பரமேச்வரனையேதான் ஸங்கீதத்துக்கு மூலமாகச் சொல்லியிருக்கிறது. மௌன தக்ஷிணாமூர்த்தி மாதிரியே வீணாதர தக்ஷிணாமூர்த்தி என்று உண்டு;விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். ‘நாததநும் அநிசம் சங்கரம்‘ என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். ‘தநு’ என்றால் சரீரம். இதிலே ஈச்வரனின் ஸத்யோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே ஸப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்*1. ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது. வாஸுதேவாச்சார், (காரைக்குடி) ஸாம்பசிவய்யர், மஹாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுககும் புரியாமல் தானிருந்தது. அப்புறம் ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமும் பஞ்சமும் (‘ஸ’வும் ‘ப’வும்) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும் படிப் பிரமாணங்கள் அகப்பட்டன.
விக்ருதிகளான ரி, க, ம, த, நி-களில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது.
ஷ்டஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவற்றின் முதல் எழுத்துக்களை வைத்தே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. ஏழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். இந்த ‘ஸ’வுக்கு அடுத்த ‘ரி’யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. ‘க’ – ஆடு போடும் சத்தம். ‘ம’-க்ரௌஞ்ச பக்ஷியின் கூவல். ‘ப’-குயிலின் ஒலி. ‘த’ – குதிரைக் கனைப்பு. ‘நி’ -யானையின் பிளிறல்.
சீக்ஷா சாஸ்த்ரத்தில் மூச்சு எந்தெந்த அவயவங்களில் பட்டு வேத அக்ஷரங்கள் உண்டாக வேண்டுமென்று சொல்லியிருப்பது போலவே, ஸங்கீத சாஸ்த்ரங்களில் ஒவ்வொரு ஸ்வரமும் அடி வயிற்றிலிருந்து உச்சந்தலைவரை எப்படியெப்படி ச்வாஸ சலனத்தால் உண்டாக வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. இப்படி ஆறு அவயவங்கள் ஸம்பந்தத்தில் பிறப்பதே ‘ஷட்-ஜம்’. நாபி, ஹ்ருதயம், கண்டம், ரஸனம் (நாக்கு) , நாஸி ஆகிய ஐந்திலே ஸப்த ஸ்வரத்தின் ஸுந்தர தேவதைகள் பிரகாசிப்பதாக தியாகையர் ‘சோபில்லு‘க்ருதியில் சொல்கிறார்.
நாதோபாஸனை என்பது ஒரு பெரிய மந்த்ர சாஸ்த்ர, யோக சாஸ்த்ர ஸாதனை. ஸ்வச்சமான நாதோபாஸனை என்பது ஓம்கார உபாஸனையேயாதலால் இது பரம வேதாந்த ஸாதனையுந்தான். நாதம், பிந்து, கலை என்று மூன்று பெரிய தத்வங்கள், “நாத விந்து கலாதீ நமோ நம” என்று திருப்புகழ் பாடுகிறோம். அந்தப் பெரிய விஷயங்களுக்கு நாம் இப்போது போகவேண்டாம். இதிலே நாதம் சிவ ஸ்வரூபம், பிந்து சக்தி ஸ்வரூபம், சப்தத்துக்கு மூலம் நாதம், ரூபங்களுக்கு மூலம் பிந்து – அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் பிந்து என்ற அளவுக்குத் தெரிந்து கொண்டால் போதும். முடிவில் ரூபங்களும் சப்தங்களிலிருந்து உண்டாகிறவைதான்*2. நாதம், சப்தம் என்கிறவற்றுக்கிடையே வித்யாஸமுண்டு. சப்தம் என்பது வெளியிலே வருகிற ஒலிகள் அவற்றிலே பல உண்டு. நாதம் என்பது எந்த சப்தமானாலும் அதற்கு ஆதாரமாயிருப்பது;அதுவே சப்தம் ஒடுங்கிறபோதும் சேர்கிற ஸ்தானம்.
