மாலை மாற்றம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘விகடகவி’, ‘குடகு’ முதலிய வார்த்தைகளை திருப்பிப் படித்தாலும், ‘விகடகவி’, ‘குடகு’ என்றே இருக்கும். ‘மலையாளம்’ என்பதை இங்கிலீஷில் Malayalam என்று எழுதினால் திருப்பிப் படித்தாலும் அதே ஸ்பெல்லிங் வரும். இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.

காசியாத்திரை ஹிந்துவாகப் பிறந்தவர்களுக்கு முக்யமாக விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கயா ச்ராத்தம், த்ரிவேணி என்கிற ப்ரயாகையில் ஸ்நானம், பித்ரு கார்யம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. இதையும் பாலின்ட்ரோமாகச் சொல்வதுண்டு. காசிக்கு காசிகா என்றும் பெயர். இது பின்னிருந்து முன்னாகவும் ‘காசிகா’ தான். ‘கயா ப்ரயாக’ என்பதும் இப்படியே*1.

இப்படி ஒரு வார்த்தையைத் தலைகீழாகப் படிப்பதைப் பெரிய விளையாட்டாகப் பண்ணி காவ்ய ரஸத்தைப் பற்றியே ரஸமாக ஒரு ஸ்லோகம் இருப்பதாக ஒரு பண்டிதர் சொன்னார். ‘ஸாக்ஷரா’ என்றால் வெறுமே படிப்பறிவு மட்டுமுள்ளவர்கள் என்று அர்த்தம். அதாவது வறட்டு வறட்டு என்று நிறையப் படித்திருப்பார்கள். இலக்கியச் சுவையில் ஊறியிருக்க மாட்டார்கள். ‘ஸரஸ’ என்றால் இலக்கியச் சுவையில், காவ்ய ரஸத்தில் ஊறியவன் என்று அர்த்தம். ரஸம் அறிகிற பக்வ மனஸ் இல்லாமலிருக்கிறவன் அந்தப் படிப்பு நெறியிலிருந்து மாறினால் குணம்கெட்ட ராக்ஷஸனாகி விடுவான்; ஆனால் ரஸிகனோ எப்படி வெளியிலே மாறினாலும் அவனுடைய உயர்ந்த ரஸிகத்தன்மை போகவே போகாது என்பது அந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்

ஸாக்ஷரா, ஸரஸ என்ற வார்த்தைகளைத் திருப்பிப் போட்டே இந்த தாத்பர்யத்தை ஸ்லோகம் நிலைநாட்டிவிடுகிறது. ‘ஸாக்ஷரா’வைத் திருப்பிப் படித்தால் ‘ராக்ஷஸா’! ‘ஸரஸ’வோ திருப்பிப் படித்தாலும் ‘ஸரஸ’வேதானே?

இப்படி இரண்டு பக்கமாகப் படித்தாலும் ஒரே போல வருவதை “கத ப்ரத்யாகதம்” என்கிறார்கள். மாகன் என்ற மஹாகவி ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தையாயில்லாமல் ஒரு பெரிய வாக்யமே இப்படிச் செய்திருக்கிறான். மஹாலக்ஷ்மி பகவானைப் பரம அன்போடு ஆலிங்கனம் செய்து கொள்வதைத் தெரிவிக்கும்படியான வாக்யம்: தம் ச்ரியா கநயாநஸ்தருசா ஸாரதயாதயா யாதயா தரஸா சாரு ஸ்தநயாநகயா ச்ரிதம் *2 (‘சிசுபாலவதம்’ -19.88).

திருஞானஸம்பந்தர் ஸாக்ஷாத் பரதேவதையின் க்ஷீரத்தைப் பானம் பண்ணியதால் குழந்தையாக இருந்து கொண்டே எத்தனை விதமான செய்யுள் வகை உண்டோ அத்தனையிலும் வர்ஷிக்கிறாற்போலக் கொட்டினவர். பாலின்ட்ரோமாகவே முழுச் செய்யுள் செய்வதற்கு ‘மாலை மாற்று’ என்று பேர். மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞான ஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார்.

படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். முதல் அடி இப்படி இருக்கிறது.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

கடைசியிலிருந்து திருப்பிப் படியுங்கள்; அதுவே வரும்.

ஏதோ துளி அர்த்தம் பண்ணிப் பார்க்கலாம். முதலில் பதங்களைப் புரிகிறபடி பிரித்துக்கொள்ளலாம்.

யாம் ஆமா? நீ ஆம் ஆம். மாயாழீ! காமா! காண்நாகா!

காணாகாமா! காழீயா! மாமாயா! நீ மாமாயா!

‘யாம் ஆமா?’ என்றால் அற்ப மநுஷ்யர்களான எங்களால் எது பண்ணவும் முடியுமா என்று அர்த்தம். ‘நீ ஆம், ஆம்’ என்றால் மஹாசக்தனான நீ எதுவும் பண்ண முடியும், நிச்சயமாய் முடியும் என்று அர்த்தம். ‘மாயாழீ’ என்று பரமேச்வரனைக் கூப்பிடுகிறார். பெரிய யாழைக் கையிலே வைத்து வீணாதர தக்ஷிணாமூர்த்தியாக ஈச்வரன் மீட்டிக்கொண்டிருப்பதால் ‘மாயாழீ’ என்கிறார். அப்பரும் ‘எம் இறை நல்வீணை வாசிக்கும்மே’ என்று சொல்லியிருக்கிறார். ‘காமா’ என்பது ‘பேரழகனே’ என்று கூப்பிடுவது. ‘காணாகா’ அதாவது ‘காண்நாகா’ என்றால், ‘காணும்படியாக நாகாபரணம் போட்டுக்கொண்டிருப்பவனே’ என்று அர்த்தம். ‘காணாகாமா’ என்றால் ‘காமனைக் கண் காணமுடியாதபடி எரித்துவிட்டவனே! ‘காழீயா’ அதாவது ‘சீர்காழியில் கோயில் கொண்டிருப்பவனே!’- அதுதான் ஸம்பந்தமூர்த்திகள் அவதாரம் பண்ணின ஸ்தலம். ‘மாமாயா’ என்றால் ‘மஹாலக்ஷ்மீபதியான மாயா ஸ்வரூபமான விஷ்ணுவே’ என்று அர்த்தம். தெய்வக் குழந்தையின் வாயாலேயே இங்கே சிவ-விஷ்ணு அபேதம் வருகிறது. அப்பர் ஸ்வாமிகளின் திருத்தாண்டகத்திலும் சிவபெருமானையே த்ரிமூர்த்தி ஸ்வரூபமாக “நாரணன் காண் நான்முகன் காண்” என்று வர்ணித்திருக்கிறது. கடைசியில் ‘நீ மாமாயா’ என்று முடிகிறதே. இங்கே நீ என்றால் ‘you’ இல்லை. ‘நீ’ என்றால் ‘நீக்கு’ என்று அர்த்தம். எதை? ‘மாமாயா’- ‘மா’ என்றால் ‘பெரிய’; ‘கனாந்த காரமான’ என்றும் சொல்கிறார்கள். “ஒரே இருட்டாயுள்ள மாயையை நீக்கு” என்று பிரார்த்திக்கிறார்.


*1தேவநாகரி, க்ரந்த லிபி ஆகிய வடமொழிக்கான எழுத்துக்களில் ‘ப்ர’ என்பது ஒரே எழுத்தாதலால் இப்படி வரும்.

*2 ‘தம்’, ‘ச்ரி’, ‘ஸ்த’ என்பவை ஒரே அக்ஷரமாக வடமொழியிலிருப்பதால், இதைத் திருப்பிப் படித்தாலும் நேராகப் படிக்கும் வாசகமே வரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ''கன்னம் அதிகம்''
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஒரே எழுத்தாலான ஸ்லோகம்
Next