அதெப்படியானாலும் பூஜா பத்ததியிலேயே பகவானுக்குச் செய்கிற அறுபத்துநாலு உபசாரங்களில் ந்ருத்த-கீத-வாத்யங்கள் இவற்றை ஸமர்ப்பிக்கச் சொல்லியிருப்பதாலேயே இவையெல்லாம் தெய்விகமானவை என்று தெரிகிறது. வேத ஸ்வரங்களின் அடிப்படையிலேயே ஸங்கீத ஸப்த ஸ்வரங்களை ஏற்படுத்தியிருப்பதும், மந்த்ர சாஸ்த்ரத்திலுள்ள முத்ரைகளையே பரதநாட்டியத்திலும் வைத்திருப்பதுமே போதும், நம்முடைய காந்தர்வக் கலைகளுக்குள்ள உயர்ந்த தெய்விக ஸ்தானத்தைக் காட்டுவதற்கு.
நம் மனஸ் ரொம்பவும் சஞ்சல ஸ்வபாவமுள்ளதாகையால் தெய்வ ஸம்பந்தமான நூல்களை, ஸ்தோத்ரங்களை நாமே படிக்கும்போதும், சொல்லும் போதுங்கூட மனஸ் கொஞ்ச நாழிக்கு அப்புறம் வேறெங்கேயோ ஓட ஆரம்பிக்கிறது. ஆனால் இந்தச் சலன மனஸையும் இழுத்து அதிக நாழி தன்னில் தோய்த்து வைத்துக்கொள்ளும் சக்தி சில்ப, கீதக் கலைகளுக்கு இருக்கிறது. ஒரு அழகான சிற்பம், சித்ரம் என்றால் நீண்ட நாழி அதையே நாம் பார்த்துக் கொண்டிருக்கும்படிப் பண்ணுகிறது. “பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து“, “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்“, “பொன்னார் மேனியனே” போன்ற பக்தி பரவசத்தில் பிறந்த அம்ருதவாக்குகளை நாமாகச் சொல்லும்போது அந்த அம்ருதத்தை அரை நிமிஷம் ஒரு நிமிஷந்தான் ருசி பார்க்க முடிகிறது என்றால் இவற்றையே அததன் பாவத்திற்கேற்க உருக்கமான ரக்தி ராகங்களிலோ, கம்பீரமாயிருக்கிற கன ராகங்களிலோ, இழைத்து இழைத்து, பலுக்கிப் பலுக்கி கானம் செய்தால் கால்மணி அரைமணி கூட ஒரு விருத்தத்தையே விந்யாஸம் செய்தாலும் அவ்வளவு நேரம் மனம் அதிலே தோய்ந்திருந்து தெய்வ ஸ்மரணத்தில் விலகாமலிருக்கிறது. அம்ருதத்திலேயே ஒரு தேவஜாதி மாம்பழத்தை ஊறப்போட்டு விட்டால் எப்படி அதை ரொம்ப நாழி கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்வாதம் பண்ணலாமோ அப்படி அம்ருத வாக்கு ஸங்கீதப் பழத்தில் ஊறும்போது ஆகிறது. அதனால் நாம் தப்பாகப் பிரயோஜனப்படுத்திக் கொள்வதால் கீதமும் நிருத்யமும் சித்த விகாரத்தை உண்டாக்குவதாயிருந்தாலும் வாஸ்தவத்தில் இவை நம்முடைய சலன சித்தத்தை ஈஸ்வரனிடம் நன்றாக நிறுத்தி, அப்புறம் அந்த லயப்பில் ஈச்வரன் என்றுகூட ஒன்று தெரியாமல் சித்தமே ஸமாதியில் நிறுத்தப்படுவதற்கு உபயோகமாகிறது. அலை பாயும் சித்தத்தை நிலை பாவ வைக்கக் கலை உதவுகிறது. அதனால்தான் பூஜையின் உபசாரங்களில் சேர்த்தார்கள்.