுபட்டு நிற்கிறது. வெறும் அசைவுக்கு இப்படி ஒரு பவர். இப்படித்தான் ஜதிகள் என்று சுத்த நிருத்யத்தில் வெறுமே காலால் அடிப்பதும், கையை அசைப்பதும், இடுப்பை ஒடிப்பதும் அதிலுள்ள define பண்ணமுடியாததான அழகு என்ற அம்சத்தால் நமக்கு ஆனந்தத்தை உண்டாக்குகின்றன. இந்த ஆனந்தத்தில் தூய்மையுமிருக்கிறது. அதுவே ஒரு கோமாளி கையையும் காலையும் ஆட்டி, ஒடித்துக் காட்டினால் அது ஹாஸ்யமாகத் தானிருக்கிறது. சில ஸமயத்தில் விரஸம் என்பதாகச் சித்தவிகாரம் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. ஆகக்கூடி அங்கசர்யைக்கே பலவித உணர்ச்சிகளை உண்டாக்குகிற சக்தி இருக்கிறது. மலையாளக் ‘கதகளி’யில்ஒரு தினுஸு பார்க்கிறோம். அதில் வாயால் எதுவும் பேசாமல் எல்லாரும் ஊமை போலவே ஆடுவார்கள். ஆனாலும் பலவிதமான மனோபாவங்களை கை, கால், புருவம், உதடு இவற்றின் அசைப்பினாலேயே தெரிந்து கொண்டுவிடுவோம்.

‘கதைகளி’ என்பதுதான் ‘கதகளி’ என்று நாம் சொல்வது. களி என்றால் தமிழில் களிப்பு; ஆனந்தம். களிப்பிலே டான்ஸ் ஆடத்தோன்றுகிறது. ‘களிக் கூத்தாடுவது’ என்கிறார்கள். அதனால்தான் அம்பலக் கூத்தனுக்குத் திருவாதிரை உத்ஸவம் பண்ணி ஸமர்ப்பிக்கிற நைவேத்யத்தைக் ‘களி’என்கிறோம். மலையாளத்தில் களி என்றாலே கூத்து என்று அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள். ஒரு கதையைக் கூத்தாக ஆடிக் காட்டுவதற்கு ‘கதைகளி’என்று பேர் வைத்தார்கள்.

மனோபாவத்தை வாயால் சொல்வது, அங்கத்தால் அபிநயித்துக் காட்டுவது, மனோபாவம் இன்னதென்று சொல்ல முடியாமலே போனாலும் வெறும் ராக ஆலாபனையாலும், தில்லானாவிலும் ஆனந்தத்தை உண்டாக்குவது என்று பலவிதம் இருந்தாலும் எல்லாம் ‘அழகு’ என்ற ஒன்றினால் ஆத்மாவுக்கு நிறைவு ஏற்படுத்துவதைச் சேர்ந்ததுதான்.

வெறும் தாள கதியை லயம் என்கிறார்கள் – ஏன்? அதற்கு நம் மனஸை அப்படியே லயித்திருக்கும்படிச் செய்கிற சக்தி இருக்கிறது. ம்ருதங்கம் வாசிக்கிறபடி வாசித்தால் அந்த ரஸாஸ்வாதத்தில் ஆத்ம லயிப்பு உண்டாகிவிடுகிறது. ச்ருதி, ராகம் எல்லாம் இப்படித்தான். வெறும் சப்தம் அதன் பலவிதமான அழகுகளால் ஹ்ருதயத்தில் ஆத்மானந்தத்தை உண்டாக்குகிறது. இப்படிச் சொன்னால் என்ன அர்த்தமாகிறது? ஆத்மானந்தத்தைப் பரமாத்மா தவிர யார் தர முடியும்? அதனால் இந்தக் கலா ஸெளந்தர்யமெல்லாம் கடைசியில் ஈஸ்வராம்சம்தான் என்று தெரிகிறது.

