ஜாதி தர்மம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஈச்வரனுக்கு நாட்ய உபசாரம் நடக்க வேண்டுமென்பதில்தான் தேவதாஸிகள் என்று ஏற்பட்டது. ‘தேவ தாஸி’ என்பதற்கு நேர் தமிழ் ‘தேவு அடியாள்’. ஈஸ்வரனின் அடிமை என்று அர்த்தம். அவனையே கல்யாணம் பண்ணிக் கொண்டதாகப் பொட்டு கட்டிக் கொண்டு அவனுக்கு ந்ருத்யோபசாரம் பண்ண வேண்டியவள். நடைமுறையில் இது வேறு எப்படியோ போய்விட்டது. தேவதாஸி தடுப்புச் சட்டம் என்றே ஸமீபத்தில் ஸர்க்கார் செய்ய வேண்டியதாகி விட்டது. தேசத்தின் ஒழுக்கத்தைக் காப்பாற்ற இப்படிச் சில கார்யம் பண்ண வேண்டியிருக்கிறது. ஆனாலும் சாஸ்த்ர பூர்வமாக விதித்த ஒரு உபசாரம் ஸ்வாமிக்கு நடப்பதற்கில்லாமல் ஆகிவிட்டதே என்றும் இருக்கிறது. தேச ஒழுக்கத்தைக் காப்பாற்றவோ வளர்க்கவோ வேறே செய்ய வேண்டியவைகளைச் செய்ததாகவும் காணோம். ‘இழுக்கத்’தைத்தான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தேவதாஸி ஒழிப்பு ஒரு பக்கம் பண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் கலை அபிவிருத்தி என்று குல ஸ்த்ரீகளையெல்லாம் மேடைக்கு ஏற்றி டான்ஸ் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய மநுஷ்யர்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாஸம் மாதிரி பரத நாட்டிய அப்யாஸமும் ஏற்பட்டு விட்டது. ஸ்திரீ ரூபத்திலே ஒரு ஸதஸிலே மேடை ஏறி, ஆடை அலங்காரங்களோடு நவரஸங்களைக் காட்டி ஆடுகிறதென்றால் அதனால் ஸாதாரண மநுஷ்யர்கள் இருக்கிற ஸ்திதியில்……. நான் சொல்ல வேண்டாம். ‘நமக்கு ரூபமிருக்கிறது, ஆடத் தெரிகிறது. ஸபையை வசீகரித்து அப்ளாஸ் வாங்க முடிகிறது என்றால் அப்புறம் ‘ஏன் ஸினிமாவில் சேர்ந்து இன்னம் ஜாஸ்தி புகழ் வாங்கக் கூடாது?’ என்று ஆசை உண்டாகிறது. குல ஸ்திரீகளுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாகிப் பல பேரோடு நடிப்பது, ஜனரஞ்ஜகம் என்பதற்காக இறங்கிக் கொண்டே போவது என்றெல்லாம் ஆகின்றன. கலையை வளர்க்க வேண்டியதுதான். அதற்காக அதைவிட இந்த தேசப் பெருமைக்கு மூச்சாக இருக்கிற ஸ்த்ரீ தர்மத்தைப் பலி கொடுக்க வேண்டியதில்லை. இதையெல்லாம் யோசிக்காமல் ஸமூஹ சீர்திருத்தம், கலை வளர்ச்சி என்று செய்கிற கார்யங்கள் தேவதாஸிகள் என்று ஒரு ஜாதி மட்டும் தனியாயிருப்பானேன் என்று ……. இப்போது எல்லாவற்றையும் ‘டெமாக்ரடைஸ்’ பண்ணிப் பார்ப்பதாகத் தானே இருக்கிறது? இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

எல்லாக் கலைகளையும், தொழில்களையும் ஒழுங்காக வளர்ப்பதற்குத்தான் வர்ண வியவஸ்தை, ஜாதி வியவஸ்தை ஏற்படுத்தப்பட்டது. ஏதாவது ஒரு ஜாதியில் வியவஸ்தை கெட்டிருந்தாலும் அதைச் சீர்படுத்தி அதற்கான தொழிலை அதனிடமே விட்டு வைப்பதுதான் பொது தர்மம் கெடமாலிருப்பதற்கு வழி. ஒரு ஜாதியில் தப்பு இருக்கிறது என்று ஜாதியை எடுத்து விடுகிறோம் என்றால் அந்தத் தப்பு ஸர்வ ஜன வியாபகமாக ஆவதில்தான் முடியும். இந்தக் காலத்தில் எதற்கெடுத்தாலும் ஜாதி போக வேண்டுமென்பதே முழக்கமாயிருந்தாலும், வாஸ்தவத்தில் ஸமூஹத்துக்கு அவசியமான ஒவ்வொரு தொழிலுக்கும் என்றே ஒவ்வொரு ஜாதி என்ற ‘ஏற்பாட்டைப்போல் பொது ஸமுதாய கார்யம் சீராக நடைபெற ஒரு alternative -உம் இல்லை. தப்பு நடந்தாலும் அதுவும் ஒரு சின்ன வரம்புக்குள் localise ஆகிவிடும்; அதை ஸரி செய்து விடலாம். ஜாதியில்லை என்று எடுத்தால், கட்டியிலே பிடிக்கிற சீழ் இருந்த இடத்தோடு நிற்கும்படித் தடுத்து ஆபரேட் பண்ணாமல் அதை தேஹம் பூராவும் ரத்த ஓட்டத்தோடு சேர்த்துவிடப் பண்ணுகிற மாதிரிதான் ஆகிறது.

