நம் மதத்தைப் பற்றி இரண்டு ‘க்ரிடிஸிஸம்’ சொல்கிறார்கள். ஏகம் ஸத், ப்ரம்மம் ஒன்றுதான்; இந்த ஜீவன்கூட அதுதான் என்று ஒரு பக்கம் சொல்கிறோம். ஜீவனே ப்ரம்மம் என்பதால் ஈச்வர பூஜை, பக்தி எல்லாவற்றையுங்கூட ஞானம் உண்டாகிறபோது மூட்டை கட்டி வைத்துவிட வேண்டுமென்கிறோம். இன்னொரு பக்கம் பார்த்தால் இங்கேதான் மற்ற எந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட சாமிகள், ஒன்றொன்றுக்கும் அகமுடையான், பெண்டாட்டி, பிள்ளை-குட்டிகள் என்றெல்லாம் வேறு ஒரு பட்டாளமே வைத்துக்கொண்டு நூறாயிரம் ஸந்நிதி, புராணக் கதை, ஒவ்வொன்றுக்கும் ஒரு பண்டிகை, வ்ரதம், மந்த்ரம் என்று பண்ணிக்கொண்டிருக்கிறோம். இதர மதஸ்தர்கள் ஒரே பரமாத்மா, அவனிடம் பக்தி, பிரார்த்தனை, த்யானம் என்று தீர்மானமாக வைத்துக் கொண்டிருக்கிற மாதிரியில்லாமல், ப்ரமாதமாக அத்வைதத்தைச் சொல்கிற நாம்தான் ஏகப்பட்ட சாமிகள் வைத்துக்கொண்டு திண்டாடுகிறோம்! கிறிஸ்துவர்களுக்கு க்ரைஸ்ட்டும் [கிறிஸ்துவும்], துருக்கர்களுக்கு நபியும், இப்படியே ஸிக்குகளுக்கு நானக் என்றும் அந்தந்த மதஸ்தருக்குத் தங்கள் மதஸ்தாபகரிடம் மட்டும் ஈச்வரனுக்கு ஸமதையான பக்தி இருக்கிறதென்றால் அது நியாயம். தங்களை ஈச்வரனிடம் கொண்டு சேர்க்க வழி போட்டுக் கொடுத்தவர்கள் என்று குருபக்தி மாதிரி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது நியாயம். பௌத்தத்திலும் ஜைனத்திலும் ஈச்வரனே கிடையாது. ஆனாலும் தத்வ ரீதியில் அவர்கள் சொல்லும் மோக்ஷ நிலையை ஸ்வயமாக அடைந்து, அப்படிப்பட்ட ஸ்திதியிலிருப்பவன் எப்படியிருப்பான் என்று ப்ரத்யக்ஷமாக புத்தரும், ஜினரும் காட்டுகிறார்கள் என்பதால் அவர்களைப் பக்தியோடு பூஜிக்கிறார்கள். புத்தரை, ஜினரை ஸ்ருஷ்டிகர்த்தா, ஸ்வாமி என்று அந்த மதஸ்தர்கள் சொல்லவே மாட்டார்கள். புத்தரை அவதாரம் என்றுகூட நாம்தான் சொல்கிறோமே தவிர, பௌத்தர்கள் அப்படிச் சொல்வதில்லை. பூர்ண ஞானி என்றே புத்தரை, ஜினரை அந்த மதக்காரர்கள் பூஜை பண்ணுகிறார்கள். இந்த இரண்டு மதங்களுக்கு ஸ்வாமி இல்லாவிட்டாலும் கர்மா- theoryயிலும் எனவே ஜன்மாந்தரத்திலும், நம்பிக்கை உண்டு. நிர்வாணம், கைவல்யம் என்கிற மோக்ஷ ஸ்திதி லயிக்கிற வரையில், லோகம் என்று ஒன்று நடக்கிறபோது அது கர்மாபடியே பலன் தருகிறது என்கிறார்கள். இப்படி லோகம் உள்ளவரையில் தேவதைகள், க்ரஹங்கள் எல்லாமும் உண்டு. அவற்றுக்கு உள்ள ஒவ்வொரு சக்தியால் ஒவ்வொரு வித அநுக்ரஹம் பண்ணுகின்றன என்று வைத்துக்கொண்டு நம் மாதிரியே பூஜை, பரிஹாரம் செய்கிறார்கள். தங்களைவிட ஜாஸ்தி ஞானம் படைத்தவர்கள் என்பதற்காக புத்தரை, ஜினரைப் பூஜை பண்ணுகிறதுபோலவே, தங்களுக்கு இல்லாத சில சக்திகள் படைத்தவர் என்பதால் தேவதைகளுக்குப் பூஜை செய்கிறார்கள். ஸ்வாமி என்று நினைத்தல்ல.
