பள்ளிப்படிப்போடு பண்டைய சாஸ்த்ரங்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இலவசமாக வேத சாஸ்த்ரம் கற்றுக் கொடுக்கிறோம் என்று ஆரம்பித்தால்கூட அதற்கு ரெஸ்பான்ஸ் (வரவேற்பு) இல்லை. வேத சாஸ்த்ரம் மட்டுமில்லை திருக்குறள், தேவார-திவ்ய ப்ரபந்தம், அல்லது நம் தேசத்தில் நீண்டகாலமாக இருந்து இப்போது நசித்துவரும் ஸித்தர் சாஸ்த்ரம் முதலானவற்றில்கூட இலவச வகுப்பு நடத்தச் சில பெரியோர்கள் எடுத்த நல்ல முயற்சிகள் பலன் தரவில்லை. இந்தப் படிப்பிலே போனால், உத்யோகத்துக்கு உதவி செய்கிற ஸ்கூல் படிப்புக்கு பாதகமாகிறது என்று ஜனங்கள் இவற்றை ஆதரிக்காமலே விட்டுவிடுகிறார்கள். அதனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஸ்கூல் பாடத்தை விடாமல், அதோடேயே வேதாப்யாஸத்துக்கு உரியவர்களுக்கு வேதத்தையும், மற்றவர்களுக்கு இதர புராதன சாஸ்த்ரங்கள், கலைகள் இவற்றையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதற்காக ப்ரைவேட் ஸ்கூல்கள் ஆரம்பிக்கலாம். தினமும் அரை மணி, ஒரு மணி ஸ்கூல் டயத்தை நீட்டி, லீவ் நாட்களையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இந்த மாதிரி ரெகுலர் ஸிலபஸோடு கூடவே சாஸ்த்ரங்கள், தேசியக் கலைகள் இவற்றையும் சொல்லிக் கொடுக்க முடியும். இப்படிப் பசங்களைத் தயார் பண்ணிக் கால விரயமில்லாமலே ‘மெட்ரிக்’பரீக்ஷைக்கு அனுப்புவதாக ஏற்பாடு செய்தால் அநேகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்படிப்பட்ட ஸ்கூல்களில் சேர்க்க முன் வருவார்கள்.

பென்ஷனர்கள் மாத்திரந்தான் இதைச் செய்ய வேண்டுமென்பதில்லை. எல்லாரும் சேர்ந்து செய்யலாம். மனப்பூர்வமாக ஈடுபட்டு, ”பிற்பாடு டிக்ரி, டிப்ளமோவுக்கு ஹானியில்லாமலே, நம்முடைய புராதன சாஸ்த்ரங்கள், பக்தி நூல்கள், நீதி நூல்கள், கலைகள் ஆகியவை அழிந்து போகாமல் சொல்லிக் கொடுக்கிறோம்” என்று பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள். நம்முடைய தொன்று தொட்ட மஹத்தான நாகரிகத்துக்கு வாரிசாக வருங்காலப் பிரஜைகளை உருவாக்குகிற பேருபகாரம் இது.

இந்த நாகரிகத்துக்கு அடிவேரில் ஜலம் விடுகிற மாதிரியான தர்மம் எதுவென்றால் வேதம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும், கற்றுக்கொடுக்க முன் வருகிறவர்களுக்கும் கஷ்டமில்லாமல் ஜீவனம் நடத்துவதற்கான ஸெளகர்யங்களைப் பண்ணித் தருவதாகும்.

எவரும் தன்னாலான எந்த தர்மத்தையும் செய்ய வேண்டும் என்பது பொது விதியானாலும், குறிப்பாக வித்யாதானம் ப்ராம்மணருக்கும், கோஸம்ரக்ஷணை வைச்யர்களுக்கும் அவசியக் கடமையே ஆகிறது.

வித்யாதானம் என்கிறபோது, நம்முடைய தேச வாழ்வுக்கு உயிர்நிலையாக உள்ள வேத வித்யைக்கும், நம்முடைய மதத்துக்கு முக்ய பாஷையாக இருக்கிற ஸம்ஸ்கிருதப் படிப்புக்கும் முதல் இடம் கொடுத்து உதவி புரிய வேண்டும். எனக்கு ஒன்று தோன்றுகிறது. கன்யாதானத்தையும், வித்யாதானத்தையும் விசேஷமாகச் சொல்கிறார்கள் அல்லவா?கன்யாதான விஷயம் அப்புறம் சொல்கிறேன். இந்த இரண்டுக்காகவும் நம் மடத்தில் அபிமானமுள்ளவர்கள் இன்ஷ¨ரன்ஸ் பாலிஸிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காகக் ‘கன்யாதான ட்ரஸ்ட்’, ‘வேத ரக்ஷண நீதி ட்ரஸ்ட்’என்று இரண்டு ட்ரஸ்ட் ஆரம்பிக்கிறோம். இவற்றின் ட்ரஸ்டிகளை நியமிக்க இந்த மடத்தின் ஸ்வாமிகளுக்கு அதிகாரமிருக்கும். மடத்துக்கு ட்ரஸ்டிகள் கணக்குக் காட்டுவார்கள். மற்றபடி ட்ரஸ்ட்கள் ஸ்வேயேச்சையாகவே நடக்கும். இந்த ட்ரஸ்ட்களை nominee -களாக (தொகை பெறுபவர்களாக)ப் போட்டு மடத்து பக்தர்கள் இன்ஷூரன்ஸ் பாலிஸிகள் எடுத்துக் கொள்ளலாம். முழுத் தொகையும் ட்ரஸ்டைச் சேரும்படியாகப் போட வேண்டும் என்பதில்லை. பாதித்தொகை இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டவரின் குடும்பத்துக்குச் சேரும்படியாகவும், மீதிப் பாதி ட்ரஸ்டைச் சேரும்படியாகவும் பண்ணினால் போதும். குழந்தைகள் இருக்கிறவர்கள் தங்கள் பெண் குழந்தையின் பேரில் கன்யாதான பாலிஸியும் ஆண் குழந்தையின் பேரில் வேதவித்யாதான பாலிஸியும் எடுத்துக் கொள்ளலாம். ட்ரஸ்டின் மூலம் வேறு யாரோ ஒரு கன்யாக் குழந்தைக்குக் கல்யாணமும், வேறு யாரோ ஒரு பிள்ளைக்கு வேதஞானமும் ஏற்படுகிற புண்யம் பாலிஸி ஹோல்டர்களான குழந்தைகளைச் சேரும். இதனால் நிஜத்தில் ப்ரீமியம் கட்டுகிற தகப்பனார் தான் அந்தப் பெண்குழந்தையை ரிதுமதியாவதற்கு முன்பே கன்யா தானம் பண்ணிக் கொடுக்காத தோஷத்துக்கும், அந்தப் பிள்ளையை அத்யயனத்துக்கு விடாத தோஷத்துக்கும் கொஞ்சம் பரிஹாரம் செய்து கொண்டதாகவும் ஆகும். தங்கள் குழந்தைகளுக்கு சாஸ்திரோக்தமாகச் செய்ய வேண்டியதைச் செய்தவர்களுக்கும் இந்தக் கன்யா, வித்யா தானங்களைச் செய்தால் இரட்டிப்புப் புண்யம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசாரத்தைக் காக்க உதவி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  'டிக்ரி'இல்லாமலே மதிப்புப் பெற
Next