ஸாரம் இதுவே : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அர்த்த சாஸ்திரத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால் அது மேலெழப் பார்க்கிறபோது ‘அர்த்தந்தான் எல்லாவற்றுக்கும் மேலே’என்று சொல்வதாகத் தோன்றினாலும் ஆழப் போகும் போது தர்மத்தை மீறி அர்த்தத்துக்குப் போகப்படாது என்று சொல்வதாகவே தெரியும்.

எடுத்துக்கொண்ட விஷயத்துக்குக் கூடுதலாகவே சிறப்புத் தருவது என்ற வழக்கத்தில்தான் அர்த்தத்தை அர்த்த சாஸ்த்ரத்தில் விசேஷிப்பது. ராஜாவின் போஷணையில்லாவிட்டால், தர்மிஷ்டர்களையும் ஞானிகளையும் துஷ்டர்களிடமிருந்து அவன் ரக்ஷிக்காவிட்டால் ஒரு தேசத்தில் தர்மம் ஏது, ஞானம் ஏது? இதைக் காட்டியே, ‘பொதுவாக நாலு புருஷார்த்தங்களில் அர்த்தமானது காமத்துக்கு மட்டுமே அநுகூலம் என்று நினைக்கப்பட்டாலும், அதுதான் மற்ற இரண்டான தர்மம், மோக்ஷம் இவற்றுக்கும் ஆதாரம்’ என்று சாணக்யன் கூறுகிறார். மஹாபாரதத்தில் கூட க்ருஹஸ்தன் பிக்ஷை போட்டுத்தான் ப்ரம்மசாரியும், ஸந்நியாஸியும் வாழவேண்டியிருப்பதால் நாலு ஆச்ரமங்களில் க்ருஹஸ்தாச்ரமந்தான் பிரதானம் என்று இருக்கிறது. ஆனால் இப்படிச் சொன்னதாலேயே பிரம்மசர்யமும் ஸந்நியாஸமும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று அது அபிப்ராயப்படுவது போல், சாணக்யனும் தர்மம், மோக்ஷம் என்ற புருஷார்த்தங்களை வேண்டுபவரே என்று தெரிகிறது.

அர்த்த சாஸ்த்ரத்தைச் சார்ந்துதான் மற்ற மூன்று புருஷார்த்தங்களும் நிற்க முடிகிறது என்பதைப் போலவே இன்னொன்றும் சொல்லலாம். வேத ரக்ஷணத்திலிருந்து ஆரம்பித்து எல்லா வித்யைகளையும், அவற்றை அப்யஸிப்பவர்களையும் போதிக்கிறவர்களையும் ராஜாங்கம்தான் ரக்ஷித்து வளர்த்துத் தந்ததால் நம் ஸநாதன ஸமயத்தின் ஆதாரமான பதிநாலு தர்மப் பிராமணங்களுக்கும் அர்த்த சாஸ்திரம்தான் கவசம் என்றாகிறது.

பதினெட்டு வித்யா ஸ்தானங்கள் என்கிறபோது, நாலு உபவேதங்களில் இதைத் தவிர உள்ள ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் ஆகியவற்றுக்கும் ராஜாங்க ஆதரவு அவசியமென்பது மட்டுமின்றி ராஜாவோடேயே இந்த மூன்றுக்கும் நெருங்கின ஸம்பந்தமிருக்கிறது. யுத்தத்திலே அம்படி, விஷக் காயங்கள் முதலியன ஏற்படுமாதலால் இவற்றை குணப்படுத்துவதற்காக ராஜாவுக்கு ஆயுர்வேத ஞானம் இருக்க வேண்டும். மூலிகை வைத்யம், ஸர்ஜரி ஆகியன ராஜாவுக்குத் தெரிய வேண்டும். உள்ளே போய் உடைந்துபோன ஆயுத முனைகளை எடுப்பதற்கென்றே ‘சல்ய சாஸ்த்ரம்’ என்று ஆயுர்வேதத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. தநுர்வேதம் அவனுக்காகவேதான் முக்யமாய் ஏற்பட்டது. Parton of Arts -ஆக (கலைகளின் போஷனாக) இருக்க வேண்டியதும் ராஜாவின் கடமை. இதனால் காந்தர்வ வித்யையில் அவனுக்கு ஸம்பந்தம் வந்து விடுகிறது. போஜன், விக்ரமாதித்யன், மஹேந்திரவர்ம பல்லவன், கிருஷ்ணதேவராயர், ஸமீப காலத்துச் சின்ன ஸம்ஸ்தானாதிபதிகளான எட்டையபுரம் ராஜா போன்றவர்கள் உள்பட எல்லா ராஜாக்களும் கவிகளையும், சில்பிகளையும் ஸங்கீத-நாட்ய வித்வான்கள் விதுஷிகளையும் நிரம்ப ஆதரித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தாங்களும்கூட அவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்கள்.

அர்ஜுனன் விராட தேசத்தில் ந்ருத்யாசாரியனாக இருந்திருக்கிறான். உதயனன் வீணை வாசித்து மதயானையை அடக்கியிருக்கிறான். இதிஹாஸ, புராண, காவ்யங்களில் இப்படி எத்தனையோ! ராமருடைய கல்யாண குணங்களை (அயோத்யா காண்ட ஆரம்பத்தில்) விவரித்துக்கொண்டே வரும்போது, ஸங்கீதம் முதலான காந்தர்வ வித்யைகளில் அவர் லோகத்திலேயே முதல்வராக நிற்கிறவர் என்று சொல்லியிருக்கிறது: காந்தர்வே ச புவி ச்ரேஷ்ட:.