ஹிந்துக்கள் மட்டும் ஸ்வாமி, ஸ்வாமி என்று நினைத்துக்கொண்டே ஏகப்பட்ட தெய்வங்களைப் பூஜை பண்ணுகிறார்கள் என்பது முதல் க்ரிடிஸிஸம்.
இன்னொன்று : “இதாவது [மேலே சொன்ன பல தெய்வ வழிபாடாவது] தொலைகிறது! தப்பாகவோ ரைட்டாகவோ ஒன்றையோ பலவற்றையோ ஸ்வாமி என்று வைத்துக்கொண்டுவிட்டால் அப்புறம் அதை பூஜை பண்ணத்தான் வேண்டும். ஆனால் இம்மாதிரிகூட ஸ்வாமி ஸம்பந்தமேயில்லாத அநேக கார்யங்களைத்தானே உங்கள் மதத்தில் அதிகம் சொல்லி அதைத்தானே பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். பித்ரு கார்யம் முதலானவற்றைத்தான் சொல்கிறார்கள்.
க்ரிடிஸிஸம் வாஸ்தவமாகத்தான் தோன்றுகிறது. மற்ற மதங்களில் ஒரு ஸ்வாமியிடம் பக்தி இருந்தால் போதும்; அவரை த்யானம், ப்ரார்த்தனை பண்ணினால் போதும் என்று இருக்க, “அஹம் ப்ரஹ்மாஸ்மி”, “தத்வமஸி” சொல்கிற நம் மதத்தில்தான் ஸ்வாமியையோ அல்லது ஒரு தேவதையையோகூட உத்தேசிக்காமல் பித்ருக்களை உத்தேசித்தே ரொம்பப் பெரியக் கார்யங்களைப் பண்ணுகிறோம். பத்து நிமிஷம் பூஜைகூடப் பண்ணாதவனும் மணிக்கணக்காக திவஸம் பண்ணுகிறான். ‘ஸெரிமனி’ என்றாலே திவஸம் என்கிற அளவுக்கு இதற்கு முக்யத்வம் தந்திருக்கிறோம். லீவு போடுவதற்கு ஏதாவது காரணம் சொல்வதென்றால்கூட, ‘ஸெரிமனி’ என்று சொல்லிவிட்டால், கார்யாலயத்தார் ஆக்ஷேபிக்க மாட்டார்கள் என்பதால் அப்படிச் சொல்கிறதாமே! தாயார் தகப்பனார் ‘போய்’ விட்டால் பத்து நாள், பதின்மூன்று நாள் ஏகப்பட்ட கார்யம். அப்புறம் மாஸா மாஸம் வேறு. இவர்களுக்கு முன் தலைமுறைகளுக்கும் தர்ப்பணம். இப்படியெல்லாம் வைத்திருக்கிறது. ஒருத்தர் ‘போய்’ எத்தனையோ வருஷம் கழித்தும் “தாத்தா வரார்”, “பாட்டி வரா” என்று சொல்லிக்கொண்டு ச்ராத்தம் பண்ணும்படி வைத்திருக்கிறது. இது அநேகமாக முன் தலைமுறைக்குப் பண்ணுவது. கூடப்பிறந்தவர்கள், வயிற்றில் பிறந்தவர்கள் ஆகியவர்களுக்கு அபர கார்யாதிகள் செய்வதாக அதிகம் ஏற்படுவதில்லை.