சாஸ்திரப்படி ஆயுர்வேதத்தை அப்யஸிக்க வேண்டிய வைத்யனுக்கு அம்பஷ்ட ஜாதி என்று பேர். இது எப்படியோ நாவிதனுக்கு ஸம்பந்தப்பட்ட பேராகப் பின்னாளில் வந்திருக்கிறது. இரண்டு தலைமுறைக்கு முன்கூட நாவிதர்கள் கையில் பட்டுப் போட்டு நாடி பார்த்து மருந்து சொல்லியும் வந்தார்கள். இப்படியே காந்தர்வ வேதத்தை அப்யஸிக்க வேண்டியவர்கள் பரத ஜாதியினர், பரத புத்ரர்கள் என்பவர்கள்.

பரத சாஸ்திரம் எழுதின பரத ரிஷியின் பெயரிலே ஏற்படுத்தப்பட்ட ஜாதி. இதிலே எத்தனையோ தர்ம வியவஸ்தைகள். நாடகத்தில் தம்பதிகளாகவோ பரஸ்பரம் பிரேமை கொண்டவர்களாகவோ இரண்டு பாத்திரங்கள் வருகிறார்களென்றால் அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் தம்பதியாகவே இருக்க வேண்டும். எவன் வேண்டுமானாலும் எவளோடு வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற அநியாயம் கிடையாது. நாடகம் ஆரம்பிக்கும்போது அதை அறிமுகம் பண்ணுபவனும், நடத்தி வைப்பவனுமான ஸூத்ரதாரன் வருவான். இவனுக்குப் பெண்டாட்டியாக வருகிற ‘நடீ’யைக் கூப்பிடுவான். நிஜ வாழ்க்கையில் இவனுக்கு ஸம்ஸாரமாயிருப்பவளேதான் உடனே ட்ராமாவிலும் வருவாள். இவனுக்கு அஸிஸ்டென்டாக ‘பாரிபார்ச்வகன்’ என்று ஒருவன் வந்தால், அப்போது ‘பாரிபார்ச்விகா’வாக அவனுடைய பெண்டாட்டியேதான் வருவாள். நடன், நடி என்ற actor, actress இருவரும் வாஸ்தவத்திலேயே ஸதி பதிகளாக இருக்க வேண்டுமென்பது நாடக சாஸ்த்ர ரூல்.

ஒரு நாடகத்தில் ச்ருங்கார ரஸம் பிரதானமாக இருந்தாலுங்கூட அதிலே விகாரத்தை உண்டு பண்ணும் சேஷ்டைகளை ஸ்திரீயும் புருஷனும் மேடைமேல் நடித்துக் காட்டக்கூடாது என்பதே விதி. இம்மாதிரி ஸம்பவங்களை கதாநாயகி ஸகியிடம் சொல்வதாகவோ, ஸகி வேறு யாரிடமோ சொல்வதாகவோ, அல்லது கதாநாயகனின் தோழனான விதூஷகன் சொல்வதாகவோ வருமே ஒழிய, நடித்துக் காட்டுவதாக வராது.

தார்மிகமான இந்த அம்சங்களை எடுத்துக்காட்டி இந்தப்படிதான் இப்போதும் ஸினிமா, ட்ராமாவிலே செய்ய வேண்டுமென்று இளையாற்றங்குடி ஸதஸில் ஒரு தீர்மானம் போட்டோம். ஏதோ என் திருப்திக்குப் போட்டதோடு ஸரி!

