இன்றைக்கு*1ஒரே விஷயமாக இரண்டு தினுஸான அபிப்ராயங்கள் என்னிடம் வந்தன. ஒன்று எனக்கு ஸ்தோத்ரம் இன்னொன்று வசவு. கௌரவமாக, நாஸூக்காக வைதார்கள். வைதார்கள் என்று நான் குற்றம் சொல்லவில்லை. அவர்கள் வைததில் எனக்கு புத்திமதி இருப்பதாகவே தெரிந்துகொள்கிறேன்.
ஸ்தோத்ரத்தைவிட வசவுதான் எப்போதுமே ஒருத்தனுக்கு நல்லது பண்ணுவது. ஸ்தோத்ரம் கர்வத்தில் கொண்டுவிட்டு ஆத்மஹானிக்குத்தான் வழி செய்கிறது. ஒருத்தர் வைகிறபோதுதான் நமக்கு நம் தப்புத் தெரிய இடமேற்படுகிறது. அதனால் அதைத் திருத்திக்கொண்டு ஆத்மாவை சுத்தி பண்ணிக்கொள்ள வழி உண்டாகிறது. ஆகையால் நமக்கு நல்லது செய்வது யார் என்றால் நம்மை ஸ்தோத்ரம் செய்கிறவனில்லை நாம் பண்ணுகிற தப்பைச் சொல்கிறவன்தான். சொல்கிறதுண்டு: ”சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறவர் மற்றபேர்; அழ அழச் சொல்கிறவர் உற்றபேர்.”
ஒரே விஷயமாக இப்படி இரண்டு வித உபசாரங்களும் — நான் கர்வப்படும்படி ஸ்தோத்ர உபதாரமும், எனக்கு புத்தி வரும்படி கண்டன மஹா உபசாரமும் — கிடைத்தன.
எப்பொழுதெப்பொழுதோ, எங்கெங்கேயோ நான் ஸோஷல் ஸர்வீஸ் பற்றிச் சொன்னதை இப்போது போட்டுக் கொண்டிருக்கிறார்களோல்லியோ?*2 அதை இப்போதுதான் நான் புதிசாக எழுதுகிறேனாக்கும் என்று நினைத்துக் கொண்டுதான் ஒருத்தர் வந்து அதற்காக என்னை ஸ்தோத்ரம் பண்ணிவிட்டுப் போனார்.
அதனால் எனக்கு கர்வம் வந்தவிடப் போகிறதே என்று அம்பாளே அனுப்பி வைத்தமாதிரி, தம்பதியாக இரண்டு பேர் வந்து இதைப்பற்றிய வேறே தினுஸான அபிப்ராயம் சொல்லிவிட்டுப் போனார்கள். அவர்களில் அகமுடையான் கொஞ்சம் எடுத்துக்கொடுத்தவுடன் பெண்டாட்டியும் சேர்ந்து கொண்டுவிட்டாள். ‘வசவு, வசவு’ என்று நான் சொன்னாலும் அவர்கள் தாபத்தை ரொம்ப அடக்கிக்கொண்டு, வார்த்தையில் கொஞ்சம்கூடப் பதட்டப்படாமல், மரியாதைக் குறைவாக ஒரு சொல்கூடச் சொல்லாமல்தான் பேசினார்கள். கோபப்பட வேண்டிய இடத்தில் துக்கப்பட்டுக்கொண்டே சொன்னார்கள். ஆனாலும் அதை வசவு என்று வைத்துக் கொண்டால்தான் எனக்கு ரோஷம் வந்து கொஞ்சம் deep – ஆக என்னை நானே அலசிப் பார்த்துக்கொள்வேன் என்று தோன்றியதால் ”வசவு, வசவு” என்று சொல்கிறேன்.
*1. 1976-ம் ஆண்டு பிற்பகுதியில் ஒரு தினம்.
*2. ‘கல்கி’யில் அச்சமயம் வெளியாகி வந்த ‘ஜீவகாருண்யம்’ என்ற ஸ்ரீ பெரியவர்களின் உரைத்தொகுப்புத் தொடர் குறிப்பிடப்படுகிறது. இத்தொடர் நமது இந்நூலின் முந்தைய உரையான ‘பரோபகாரம்’ என்பதில் அடங்கும்.