இது தவிரத் தனக்கும், தன் பின் தலைமுறைக்கும் பண்ணுவதாகவும் அநேக கார்யங்களை மதமே கொடுத்திருக்கிறது. மற்ற மதத்தில் தனக்கோ, அகத்து மநுஷ்யர்களுக்கோ பிறந்த நாள் என்றால் candle, cake என்று சுருக்கமாகக் கார்யம் முடிந்துபோகிறது. கல்யாணமும் ரொம்ப ஸிம்பிள் சடங்குதான். இங்கேயா கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மம், நாமகர்மம், வித்யாப்யாஸம், உபநயனம், ஒவ்வொரு வருஷமும் ஆயுஷ்ஹோமம், கல்யாணமென்றால் நாலுநாள் ஔபாஸனம் (அதை நிறுத்திவிட்டார்களே என்று அத்வைத குரு, நான், “கூ கூ” என்று கத்துகிறேன்!) – இப்படி ரொம்பவும் elaborate-ஆகக் கார்யங்களை வைத்திருக்கிறது. இதிலெல்லாம் தெய்வ ஸம்பந்தமிருக்கிறது என்றாலும் தெய்வத்துக்காக தெய்வ ஸம்பந்தமில்லை. ‘நான் நன்றாக இருக்க வேண்டும், எனக்கு நல்ல பிள்ளையாகப் பிறக்க வேண்டும், பிறந்த பிறகு அந்தப் பிள்ளை நல்ல ஆயுஸோடு இருக்கணும், நன்றாகப் படிக்கணும் என்று எல்லாம் ஒரு சின்ன மநுஷ்ய ஸர்க்கிளை ஸென்டராக வைத்து அதை உத்தேசித்துச் செய்வதாகவே இருக்கிறது.
வைதிகாநுஷ்டானத்துக்கே முதுகெலும்பு என்று சொல்கிற பஞ்ச மஹாயஜ்ஞங்களில்2 இப்படியே வேதாந்தமாக தியானம் செய்வதோ, ஒரே ஈச்வரனிடம் பக்தியிலே உருகிப்போவதோ காணவில்லை. யாகங்கள் எல்லாமும் இப்படித்தான். மொத்தத்தில் அநேக தேவதைகள், ஊர்த்தேவதை மாதிரிச் சில்லுண்டி சாமிகள், பூத ப்ரேத பிராசங்கள் உள்படப் பலவற்றுக்கும் பூஜை பலி இவைதானே அதிகமாயிருக்கின்றன?
இப்படி இரண்டு க்ரிடிஸிஸம் – ஒன்று “ஒரே பரமாத்மா என்று வைத்துக்கொண்டு அதனிடமே ஐகாக்ரிய பக்தி பண்ணாமல் நூறாயிரம் சாமியிடம் புத்தியைச் சிதற விடுகிறீர்களே!” என்பது. இன்னொன்று, “கண் முன்னாடி இருப்பவர்களுக்குத் தொண்டு – ஸோஷல் ஸர்வீஸ் – செய்வதற்குப் பொழுது இல்லாதபடி, எப்போதோ செத்துப் போனவர்களுக்காக ஏன் இப்படி ச்ராத்தாதிகள்? ‘நான் நன்றாயிருக்கணும்’ என்றே selfish ஆக எதற்கு இத்தனை சடங்கு? ‘எனக்கு உடம்பு ஸரியாகப் போகணும். அதற்காக நவக்ரஹ சாந்தி. பிள்ளைக்குப் படிப்பு வரணும். அதற்காக மேதா தக்ஷிணாமூர்த்திக்குப் பூஜை. அகத்தில் வேறு ஏதோ இடைஞ்சல் போகணும். அதற்காக குல தெய்வம், ஏதோ ஒரு காட்டேரிக்கோ, கருப்பண்ணசாமிக்கோ படையல். க்ரஹபீடை போகணும், ராஹுவுக்கு, கேதுவுக்கு, சனிக்கு ஹோமம் – எள்ளு, கொள்ளு, ஏதோ நைவேத்யம். எல்லாம் selfish-ஆக பக்தியே இல்லாமல் business, அதில் கூட லஞ்சம் மாதிரி இருக்கிறதே!”
இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நமக்கும் நம் மதம் நம்மை இப்படி ஹீனமாக வைத்திருக்கிறதே, அந்த மதங்களிலிருக்கிறவர்களுக்கு, ‘ஒரு பகவான் இருக்கிறான். அவனுக்கு ஸிம்பிளாக ஒரு பிரார்த்தனை பண்ணிக்கொள்வோம்’ என்று இருக்கிற பக்வ புத்தி நமக்கு இல்லையே என்றுதானிருக்கிறது. “காட்டேரியிலிருந்து நிர்குண நிஷ்கள நிராமயமென்கிற பரப்ரஹ்மம் வரை எல்லாவற்றையும் போட்டு அவியல் பண்ணிக்கொண்டிருக்கிறோமே!” என்று தோன்றுகிறது.
“ஸரியாக நம் மதத்தைப் புரிந்துகொண்டால் அதில் இப்படியெல்லாம் இல்லவேயில்லை” என்று நம்மிலேயே அறிவாளிகளாக, ஃபிலாஸஃபர்களாக இருக்கிறவர்கள் சொல்கிறார்கள். “பரமாத்ம த்யானம், இல்லாவிட்டால் ஸர்வ சக்தியாக இருக்கப்பட்ட ஏக வஸ்துவிடம் காரண காரியமில்லாத பக்தி – இதுதான் நம் மதக் கோட்பாடு. வயலில் களை வந்து சேர்ந்து பயிரையே நாசம் பண்ணிவிட்டு ஒரேயடியாக விருத்தியாகிறதுபோல, மற்ற விஷயங்களும் சடங்குகளும் நம் மதத்தில் களையாக வந்துசேர்ந்து வளர்ந்து விட்டன. முக்யமாக priest-hood-ன் vested interest-னால் இப்படி ஆகிவிட்டது” என்கிறார்கள். “பார்ப்பான் தக்ஷிணை தக்ஷிணை என்று தண்டிக்கொள்வதற்காகவே இப்படியெல்லாம் சடங்கு என்று வைத்து ஏமாற்றுகிறான்” என்பதைத்தான் இப்படி கௌரவமாக priest-hood-ன் vested interest என்கிறார்கள்!
நான் இவர்களோடு சேர்ந்துகொண்டு ‘நம்முடைய ரிலிஜன் என்பது ஹை ஃபிலாஸபிதான். அதில் நூறாயிரம் சாமி, பித்ரு ஸமாசாரம், சடங்கு எல்லாம் களையாக வந்து சேர்ந்துவிட்டது’ என்று சொல்லப்போவதில்லை.
க்ரிடிஸைஸ் பண்ணுகிறவர்களோடு சேர்ந்து கொண்டு “ஏக பரமாத்மாவைப் பற்றிய தியானத்தைவிட, அல்லது ஈச்வரன் என்ற ஒரே ஒருத்தனிடம் ஐகாக்ரிய பக்தியைவிட, திவஸமும், தினுஸு தினுஸான ஹோமமும் பூஜையும் வேண்டுதலுந்தான் நம் மதத்தில் ஜாஸ்தியாயிருக்கின்றன” என்றுதான் சொல்லப்போகிறேன்.