அத்தனை அழகுக்கும் ஆதாரம் ஈஸ்வரன்தானே? ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே ஆசார்யாள் அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைச் சொல்கிறார். இதனால்தான் ஸந்தியா வானத்தைப் பார்த்தால் மனஸில் ஒரு தெய்விகமான இன்பம் உண்டாகிறது. காரணம் கேட்டால் என்ன சொல்வது? புஷ்பத்தைப் பார்த்தால், ஒரு வார்த்தையும் அர்த்தமுமில்லாமல் குயிலும் கிளியும் கூவுகிறதைக் கேட்டால், சற்றுமுன் சொன்னது போல ஒரு மநுஷ்யனே இப்படி ஒரு வார்த்தையும் அர்ததமுமில்லாமல் ஒரு ராகத்தை ஆலாபனைப் பண்ணிக் கேட்டால் அது நெஞ்சைத் தொட்டு ஆனந்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆனந்தம் என்றால் சிரிக்கிறது என்று அர்த்தமில்லை. கண்ணிலே ஜலங்கூட வந்தாலும் வந்துவிடும். கண்ணன் குழலோசை என்று நினைத்துக் கொண்டாலே ஒரு உருக்கம் உண்டாகிறது. அழுகையானாலும் உருக்கமானாலும் அதிலே சுத்தமாக, சாந்தமாக, பவித்ரமாக எதுவோ ஒன்று ஆத்மாவைக் கவ்விக் கொள்கிறது. அது ஈஸ்வராம்சம்! அழகு என்பது அதுதான்! ஒரே அடுக்காய் ஹிமாலயத்தில் பனி மூடியிருப்பதைப் படத்தில் பார்த்தால்கூட ஆனந்தம் நமக்கு உள்ளேயும் அப்படி ஐஸ் மாதிரி ஜிலுஜிலுப்பு ஏற்படுகிறது. தாஜ்மஹாலைப் பூர்ணிமை நிலாவில் பார்க்கணுமென்றே தேசம் விட்டு தேசம் வருகிறான் – அழகுக்கு ஆத்மாநந்தத்தை உண்டுபண்ணும் சக்தி இருப்பதால்தான். இந்த சக்தி அதற்கு எப்படி இருக்கிறதென்றால் அதிலே உள்ள ஈஸ்வர ஸாந்நித்யத்தால்தான்.

