தேவார, திவ்யப் பிரபந்த மரபுகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதனால்தான் தேவாரகர்த்தாக்களான அப்பர், ஸுந்தரர், ஸம்பந்தர் முதலானவர்களே அவற்றை பண் என்கிற ராகங்களில் அமைத்து ஈஸ்வரார்ப்பணம் செய்திருக்கிறார்கள். இசையே வடிவானவன் என்று ஈஸ்வரனையே பல விதத்தில் ஸங்கீதத்தில் ஈடுபட்டவனாக வர்ணித்துமிருக்கிறார்கள். ஒரு பெரிய ட்ரெடிஷன் வேதங்களை ஸ்வரம் மாறாமல் எத்தனையோ யுகங்களாகக் காத்துக்கொடுத்து வந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டுக்கு ஒரு பெருமையாக இன்னொரு ட்ரெடிஷனில் ஓதுவாமூர்த்திகள் சுமார் 1,400 வருஷங்களாகத் தேவராப் பண்களை மூல ரூபத்தில் காப்பாற்றிக் கொடுத்து வந்திருக்கிறார்கள். பூஜையிலேயே நீராஜனத்துக்குப் பிறகு ஓர் அங்கமாகப் பிரதேச பாஷைப் பாட்டுக்கள் பாட வேண்டுமென்றிருக்கிறது. அந்தப்படிக் கோவில்கள் தோறும் தேவாரம் ஓதும்படியாக சோழ ராஜாக்கள் மான்யம் கொடுத்து இந்த இசை மரபை வளர்த்து விட்டிருக்கிறார்கள்.

திவ்யப் பிரபந்தங்களும் பண்களில் பாடப்பட்டு வந்தவைதாம்; ஆனால் பிற்பாடு இப்போது சொல்கிற மாதிரி ராகமில்லாமல் ஏதோ ஒரு பிராஸத்தில் சொல்வதாக ஆகிவிட்டது என்று சொல்லி ஆராய்ச்சியாளர்கள் சான்றுகள் காட்டுகிறார்கள். வைஷ்ணவ ஆசார்யர்கள், ‘இந்தப் பிரபந்தங்களைத் தமிழ் வேதம் என்று கொண்டாடினால் மட்டும் போதாது; எப்படி வேதமானது முழுக்கப் பாட்டாக இல்லாமல் இரண்டு மூன்று ஸ்வரங்களில் மட்டுமே ஏறி இறங்குகிற மாதிரி ஓதப்படுகின்றனவோ கிட்டத்தட்ட அப்படித்தான் இந்தத் தமிழ் மறையையும் ஓதவேண்டும்’என்றே இப்படி மாற்றி ஏற்பாடு பண்ணியிருப்பார்களோ என்னவோ?

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆழப் பதியும் ஆற்றல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பக்தி உபசாரமாக
Next