ஆனால் இதை க்ரிடிஸிஸமாகச் சொல்லப்போவதில்லை. “இப்படித்தான் இந்த மதம் இருக்கிறது. அதனால் காட்டேரிக்குப் படையல் போடுங்கள்; நவக்ரஹ சாந்தி, ம்ருத்யுஞ்ஜயஹோமம் எல்லாம் பண்ணுங்கள்; பஞ்சம யஹாயஞ்ஞம் பண்ணுங்கள்; திவஸம் திங்கள் இப்போது நேரம் தப்பி ஸம்க்ஷேபமாக [சுருக்கி] பண்ணுகிறது போல இல்லாமல் சாஸ்த்ரோக்தமாக இன்னம் ஸாங்கோபாங்கமாகச் செய்யுங்கள்; priest-hood-க்கு (இன்னம் கொஞ்சம் மட்டமாக priest-craft என்றும் சொல்லப்படுகிறவர்களுக்கு) இப்போது போல் இல்லாமல் நிறைய வாரி வாரி தக்ஷிணை கொடுங்கள்” என்றுதான் சொல்லப்போகிறேன்.
அவர்கள் கண்டனம் என்று நினைத்து என்ன என்னவற்றைச் சொல்கிறார்களோ அவை நம் மதத்தில் இல்லவேயில்லை என்று நான் சொல்லப்போவதில்லை. இருக்கத்தான் இருக்கின்றன என்று அழுத்தமாகச் சொல்லப்போகிறேன். இதை வருத்ததோடு apologetic-ஆகச்சொல்லப்போவதில்லை. “ஆமாம்; இப்படித்தானையா எங்கள் மதத்தில் இருக்கிறது! இப்படியிருப்பதுதான் ஸரி” என்று பெருமையோடு சொல்லப்போகிறேன்.
“ஒரே ஸ்வாமியை நினைப்பதுதானே உசத்தி?”
ஆமாம், அதுதான் உசத்தி!
“திரும்பித் திரும்பி, தான் தன் பித்ரு, புத்ராதிகள் என்றில்லாமல் humanity முழுதற்கும் ஸர்வீஸ் பண்ணுவதுதானே உசத்தி?”
ஆமாம், ஒப்புக்கொள்கிறேன்.
“பின்னே எப்படித் தன்னைச் சேர்ந்த இதுகளுக்காகவே பண்ணுவதை – யஜ்ஞ ஹோமங்களிலிருந்து படையல்வரை எல்லாவற்றையும் -ஸரியென்றுசொல்லி ஆதரிக்கிறீர்கள்?”
ஏன் ஆதரிக்கிறேன் தெரியுமா? இதுகள் எல்லாவற்றிலும் கூட ஏக பரமாத்மாவுக்கான வழிபாடுதான் உள்ளே ஓடுகிறது. இதுகளிலும் பரோபகாரம், ஆத்மோபகாரமான சித்தசுத்தி ஆகிய உயர்ந்த லக்ஷ்யங்களே பூர்த்தியாகின்றன.
“அதெப்படி? கொஞ்சங்கூடப் புரியவில்லையே!”
அப்படித்தான் ஹிந்துக்களில் ரொம்பப் பேரும் புரிந்துகொள்ளாமலேதான் இவற்றைப் பண்ணுகிறார்கள். அல்லது புரிந்து கொள்ளாததாலேயேதான் விட்டுவிடுகிறார்கள். ஸரியாகப் புரிந்து கொண்டால் இது எல்லாவற்றிலும் ஏக பரமாத்ம சிந்தனை உள்ளூர இழையோடிக் கொண்டுதானிருக்கிறது. பரோபகாரமோ வேறெந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு இவற்றில்தான் ப்ராகாசிக்கிறது.
“எப்படி?”
