அரசாங்கத்தின் அங்கங்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘ஷாட்குண்யம்’ என்று ‘ஃபாரின் பாலிஸி’யின் ஆறு அம்சங்களைச் சொல்கிறபோது இதெல்லாவற்றுக்கும் அடிப்படையான ராஜ்யம் என்பதற்கே உள்ள ‘ஸப்தாங்கம் (அல்லது ‘ஸ்ப்த ப்ரக்ருதி’) என்கிற ஏழு அம்சங்களைப் பற்றி நினைவு வருகிறது. ஸ்வாமி, அமாத்ய, ஸுஹ்ருத், கோச, ராஷ்ட்ர, துர்க, பல – என்பவையே இந்த ஏழு. ‘ஸ்வாமி’ என்றால் ராஜா. உடைமையாளன் என்பதுதான் ஸ்வாமி என்பதற்கு நேர் அர்த்தம். ராஜ்யத்தை தனதாக உடையவனாதலால் ராஜா ஸ்வாமி எனப்படுகிறான். ‘அமாத்யா’ என்றால் மந்திரி. ‘ஸுஹ்ருத்’ என்றால் நண்பர்; அதாவது நேச நாடுகள். ‘கோச’ என்பது கஜானா; பொன், மணி மட்டுமின்றி தேசத்தின் விளைச்சலையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ‘ராஷ்ட்ரம்’ என்பதுதான் நாடு – அதாவது குடிகள். ‘துர்க’ என்றால் கோட்டை. ‘பல’ என்பது ராணுவம்.

திருவள்ளுவர் இதில் ஸ்வாமி எனப்படும் ராஜாவை மத்தியில் வைத்து, அவனுக்கு இருக்க வேண்டிய ஆறு அங்கங்களாகப் பாக்கி ஆறையும் ‘பொருட்பால்’ முதல் குறளிலேயே சொல்லியிருக்கிறார்.

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

‘உடையான்’ என்பதுதான் உடைமையாளனான ஸ்வாமி. ஸரியாக இப்படிப் பதப் பிரயோகம் செய்திருக்கிறார். ‘படை’ என்பது பலம் என்கிற ஸைன்யம். ‘படை பலம்’ என்று சேர்த்தே சொல்கிறோம். ‘குடி’ என்பதே ‘ராஷ்ட்ரம்’ என்னும் மக்கள். ‘கூழ்’ என்பது விளை பொருள் அதாவது கோசம். ‘அமைச்சு’தான் அமாத்யர். ‘நட்பு’ என்பது ஸுஹ்ருத். ‘அரண்’தான் துர்கம். பாரத நாகரிகமாக தர்ம அர்த்த சாஸ்த்ரங்களில் சொல்லியிருப்பதைத்தான் தமிழ் மறை தந்தவரும் அக்ஷரத்துக்கு அக்ஷரம் எதிரொலித்துச் சொல்லியிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அந்நியக் கொள்கைகள் ஆறு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஸாரம் இதுவே
Next