வியாகரண சாஸ்த்ரத்தில் சப்தத்தையே ப்ரம்மமாக நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு சப்த ப்ரம்மவாதம் என்று பேர். பாஷை இலக்கணத்தைச் சொல்லும்போது இப்படி வையாகரணிகள் (வியாகரண சாஸ்திரக்காரர்கள்) அதை பிரம்ம ஸ்வரூபமாகச் சொல்லியிருப்பதையே இன்னொரு விதத்தில் ஸங்கீத சாஸ்திரக்காரர்களும் ஸ்தாபித்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே நாதப்பிரம்ம உபாஸனை, நாதோபாஸனை என்கிற இடத்திலும் நாதம் என்பது வெறும் ஆதார சப்தம் மட்டுமில்லை. பாடுகிறவன் ஒரு ஸ்வர ஸ்தானத்தை ச்ருதியோடு சுத்தமாக தீர்க்கமாகப் பிடித்து அது பூர்ணமாக ஓங்கி முடிந்து விழுந்து லயிக்கிற இடத்தில் அது ச்ருதியோடு கவ்வி அத்வைதமாகக் கரைந்து, நிறைந்து போகிறதே அதைத்தான் நாதம் என்பது. இந்த இடத்திலே பாடுகிறவனும் அதோடு கரைந்து நிறைந்து விடுவான். அவன் மட்டுமில்லை. கேட்கிற ஸஹ்ருதயர்களானவர்களும் அப்படியே சொக்கித் தன்னை மறந்து அந்த நாதத்தில் ஐக்யமாயிருப்பார்கள். இதிலே பெறுகிற ஆனந்தந்தான் ஆத்மானந்தம், பிரம்மாநந்தம் என்று மத சாஸ்திரங்களின் உச்ச லக்ஷ்யமாய் சொல்லியிருப்பது. நாதம் பிரம்மத்துக்குக் கொண்டுபோகிறது, சப்தம் நாதத்துக்குக் கொண்டுபோகிறதென்றால் இதில் ஒன்றின் தன்மை இன்னொன்றுக்கு இல்லாவிட்டால் எப்படி முடியும்? அதனால்தான் சப்தமே பிரம்மம் என்று சொல்வதாக சாஸ்த்ரம் ஏற்பட்டிருக்கிறது. சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்’. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’. இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் பூர்விகர்கள் சொன்னதை இப்போதுதான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. பதினாயிரம் மைலுக்கு அந்தண்டை பாடுவதை இங்கே நாம் ரேடியோவில் கேட்கிறோமென்பதால், சப்தம் space-ல் எங்கும் வியாபகமாயிருப்பது prove ஆகிறது. இதோ இப்போது நான் பேசுவதை ஒருத்தர் டேப்-ரிக்கார்ட் பண்ணுகிறார்; க்ராமஃபோன் என்று ரிகார்ட் பண்ணுகிறார்கள். எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம் இந்த ரிகார்ட்களைப் போட்டாலும் சப்தங்கள் மாறாமலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன prove ஆகிறது? சப்தம் காலத்தால் நசிக்காமல் நித்யமாய் இருக்கிறது என்று நிரூபணமாய் விடுகிறதோல்லியோ?
பூர்விகர்களின் அதீந்த்ரிய சக்தியும் போய், நவீன ஸயன்ஸும் வராத காலத்திலே, ‘சப்தம் நித்யமானது, பூர்ணமானது’என்றால் “இதென்ன பேத்தல்?நாம் எழுப்புகிற ஒலி இதோடு தீர்ந்துபோனதுதான். இதெப்படி நித்யம்? மிஞ்சினால் அது நூறு, இருநூறு கஜம் போகட்டும். பெரிய இடி இடித்தால்கூட நாலைந்து மைலுக்கு மேல் ஓசை போகிறதில்லை. இதை பூர்ணம் என்றால் எப்படி?” என்றுதான் தோன்றியிருக்கும். இப்போது ஸயன்ஸ் வந்து நம் சாஸ்த்ர அபிப்ராயத்தைக் காப்பாற்றிக் கொடுக்கிறது!
Time- space concept களுக்கு அதீதமாக இப்படி நித்யமாயும் பூர்ணமாயும் இருப்பதுதான் விபுத்வம்.
*1ஸத்யோஜாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வரஸப்தஸ்வர.
*2“தெய்வத்தின் குரல்”இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற கட்டுரையில் “ஒலியும் படைப்பும்” என்ற உட்பிரிவு பார்க்க.