இருக்கிறது ஒரு பரமாத்மாதான் என்கிறது வாஸ்தவம். அதைத்தவிர வேறேயே கிடையாது. மநுஷ்யன், மிருகம், பூச்சி, பொட்டு எல்லாம்கூட அதுதான் என்பதை ஹிந்து மதம் மாதிரிச் சொல்கிற மதம் வேறு ஒன்றும் இல்லை. ஆனாலும் அதை அநுபவத்தில் தெரிந்து கொள்வது லேசில்லை. மற்ற மதககாரர்கள் ஒரே God அல்லது நிர்வாணம், அல்லது கைவல்யம் என்று சொன்னாலும் அவர்களைக் கேளுங்கள்: “நீங்கள் அந்த ஒன்றைத்தான் த்யானமோ ப்ரார்த்தனையோ பண்ணுகிறீர்கள் என்பது வாஸ்தவமானால், நீங்கள் வாஸ்தவத்திலேயே அதைத் தெரிந்து கொண்டுவிட்டீர்களா? Realise பண்ணிவிட்டீர்களா (ப்ரத்யக்ஷமாக அநுபவித்து விட்டீர்களா)?” என்று அடித்துக்கேட்டால் அவர்களில், “Realise பண்ணி விட்டேன்” என்று பதில் சொல்லக்கூடியவர்கள் லக்ஷத்தில் ஒருவர்தான் இருக்கலாம்.
ஆத்ம ஸம்பந்தமோ, ஈச்வர ஸம்பந்தமோ இல்லாததாகத் தோன்றும் இத்தனை காரியங்களில் மாட்டிக் கொண்டுள்ள நம் மதஸ்தர்களிலோ, நிச்சயமாக அவர்களைவிட ஜாஸ்தி அநுபூதிமான்கள் – realised souls – இருந்திருக்கிறார்கள். இது நான் சொல்வதில்லை. அவர்களே இந்தியாவைத்தான் Land of Saints and Sages என்று ச்லாகிக்கிறார்கள். இன்றைக்கும் நாம் லௌகிக ஸௌர்யங்களுக்காகவே அவர்களுடைய தேசங்களுக்கு ஓடுவதாகவும், அவர்கள் ஆத்மாபிவிருத்திக்காக நம் தேசத்துக்கு வந்து சேருவதாகவும் இருப்பது யதார்த்த உண்மை.
காரணம் என்ன?
ஸ்வயநலனாக இவன் செய்துகொள்வதாகத் தோன்றுகிற பலவித ஹோமம், பூஜை முதலியவற்றிலுங்கூட ஆத்ம பரிசுத்திக்கான மருந்தும் இருப்பதுதான். எல்லாம் பரமாத்மாவானாலும் லோகத்தின் நடைமுறையில் ஒன்றுக்கொன்று வித்யாஸமான ஜீவன்கள் என்று வைத்துத்தான் கார்யங்கள் நடந்தாக வேண்டியிருக்கிறது. நாம் எல்லோருமே ஸ்வயஞ்ஜ்யோதியான ஆத்மாதான் என்றாலும் அது நமக்கே தெரியாதபடி கர்மா மேகமாக மறைக்கிறது. கர்மா மூடிய ஜீவனை அதிலிருந்து வெளியிலே கொண்டுவர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்மை லோகத்தில் வெறுமனே தனியாக விட்டு வைத்திருக்கவில்லை. பெண்டாட்டி, பிள்ளை குட்டி என்று சேர்த்து வைத்திருக்கிறது. இதுவும் கர்மாவால் ஏற்பட்டதுதான். கர்மவாஸனை ஒரு பக்கம் நம் மனஸுக்குள் அழுக்குகளை ஏற்றி ஆத்மாவை உணர முடியாமல் பண்ணுகிறதென்றால், கர்ம பந்தம் பல கடமைகளைப் பண்ண வைக்கிறது. உடம்பு என்ற வீட்டுக்குள் இருக்கும் ஜீவன், அப்புறம் அந்த