அந்நியக் கொள்கைகள் ஆறு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அந்நிய ராஜ்யங்களிடம் ஒரு ராஜா கடைப்பிடிக்க வேண்டிய ஆறு கொள்கைகளை ‘ஷாட்குண்யம்’ என்று அர்த்த சாஸ்திரங்கள் வகுத்துக் கொடுத்திருக்கின்றன. ஸந்தி, விக்ரஹம், யானம், ஸ்தானம் (அல்லது ஆஸனம்) , ஸம்ச்ரயம், த்வைதீபாவம் என்பனவே இந்த ஷட்குணங்கள். ‘ஸந்தி’ என்பது ஸ்நேஹ உடன்படிக்கை, ஸமாதான உடன்படிக்கை செய்துகொண்டு ஒற்றுமையாயிருப்பது. ஸந்தி செய்துகொண்டுள்ள ராஜ்யங்களைத் தற்காலத்தில் allies (நேச நாடுகள்) என்கிறோம். ‘விக்ரஹம்’ என்பது விரோத நாடாகவே கருதி யுத்தம் செய்வது. ‘ஸ்தானம்’ அல்லது ‘ஆஸனம்’ என்பது இந்தக் காலத்தில் சொல்கிற neutrality (நடுநிலைமை) , non-alignment (கூட்டுச்சேராமை) என்று சொல்லலாம். ‘யானம்’ என்பது Cold-war மாதிரி – அதாவது, ஆக்சுவலாக யுத்தப் முஸ்தீபுகள் மட்டும் பண்ணிக் காண்பித்துக் கொண்டிருப்பது, ‘ஸம்ச்ரயம்’ என்பது நம்மைவிட பவிஷ்டனான இன்னொரு ராஜாவிடம் ஸ்நேஹ பாவத்துடன் போய், அவனை ரக்ஷையாகக் கொண்டு வேறொரு சத்ரு ராஜாவை எதிர்ப்பது. First World War-ல் இப்படித்தான் ஆஸ்ட்ரியா ஜெர்மனியையும், வேறேதோ ஒரு சின்ன தேசம்* ரஷ்யாவையும் ஸம்ச்ரயமாக அடைய அந்த இரண்டு சிறிய ராஜ்யங்களின் சண்டை பெரிய உலக யுத்தமாகவே ரூபமெடுத்து விட்டது. ‘த்வைதீபாவம்‘ என்பது ஒரு ராஜ்யத்தோடு யுத்தம் போடுவதற்காகவே, அதற்குப் பக்கத்திலுள்ள ராஜ்யம் அதோடு சேர்ந்துவிடாமல், முன்கூட்டி அதைத் தனக்கே ஸ்நேஹிதமாக ஆக்கிக் கொண்டு ஸமாதான உடன்படிக்கை செய்து கொள்வது. ஸ்நேஹத்துக்காக ஸ்நேஹமில்லாமல் காரிய்துக்காக ஸ்நேஹம். டிப்ளமஸி (ராஜதந்த்ரம்) என்பது டூப்ளிஸிடியாகவே (இரண்டு விதமான ஸ்டான்டர்டுகளில் ஏமாற்றுதலாகச் செய்வதாகவே) ஆகிவிடுவதற்குத்தான் ‘த்வைதீபாவம்‘ என்று பெயர் கொடுத்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். முன்னேயே சொன்னாற்போல டூப்ளிஸிடி என்பது தர்ம சாஸ்திரத்துக்கு ஸம்மதமில்லாமல் அர்த்த சாஸ்திரம் மட்டுமே சற்று அநுமதித்துள்ள விஷயந்தான். அதனால் இதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டியதில்லை.


*ஸெர்பியா

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தோற்ற ராஜ்யத்திடம் உதாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அரசாங்கத்தின் அங்கங்கள்
Next