(கீதையில்) விபூதியோக முடிவிலே பகவான் இதைத்தான் சொல்லியிருக்கிறார். ‘விபூதி’ என்றால் விபுவின் லக்ஷணம். ‘விபு’ என்றால் ஸர்வ வியாபி. ஸர்வ வியாபியாகவுள்ளவன் என்றால் எல்லாம் அவனே என்று அர்த்தம். “ந ததஸ்தி விநா யத் ஸ்யாந்-மயா பூதம் சராசரம்” – என்னைத் தவிர சராசரத்தில் எதுவாவது ஒன்று உண்டோ என்றால் கிடையவே கிடையாது” என்கிறார். இப்படி எல்லாமாயிருப்பது அவன்தான் என்று ரொம்பவும் ஞானிகளுக்குத்தான் தெரியும். கல்லு மண்ணு, நல்லது மாதிரியே கெட்டது, அழகானது மாதிரியே அவலக்ஷணமானது எல்லாம் அவன் தானென்று அபூர்வமாய் எங்கேயோ ஒரு ஞானிக்குத்தான் தெரியும். மற்றவர்கள் எப்படி தெரிந்து கொள்வது? அதற்காகத்தான், தான் ஸர்வ வியாபியான விபுவான போதிலும் சராசரி மநுஷ்யனுக்கு தன்னுடைய மஹிமை எதெது, யாரார் ஸ்ருஷ்டியில் ரொம்ப உயர்ந்தவையாக, உயர்ந்தவர்களாக இருக்கின்றனவோ, இருக்கிறார்களோ அங்கேதான் பிரகாசமாகத் தெரியும் என்று சொல்லி இப்படிப்பட்ட வஸ்துக்களையும் ஆஸாமிகளையும் ஒரு பெரிய லிஸ்டாக ‘விபூதி யோகம்’ என்று அத்யாயம் பூரா கொடுத்துக் கொண்டு போகிறார். எல்லாமான அவர் இன்னின்னதில் தாம் விசேஷமாகப் பிரகாசிப்பதாக லிஸ்ட் கொடுக்கிறார். எல்லாவற்றிலும் அவருடைய ஸாந்நித்யத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல், “கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோ (அ)ஸீ பகவந் மயா?” ஏ பகவானே! என்னால் நீ எந்தெந்த வஸ்துக்களில் சிந்திக்கத் தக்கவனாக இருக்கிறாய்?” என்று அர்ஜுனன் கேட்டதையும் ஒட்டி, இப்படித் தன் விபூதி ஸ்பஷ்டமாக வெளிப்படுகிறவற்றை ஒரு லிஸ்ட் போட்டு கொடுக்கிறார். “பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் நான் விஷ்ணு; ஜ்யோதிஸ்ஸுகளுக்குள் ஸூர்யன்; நக்ஷத்ரங்களுக்குள் சந்திரன்; வேதங்களுக்குள் ஸாமம்; பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரன்; மலைகளுக்குள் மேரு; ஸேநாதிபதிகளுக்குள் ஸ்கந்தன்; வார்த்தைகளுக்குள் ஓம்காரம்; மரங்களில் அச்வத்தம் (அரசமரம்) ; தேவரிஷிகளில் நாரதர்; மிருகங்களில் ஸிம்ஹம்; பக்ஷிகளில் கருடன்; ஆயுதபாணிகளுக்குள் ராமன்; நதிகளில் கங்கை; மாஸங்களில் மார்கழி; ரிதுக்களில் வஸந்தம்; விருஷ்ணி (என்கிற யது குலக்கிளை) வம்சத்தினரில் கிருஷணன்; பாண்டவரில் அர்ஜுனன்” என்று அந்தக் கிருஷ்ணனே அர்ஜுனனிடம் சொல்கிறார். இன்னும் அநேகத்தையும் சொல்லிவிட்டு முடிவாக ஒன்று சொல்கிறார்.

யத்யத் விபூதிமத் ஸத்-த்வம் ஸ்ரீமத் ஊர்ஜிதம் ஏவ வா |

தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ச ஸம்பவம் ||

அதாவது, “எதெது ஸ்ரீ உள்ளதாக, அதாவது லக்ஷ்மீகரமாக இருக்கிறதோ, எதெது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறதோ அதெல்லாம் என்னுடைய தேஜஸின் அம்சமாக உத்பவித்தது என்று தெரிந்துகொள்”என்று முடிக்கிறார்.

“ஸ்ரீ உள்ளது’, ‘லக்ஷ்மீகரமானது’ என்றால் அழகானது, மங்களமானது, நல்லது, மனஸுக்குத் தூய்மையான இன்பம் கொடுப்பது என்று அர்த்தம். இங்கே பகவான் தன்னுடைய விபூதி என்கின்ற மஹிமையானது மிகவும் சக்தி வாய்ந்த ‘ஊர்ஜித’ வஸ்துக்களில் இருப்பதாக மட்டும் சொல்லாமல், அழகு வாய்ந்த ‘ஸ்ரீமத்’தான வஸ்துக்களிலும் இருப்பதாகச் சொல்லியிருப்பதே கவனிக்க வேண்டியது. பகவத் விபூதியான இந்த அழகுணர்ச்சியை வைத்துத்தான் காந்தர்வ வேதமானது உபவேதம் என்கிற பெருமைக்கு உரியதாக உண்டாயிருக்கிறது.

