நாட்டுப் பாடல்கள் என்று என்று ஒரு பிரிவு. இப்படியே நாட்டு மக்களுக்கென்று கூத்தும், பலவிதமான நடனங்களும் இருக்கின்றன – கரகம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை. எதுவானாலும் ஈஸ்வர சம்பந்தம் எப்படியாவது வந்து சேர்ந்துவிடும். தெம்மாங்கு, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து முதலானவை நாட்டுப் பாடல் வகைகள். உழுகிறவன், ஏற்றம் இறைக்கிறவன், படகு ஓட்டுகிறவன், பாரம் இழுக்கிறவன், தயிர் சிலுப்புகிறவள், நெல்லு குத்துகிறவள் எல்லாருமே பாடிக்கொண்டே தொழில் பண்ணுகிறார்கள், வேலையின் பளு நெரிக்காமல் வேலையை மனசுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தருகிற மருந்தாகப் பாட்டு இருக்கிறது. பல பேர் பாடி ஆடிக்கொண்டு வேலை செய்கிறபோது ஜாஸ்தி வேலையும் நடக்கிறது. இந்தப் பாட்டுகளிலும் கொஞ்சமாவது தெய்வ ஸம்பந்தம் தொட்டுக் கொள்ளாமலிராது.
மனசுக்கு உத்ஸாஹத்தைக் கொடுத்து அதனாலேயே சிரமமான சரீர உழைப்பையும் சுலபமாக்கித் தருகிற ஆற்றல் இசைக்கு இருப்பது போலவே, எந்த உணர்ச்சியானாலும் அதை நன்றாக கிளறிவிட்டு நம் மனஸை விட்டுக் கொட்டும்படிப் பண்ணி, இதனால் அப்புறம் சாந்தியை உண்டாக்கும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. சாந்தம் தரும் சக்திக்குத் தாலாட்டை த்ருஷ்டாந்தம் காட்டினால் போதும். எத்தனை துஷ்டத்தனம் பண்ணுகிற குழந்தையானாலும் காலில் போட்டுக் கொண்டோ தூளியில் போட்டோ தாலாட்ட ஆரம்பித்து விட்டால் அப்படியே மயங்கித் தூங்கிப் போய் விடுகிறது. ஸர்ப்பம்கூட ஸங்கீதத்தில் கட்டுப்பட்டு லயித்து நின்று விடுகிறது. ஆரம்பத்தில் தாலாட்டிலிருந்து அந்திமத்தில் பிலாக்கணம் வரையில் பலவிதமான பாட்டுக்கள். அநேகமாக இதெல்லாம் ஸ்திரீகளின் சொத்தாகவே இருக்கிறது. பாட்டிலேயே புராணக் கதைகளைச் சொல்லித்தான் தாயார்க்காரி குழந்தைகளை நல்வழியில் கொண்டுபோவது முன் கால வழக்கம். குழந்தை எழுந்திருக்கிறதற்கு முந்தியே அம்மாக்காரி ‘ஷிஃப்டு’க்குப் போய் விடுவதுதான் புது நாடகம்! கல்யாணம் கார்த்திகை என்றால் ஊஞ்சல் நலங்கு என்று பாட்டுக்கள். மங்கள காரியம் எதுவானாலும் மேளம் நாயனமில்லாமல் இல்லை. அதற்கு மங்கள வாத்யம் என்றே பேர் ஏற்பட்டிருக்கிறது. யுத்தத்துக்கும் ரணபேரி, துந்துபி, ‘மார்ச்’ பண்ணுவதற்கென்று பாட்டுக்கள். National Song, தேசிய கீதம் என்று ரொம்பவும் மரியாதை கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்வதந்த்ரப் போராட்டத்தில் ஜனங்களுக்கு ஸ்வதேச உணர்ச்சி மூட்டுவதற்கே தேசிய கவிகள் என்கிறவர்களின் பாட்டுக்களைத்தான் முக்யமாகப் பாடிப் பிரசாரம் பண்ணினார்கள். சந்தோஷம், துக்கம், வீரம் என்று எந்த உணர்ச்சியானாலும் பாட்டில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் முடிவாக சாந்தத்தில் சேர்க்கவே ஸங்கீதம். பரம ஸெளக்யத்தை ஸங்கீதத்தின் மூலம் அடைவதற்கே வழிகாட்டிய தியாகையர்வாள் ‘சாந்தமுலேக ஸெளக்யமு லேது’என்று பாடினதால் சாந்தம்தான் சங்கீதத்தின் நிறைவான குறிக்கோள் என்று தெரிகிறது. ஈஸ்வர ஸ்மரணம்தான் அப்படிப்பட்ட நித்யமான சாந்தத்தைக் கொடுக்க வல்லதாகையால் சங்கீதம் பரமாத்மாவை மையமாகக் கொண்டதாகவே நம்முடைய உயர்ந்த சம்பிரதாயத்தில் நெடுங்காலமாக வந்திருக்கிறது.