சரித்ர காலத்துக்கு வந்தாலும் மஹேந்திரவர்மா ‘சித்திரக்காரப் புலி’ என்றே ஒரு பட்டப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறான். ‘மத்த விலாஸ ப்ரஹஸனம்’ என்று அவன் ஹாஸ்ய நாடகமும் எழுதியிருக்கிறான். குடுமியாமலையில் ஸங்கீதத்தைப் பற்றிய சாஸ்த்ரத்தைக் கல்வெட்டில் பொறித்திருக்கிறான். ராஜ ராஜ சோழன் ‘ராஜவித்யாதரன்’ என்று ஒரு பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான். (வித்யாதரர்களும் காந்தர்வ ஜாதி போலத்தான்.) தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து முதலியன நடக்கச் செய்திருக்கிறான். ஸமீப நூற்றாண்டுகளில் காந்தர்வ வித்யை தஞ்சாவூர் சீமையில் பெரிய மறுமலர்ச்சி பெற்றதற்குக் காரணமே நாயக் ராஜாக்களும் சரபோஜி முதலான மஹாராஷ்டிர ராஜாக்களும் கொடுத்த ஆதரவுதான்.

ராஜாவானவன் ஸகல சாஸ்த்ர பாராங்கதனாக (பாராங்கதன் என்பதற்குக் ‘கரை கடந்தவன்’ என்று நேர் அர்த்தம்) இருக்கவேண்டுமென்பதில் அவன் காந்தர்வக் கலைகளை நன்றாக அப்யஸித்து, ஆதரித்து வளர்க்க வேண்டுமென்றும் ஏற்பட்டிருந்தது.

அம்பாளும் ஈச்வரனும் ஜீவனின் உள்ளே இருக்கும் ஆறு சக்ரங்களில் ஒன்றில் இரட்டை ஹம்ஸங்களாக உள்ளபோது அந்த ஹம்ஸங்கள் ஸம்பாஷிப்பதிலிருந்துதான் பதினெட்டு வித்யா ஸ்தானங்களும் உண்டாயின என்று ஆசார்யாள் “ஸெளந்தர்ய லஹரி”யில் சொல்கிறார்: யதாலாபாத் அஷ்டாதச குணித வித்யா பரிணதி:* – இது அத்தனையிலும் வல்லவனாக அரசன் இருக்க வேண்டும்.

இப்படியாக அநேக சாஸ்திரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியவனாகவும் அத்தனை சாஸ்திரங்களையும் ரக்ஷித்துத் தர வேண்டியவனாகவும் இருக்கிற அரசனை முக்யமாக உருவாக்குவது அர்த்த சாஸ்திரம்தான் என்பது அதற்குப் பெருமை.

அஸுர குரு சுக்ரர் மட்டுமின்றி தேவகுரு ப்ருஹஸ்பதியும் ஆட்சிமுறை பற்றி சாஸ்த்ரம் செய்திருக்கிறார். நாலு புருஷார்த்தங்களையும் பற்றி பிரம்மாவின் பேரிலேயே உள்ள ரொம்பப் பெரிய நூலில் ராஜநீதியை மட்டும் விசாலாக்ஷர் “வைசாலாக்ஷம்” என்று சுருக்கி, அப்புறம் இதை ப்ருஹஸ்பதி மேலும் சின்னதாக்கினார் என்று தெரிகிறது. ஸ்ம்ருதிகளில் வரும் ராஜநீதியை மேதாதிதி (மநுஸ்ம்ருதிக்கு விளக்கம் எழுதியவர்) , விஜ்ஞானேச்வரர் (‘மிதாக்ஷரி’ எழுதியவர்) ஆகியவர்கள் மேலும் தெளிவு செய்து இன்றைக்கும் ‘லா’வில் மதிக்கப்படுவதாகச் செய்திருக்கிறார்கள்.

முதலில் சொன்னதை மறந்துவிடக் கூடாது. இந்த அர்த்த சாஸ்திரம் தர்ம சாஸ்திரத்துக்கு ஏற்கத்தக்கதாக உள்ளபோதுதான் அதற்குப் பிராமாண்யம் (அதாவது ‘அதாரிடி’) உண்டு. இதை சாணக்யன் வாயாலேயே கேட்கிறோம். “எங்கேயாவது தர்ம சாஸ்திரத்துக்கும் நடைமுறை வழக்குகளுக்கும் வியவஹாரங்களுக்கும் இடையிலே வேறுபாடு இருந்தால் அரசனானவன் தர்மத்தின் ஆதாரத்தைக் கொண்டே அதன்படி முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் சொல்கிறார். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – தர்மத்தை ரக்ஷித்தால், அது அப்படி ரக்ஷிக்கிறவனை ரக்ஷிக்கும். ராஜா தர்மத்தைத் தான் பரிபாலித்து, தர்மத்தினால் தன்னைப் பரிபாலித்துக் கொள்ள வேண்டும் என்பதே முடிவாக அரசனுக்கு ஏற்பட்ட விதி.


*ச்லோகம் 38

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அரசாங்கத்தின் அங்கங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வார்த்தை விளையாட்டு
Next