ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை ” கோ க்ராஸம் ” என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு ”க்ராஸ்” என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, த்யாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இதுகூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்? அப்படிப்போடாமல், சிலர் வீடுவீடாகப்போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்’ பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் கார்யம் நடந்தது. இப்போதும்கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.
உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ணவேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இதுதான் முக்யமான அம்சம்;அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.
ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது? ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம்.
கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்யவேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை – தாயாருக்குச் செய்யவேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்.
ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில் கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத த்வேஷங்களைத் தூண்டி விட்டிருந்தார்கள். எந்த ஸர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால் கோமாதாவுக்கு ஹானி இல்லை. இதிலே நாம் குஜராத்தி, மார்வாரிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கோபாலக்ருஷ்ணன் வாஸம் பண்ணின பிரதேசமானதால் போலிருக்கிறது இவர்களுக்கு கோ ரக்ஷணத்தில் அலாதிப்பற்று இருக்கிறது!
முன்காலங்களில் ‘ பசு மடம் ‘ என்று வைத்து நம் க்ராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்த தர்மத்தில் பிற்பாடு நாம் ச்ரத்தை இழந்துவிட்டோம். ஆனால் “பிஞ்சரபோல்”, கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்?
கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.