ஒரே எழுத்தாலான ஸ்லோகம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இங்கே யா, மா, நீ, ழீ, கா, ணா என்ற ஆறே எழுத்துக்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் செய்யுள் செய்திருக்கிறது.

‘சப்த சித்ர காவ்யம்’ என்பதாக இப்படி சில அக்ஷரங்களை வைத்துக்கொண்டே சப்த ஜாலம் பண்ணுவதில் ஒன்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறேன்.

மித்ராத்ரிபுத்ர நேத்ராய த்ரயீசாத்ரவ சத்ரவே |

கோத்ராரி காத்ர-ஜத்ராய கோத்ராத்ரே தே நமோ நம: ||

இது ஈச்வரன், விஷ்ணு இருவருக்கும் பொருந்துமாறு செய்த ஸ்லோகம்.

‘மித்ர அத்ரி புத்ர நேத்ர’ என்றால் மித்ரன் என்ற ஸூர்யனையும், அத்ரி புத்ரனான சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவன். சிவன், விஷ்ணு இரண்டு பேரையுமே இவ்விதம் ஸூர்ய-சந்திரர்களை நேத்ரமாகக் கொண்டவர்களென்று சொல்வதுண்டு. ‘த்ரயீ சாத்ரவ சத்ரு’ என்றால் வேத சத்ருக்களான அஸுரர்களின் சத்ரு. இதுவும் இருவருக்கும் பொருந்துவதே. ‘கோத்ராரி கோத்ரஜ த்ர’ என்றால் மலைகளுக்கு சத்ருவான இந்திரனுடைய குலத்தில் பிறந்த தேவர்களை ரக்ஷிப்பவர். சிவன் விஷ்ணு இருவரும் இந்த டெஃபனிஷனுக்கும் ஆன்ஸர் பண்ணுகிறார்கள். “கோத்ராத்ரே தே நமோ நம:” என்றால் “பசுவைப் பாலிக்கிற உனக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்” என்று அர்த்தம். பசுபதியான பரமேச்வரன், கோபாலனான மஹாவிஷ்ணு இருவருந்தான் இவ்வாறு நமஸ்காரத்துக்குப் பாத்திரமாகிறார்கள்!

இதையெல்லாம் விட அர்த்தம் சொல்ல ரொம்பக் கடினமாக, ஒரே ஒரு எழுத்தை வைத்தே ஒரு ஸ்லோகம் ‘சிசுபால வத’த்தில் மாகன் பண்ணியிருக்கிறான். ஸீதை ‘த’ (ta) வை எடுக்கச் சொன்னாளென்றால், இவன் ‘த’ (da) ஒன்றை வைத்தே முழு ஸ்லோகம் செய்திருக்கிறான். சொல்வதற்கே சிரிப்பாக இருக்கிறது!

தாததோ துத்ததுத்தாதீ தாதாதோ துததீததோ: |

துத்தாதம் தததே துத்தே ததாத தததோதத: ||

கொடுக்கிறவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா தானும் அருளைக் கொடுக்கிறார்; கொடுக்கமால் கெடுக்கிறவர்களுக்குத் தானும் கொடுக்காமல் கெடுதலே செய்கிறார் என்பது தாத்பர்யம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மாலை மாற்றம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கூட்டுவதும் குறைப்பதும்
Next