புருஷனே பெண் வேஷமும் போட்டால் தப்பில்லை என்று ஐம்பது அறுபது வருஷத்துக்கு முந்தி நினைத்து அநேகமாக அப்படித்தான் ட்ராமா நடந்து வந்தது. பிராம்மண ஜாதியில் பிறந்த பலர் பிரமாதமாகப் பாடி, பேசி ட்ராமாவில் பிராபல்யமாக விளங்கி வந்தார்கள். ஆனால் தர்ம சாஸ்திரத்திலே பெண் வேஷம் போட்ட புருஷன், புருஷன் வேஷம் போட்ட பெண் இரண்டு பேரையும் பார்த்தாலே தோஷம் என்று சொல்லியிருக்கிறது. வாஸ்தவமாகவே ஸதிபதியாயுள்ள ஆணும் பெண்ணும் ட்ராமாவிலே ஜோடியாக வந்தால்தான் அவர்களை ரொம்பவும் ச்ருங்கார சேஷ்டிதமாக நடித்துக் காட்டப் பண்ணுவது பண்புக் குறைவான காரியமென்று கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தோன்றும். ஆணே ஆணோடு நடிக்கிறான், அல்லது பெண்ணே பெண்ணோடு நடிக்கிறாள் என்றால் அவர்கள் தொட்டுக் கொள்ளும்படி விட்டால் கூடத் தப்பு ஒன்றுமில்லையே என்று நினைத்து, அப்படி விடத்தோன்றும். இது அவர்களுக்குத் தப்பில்லையானாலும், பார்க்கிற அத்தனை பேருக்கும் மனோவிகாரமுண்டாகத்தானே செய்யும்? இதனால்தான் ஆணே பெண் வேஷம் போடுவது, அல்லது பெண் ஆணாக நடிப்பது இரண்டுக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்று தர்ம சாஸ்த்ரம் வைத்து விட்டது. அதற்கு ஒரு ஜாதி என்று தொழில்களையெல்லாம் முறைகெட்டுப் போகாதபடி வரம்புக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறது.

இதன்படி பிராம்மணனாகப் பிறந்தவன் உள்பட மற்ற எந்த ஜாதியாரும் பாட்டு, நடனம், நடிப்பு முதலியவற்றைத் தொழிலாக நடத்தப்படாது. தன் ஆத்க்ஷேமத்துக்காக எவன் வேண்டுமானாலும் நாதோபாஸனை, மற்ற கலைகளின் உபாஸனை பண்ணிக் கொள்ளலாம். பக்த ஜனங்களுக்காக நாமகீர்த்தனம் பண்ணலாம். உஞ்சவிருத்தி பஜனை பண்ணலாம். மற்றபடி தொழிலாக வைத்துக்கொண்டு கச்சேரி பண்ணிப் பணம் வாங்குவது கூடாது. இதை ஜீவனோபாயத் தொழிலாகவே பண்ணிப் பணம், பரிசு, பட்டம் எல்லாம் வாங்க அதிகாரமுள்ளவர்கள் பரத ஜாதியினர்தான். நம் சீமையில் மேளக்கார ஜாதி என்று சொல்வார்கள். இப்போது ‘இசை வேளாளர்கள்’ என்ற வார்த்தை பத்திரிகைகளில் அடிபடுகிறது. அந்த ஜாதிப் பெண்டுகள் கோயில்களில் ஆடினாற்போல, புருஷர்கள் தெய்வ ஸந்நிதானத்தில், உத்ஸவ பவனியில் மேளம் வாசிப்பது முக்யமாய் கருதப்பட்டது. ஸதிர் கோஷ்டிக்கே சின்ன மேளம் என்றுதான் பேர். நாயனம், தவில், ஒத்து, ஜால்ரா கொண்ட கோஷ்டி பெரிய மேளம் என்றும், நாட்யம் பண்ணுபவர்கள், நட்டுவனார், பாட்டுப் பாடுகிறவர், பக்க வாத்தியம் வாசிப்பவர்கள் ஆகியோரைக் கொண்ட ஸதிர் கோஷ்டி சின்ன மேளம் என்றும் சொல்லப் பட்டு வந்தன. இப்படிக் குறிப்பாக இரண்டு மேளத்தில் அந்தக் குறிப்பிட்ட ஜாதி அடங்கி விட்டதால்தான் போலிருக்கிறது, பிராம்மணன் வாய்ப்பாட்டு, வாத்யங்கள் முதலிய எல்லாம் கற்றுக்கொண்டு தொழில் செய்தாலும், இது தவிர ராஜாங்கம், கம்பெனி, மிலிடரி என்று ஒரு வேலை பாக்கியில்லாமல் எல்லாவற்றுக்கும் போனாலும் மேளம், நாயனம் மட்டும் வாசிப்பதென்று போகவில்லை போலிருக்கிறது! எனக்கே இவன் எப்படி இது ஒன்றை மட்டும் விட்டு வைத்திருக்கிறான் என்று புரியாமல் தானிருந்தது. இப்போது பேசிக்கொண்டு போகிறபோது தான் இப்படி ஒரு காரணம் இருக்குமோ என்று தோன்றுகிறது.

வாழ்க்கைத் தொழிலாக இன்னார் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தது ஸமூஹத்தில் போட்டா போட்டி இல்லாமலிருப்பதற்காகத்தான். அதனால் ஒன்று தாழ்ந்தது என்று ஆகிவிடாது. வயிற்று ஸம்பந்தமான ‘தொழில்’ என்பதோடு சேர்க்கமால் ஆத்ம ஸம்பந்தமாகப் பார்த்தால் கீத, வாத்ய, நிருத்யங்களுக்கு ரொம்ப உயர்ந்த ஸ்தானமுண்டு.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பக்தி உபசாரமாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  நாத மஹிமை
Next