ஜீவனுக்கு பந்துக்கள் என்பவர்களால் ஏற்பட்டிருக்கும் வீடு இவற்றுக்கு ஒருத்தன் பண்ண வேண்டிய கடமைகளைப் பண்ணினாலன்றி கர்மாவைத் தீர்க்க முடியாது. இத்தனை பழைய கர்ம பாக்கியை வைத்துக்கொண்டு இப்போதே ஆத்மா தெரியணும், ஈச்வரன் தெரியணும் என்றால் தெரியாது. ஸத் கர்மாவால் பாப கர்மாவைப் போக்கிக்கொண்ட பின்தான் மேகம் விலகி ஸூர்யப்பிரகாசம் தெரியும். இந்த ஸத்கர்மா பலவிதமான கடமைகள் ரூபத்தில் இருக்கிறது. ஆத்ம ஞானம் அல்லது ஈச்வர பக்தி என்று ஒரே ஆவேசமாகப் போகிற அபூர்வமான சில பேர்களுக்குத்தான் ஒரே flash-ல் கர்மா அறுந்து விழுமே தவிர, மெஜாரிடி ஜனங்களுக்கு ட்யூட்டிகளை சுத்தமாகப் பண்ணிப் பண்ணி ரொம்பவும் gradual-ஆகத்தான் கர்மாவைப் போக்கிக் கொள்ள முடியும். “இருவினை ஒப்பு” என்று [சைவ] ஸித்தாந்திகள் சொல்வதுபோல ஜன்ம ஜன்மாந்தரங்களாகப் பண்ணிய பாப கர்ம பாரத்தால் ஒரு தராசுத் தட்டு ரொம்பவும் கீழே போயிருக்கிறதென்றால் அந்த அளவுக்கு ஸத் கர்மாவைப் பண்ணியே இரண்டு தட்டுக்களையும் ஸமமாகச் செய்ய வேண்டும்.
இந்த ட்யூட்டிகளில், “சரீரமாவது, வீடாவது?” என்று ஒரே வைராக்யத்தில் மனஸைக் கெட்டியாக வைத்துக்கொண்டிருக்கிற யாரோ ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாரும், சரீரத்திலும் வீட்டிலும் இருக்கிறபோதேதான் அவற்றுக்கான கடமைகளைப் பண்ணி அதனாலேயே கர்மா மூட்டையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருக்கிறபோதேதான் ஸத் கர்மா பண்ண வேண்டும், ட்யூட்டிகளைப் பண்ணவேண்டும் என்பதால் ஓரளவு வரைக்கும் சரீர போஷணை, வியாதி வந்தால் அதற்கு சாந்தி, குடும்பக் கார்யங்களுக்காக ஸம்பாத்ய அபிவிருத்திக்குப் பிரார்த்தனை என்றிப்படி selfish-ஆகத் தோன்றுகிறவைகளையும் செய்யத் தான் வேண்டும். அதியாக எதிலுமே போகக்கூடாதுதான். ஆனால் இப்போது ‘ஸெல்ஃபிஷ்’ என்று தோன்றுகிற பல சாஸ்த்ரோக்தமான கார்யங்கள் ஒரு ஸாமான்ய ஜீவன் தன் கடமையைப் பண்ணுவதற்கு அங்கமாகவே செய்துகொள்ள வேண்டியவைதான். இப்படியே கர்மாவால் நமக்கு வந்து வாய்த்து, நாம் அவர்களுக்குப்பட்ட ஜன்மாந்தர [கர்மக்] கடனை இப்போது நாம் செய்யும் ட்யூட்டி ரூபமான கர்மாவால் தீர்த்து வைக்கும் தார புத்ராதிகளுக்கானா பல சாஸ்த்ரோக்த காரியங்களைப் பண்ணுவதற்கும் ‘ஸெல்ஃபிஷ்’ என்று வெட்கப்பட வேண்டியதில்லை.