கண்ணுக்கு டான்ஸ், காதுக்குப் பாட்டு, மனஸுக்கு நவரஸங்கள் என்பதாக இந்த்ரிய ஸெளக்யங்களைத் தருவதாகத் தோன்றினாலும் இந்த வித்தைகள் ஸாமவேதத்தை அடிப்படையாகக் கொண்டு உண்டானவை என்பதனாலேயே இவற்றுக்குப் பெருமை ஏற்படுகிறது. வேதங்களுக்குள்ளே தாம் ஸாமமாயிருப்பதாகவும் பகவானே சொல்லியிருப்பதால் இன்னும் பெருமை!மற்ற உபவேதங்களுக்கு அவற்றுக்கு மூலமாயுள்ள வேதத்தோடு உள்ள ஸம்பந்தத்தைவிட காந்தர்வ வேதத்துக்கு ஸாம வேதத்தோடுள்ள ஸம்பந்தம் இன்னும் நெருக்கமாக எல்லோருக்குமே தெரிகிறது. ஸாமகானத்தின் ஸ்வரங்களிலிருந்துதான் ஸ்பத ஸ்வரமும் உண்டாயிருக்க வேண்டுமென்று ஸாமகானத்தைக் கேட்கிற எவருக்கும் தெரிகிறது. ‘ஸாமகானம்’ என்று பெயர் இருப்பதிலிருந்து அதுவே. ஸங்கீத வித்யையுடன் சேர்ந்தது தானென்று தெரிகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் “ஸாம கான ப்ரியாயை:” என்று ஒரு பெயரைச் சொல்லிவிட்டு, உடனே இது அதன் கான விசேஷத்துக்காகத்தான் என்று தெரிவிக்கிறாற்போல் அடுத்ததாக “ஸ்வரமயாய நம:” என்ற நாமாவைக் கொடுத்திருக்கிறது. மஹாவிஷ்ணுவான ஸ்ரீக்ருஷ்ணன் தம்மை வேதங்களில் ஸாமம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாகவும் பார்த்தோம்.

இதிலிருந்தே ஸங்கீதம் முதலான காந்தர்வக் கலைகளுக்குள்ள தெய்விகத்தன்மை தெரியவரும். உபவேதங்களுக்குள் மநுஷ்யனை ரொம்பக் கீழான கேளிக்கைகளுக்கு இழுத்துச் செல்லக்கூடியது என்று தோன்றுகிற காந்தர்வ வித்யையேதான் அவனை ரொம்ப மேலே இழுத்துக்கொண்டு போய் அப்படியே ஈஸ்வரனோடு ஐக்யமாக்குவதற்கும் உதவுகிறது.

ஆக, அது தப்புக்குக் கொண்டு போகிறது என்றால் இதற்கான தப்பு அதனுடையதில்லை. நாம் அதைத் தப்பாகக் கொண்டு போகிறோம் என்றுதான் அர்த்தம். அதைப் பிரயோஜனப்படுத்திக் கொள்கிறபடிப் பிரயோஜனப்படுத்தாதது நம் தப்புதான். நெருப்பு இருக்கிறது. அதிலே ஆஹாரம் உண்டாக்கிக் கொண்டு சாப்பிடுவதற்காக வீட்டில் உண்டாக்குகிறோம்; ஹவிஸ்களை அர்ப்பணம் செய்வதற்காக மூட்டுகிறோம்; தீபாராதனை பண்ணி பகவானின் மூர்த்தி அழகில் ஈடுபடுவதற்கும் அது பிரயோஜனமாகிறது. நம் ஜாக்ரதைக் குறைவாலோ, புத்திக் குறைவாலோ, துணி மணி நெருப்புப் பிடிக்கவிட்டால் அல்லது நாமே நெருப்பிலே மாட்டிக் கொண்டால், அல்லது கோவிலில் தீ விபத்து உண்டாக்கி விட்டால் தப்பு நெருப்புடையதா என்ன?


*‘ந்ருத்தம்’ என்பதே இப்படிப்பட்ட வெறும் ஆடல் என்றும், ஆடலுடன் பாவ அபிநயமும் சேர்ந்ததே ‘ந்ருத்யம்’ என்றும் மற்றொரு பாகுபாடு தெரியவருகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பொழுது போக்கும் புலன் கட்டுப்பாடும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆழப் பதியும் ஆற்றல்
Next