இதில் ஸித்தியடைந்தவர்கள் காந்தர்வ வித்யை குறித்து அநேக சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள்; அநேகம் ஸாஹித்யங்களையும் மற்றவர்கள் பாடுவதற்குத் தந்திருக்கிறார்கள். பரத ரிஷியை முக்யமாகச் சொன்னாலும் வேறு அநேக ரிஷிகள், தெய்விக புருஷர்களும் இவர்களில் இருக்கிறார்கள். நாரதர், அகஸ்த்யர், மதங்கர், ஆஞ்சநேயர், நந்திகேச்வரர் போன்றவர்களை ஸங்கீத உபாஸகர்களாகவும், சாஸ்த்ரகாரகர்களாகவும் சொல்லியிருக்கிறது. ‘ஹநும தோடி’ என்றே தோடி ராகத்துக்குப் பெயர். (கல்யாணி, சங்கராபரணம், பைரவி, ஷண்முகப்ரியா, ராமப்ரியா. கரஹரப்ரியா* என்றே தெய்வ ஸம்பந்தமாக அநேக ராகப் பெயர்கள் இருக்கின்றன.) நமக்குக் கிடைத்திருக்கிற சுவடிகளிலிருந்து சார்ங்க தேவர், ஸோமதேவர், ராமாமாத்யர், மந்திரியாகவும் அத்வைத சாஸ்த்ரத்தில் கரைகண்டவராகவுமிருந்த கோவிந்த தீக்ஷிதர், அவருடைய புத்ரரான வேங்கடமகி முதலியவர்கள் சங்கீத சாஸ்த்ரத்துக்கு லக்ஷணங்கள், விவரணங்கள் கொடுத்து உபகரித்திருப்பது தெரிகிறது. மஹேந்த்ர வர்மா, ரகுநாத நாயக் போன்ற ராஜாக்களும் இப்படி உபகரித்திருக்கிறார்கள். குடுமியா மலையில் (புதுக்கோட்டைக்குப் பக்கம்) சங்கீத சாஸ்த்ரம் பற்றி மஹேந்த்ர பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு இருக்கிறது. தற்போது நடைமுறையிலுள்ள வீணைக்கு ‘ரகுநாத வீணை’ என்று நாயக் ராஜாவை வைத்துத்தான் பெயர் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பல பேர் சங்கீதத்தில் நிறைந்த ஞானம், அநுபவம் பெற்றவர்கள்.
பூர்வத்தில் தேசம் பூராவுக்கும் ஒரே ஸங்கீத முறைதான் இருந்ததென்றும், முகாலய ஆட்சியில் வடக்கே எல்லாத் துறைகளிலும் foreign influences (விதேச அளாவல்கள்) அதிகமானபின் அங்கே ஹிந்துஸ்தானி ஸங்கீதமென்றும், தக்ஷிணத்தில் கர்நாடக ஸங்கீதமென்றும் பிரிந்ததாகவும் தெரிகிறது.
மெட்டமைத்து ஸாஹித்யம் செய்திருப்பவர்களில் சரித்ர காலத்திலே எண்ணூறு வருஷத்துக்குமுன் ‘கீத கோவிந்தம்’ இயற்றிய ஜயதேவரை முதலாவதாகச் சொல்கிறார்கள். அப்புறம் முக்யமாகச் சொல்வது புரந்தரதாஸ். ‘கர்நாடக’ சங்கீதம் என்றே அவரால்தான் பெயர் உண்டானதாக ஒரு அபிப்ராயம். இவர்கள் இருவரும் க்ருஷ்ண பரமாத்மாவைப் பாடியவர்கள். நாராயண தீர்த்தரும் ‘க்ருஷ்ண லீலா தரங்கிணி’ என்றே பாடியிருக்கிறார். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் தமிழில் பண்ணியுள்ள ‘க்ருஷ்ண கானம்’ இப்போது பிரபலமாகி வருகிறது. பத்ராசல ராமதாஸ் முழுக்க ராமபரமாகவே கீர்த்தனைகள் செய்திருக்கிறார். நம் சங்கீதத்துக்கே முக்ய புருஷர்களாக ‘த்ரிமூர்த்திகள்’ எனப்படுகிறவர்களில் தியாகையரும் விசேஷமாக ராமார்ப்பணமாகவே பாடியிருக்கிறார். சிவன், அம்பாள் முதலானவர்கள் மீதும் சிற்சில க்ருதிகள் செய்திருக்கிறார். முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஐயனார், மாரியம்மனிலிருந்து ஆரம்பித்து ஒரு ஸ்வாமி விடாமல் அத்தனை தெய்வங்களையும் பாடியிருக்கிறார். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் ஒருத்தியையே பாடியிருக்கிறார். கோபாலக்ருஷ்ண பாரதியாரும், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை முதலியவர்களும் சிவனையே, அதிலும் முக்யமாக நடராஜாவையே பாடினவர்கள். அருணாசலக் கவிராயர் ‘ராம நாடகம்’ என்று செய்திருக்கிறார். கிறிஸ்துவரான மாயவரம் வேதநாயகம் பிள்ளை ஸர்வமத ஸமரஸமாக ஏக பரமாத்மாவைக் குறிப்பிடும்படியான வேதாந்தப் பாடல்கள் பாடி வைத்திருக்கிறார். நம் காலத்திலும் பாண்டித்யம், பக்தி உள்ள ஸாஹித்யகர்த்தாக்கள் இல்லாமலில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை யாராயிருந்தாலும் தெய்வத்தைக் குறித்துத்தான் பாடல் இயற்றுவதென்றும், ‘ஸெக்யூலர் தீம்’ என்னும் லௌகிக விஷயமாக இயற்றுவதில்லையென்றும் இந்திய மரபு வளர்ந்து வந்திருக்கிறது.
*கரஹரன்: கரன் என்ற அரக்கனை வதைத்த ஸ்ரீராமன்.