மந்த்ரபூர்வமாக இப்படிப்பட்ட சாஸ்த்ரோக்தக் காரியங்களைப் பண்ணும்போது அந்த மந்த்ரங்கள் லௌகிகமாக ஒரு பலனைத் தருவதோடு, சித்த சுத்தியையும் தருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். வெறும் கர்மாவே சித்த சுத்தி தருவது என்றால் மந்த்ரத்தோடு சேர்ந்து வரும்போது சித்தப் பரிசுத்திகர சக்தி இன்னம் ஜாஸ்தியாகிறது.
ஒரு பிண்டத்துக்குப் பும்ஸவனம் பண்ணும்போது ஒரு பிறந்த குழந்தைக்கு ஜாத கர்மம் பண்ணும்போது, அது வளர்ந்தவிட்டு உபநயன ஸம்ஸ்காரம் பண்ணும்போது அந்த ஜீவனின் ஆத்ம பரிசுத்தியை முக்யமாக உத்தேசித்தே இந்தக் கார்யங்கள் செய்யப்படுகின்றன.
நம் [பொறுப்பில் ஈச்வரன் விட்டிருக்கிற இந்த நம்முடைய சொந்த ஜீவன், அப்புறம் பெண்டாட்டி பிள்ளை குட்டி என்கிற ஜீவர்கள் ஆகியவர்களுக்கு நியாயமாக லோகத்தில் என்ன நல்லது கிடைக்க வேண்டுமோ அதற்கும், இவர்களுடைய ஆத்ம பரிசுத்திக்காகவும் ஒருத்தன் செய்யும் கார்யங்களும் ஒரு தினுஸில் ஜீவாத்ம கைங்கர்யந்தானே? பரோபகாரம்தானே?
‘இதுவே எல்லாம்’ என்று வெளி லோகத்திலிருக்கிற கஷ்டங்களைப் பார்க்காமல், அதற்காக எந்தத் தொண்டும் செய்யாமலிருந்தால் அதுதான் தப்பு.
அளவறிந்து இந்த சொந்தக் கார்யங்களைப் பண்ணும்போது வெளிக் கார்யத்துக்கு, லோக ஸேவைக்குப் பொழுது இல்லாமல் போகவே போகாது.
நம்முடைய ஜீவன், நம் பந்துக்களின் ஜீவன்கள் ஆகியவற்றுக்கும் உபகரிக்கத்தான் வேண்டும். அதனாலேயே இந்த ஜீவனை சரீர பந்தத்திலிருந்தும் விடுவித்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதே ஸமயத்தில் ஈச்வரன் நம்மை ஒரு உடம்பில், ஒரு வீட்டில் மட்டுமில்லாமல், ஒரு உலகத்திலும் விட்டு வைத்திருப்பதால் அந்த உலகத்துக்கும் நாம் செய்ய வேண்டிய பரோபகார ட்யூட்டி உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த லோகத்துக்கு மட்டுமில்லாமல் கண்ணுக்குத் தெரியாத லோகங்களில் இருக்கிறவர்களுக்கும் நம் ட்யூட்டி இருக்கிறது. செத்துப்போனவுடன் ஜீவன் சந்த்ரலோகம், பித்ரு லோகம், நரக லோகம் என்று எங்கெங்கேயோ போகிறதென்கிறார்களே அங்கேயும்,அப்புறம் அந்த ஜீவன்கள் திரும்பி இந்த லோகத்திலேயே எங்கே எந்த ரூபத்தில் புனர் ஜன்மாவாக வந்திருந்தாலும் அங்கேயும் வேண்டியவைகளை போய்ச் சேருவதற்காகத்தான் அபர கார்யங்கள், திவஸம், தர்ப்பணம் எல்லாம். இதுவும் பரோபகாரத்தைச் சேர்ந்ததுதான்.
பல சாமி எதற்கு என்கிறார்களே, இதுவுங்கூடப் பரோபகாரம்தான் என்று நான் சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கும். கண்ணுக்குத் தெரியாத லோகங்களில் மநுஷ்ய இனம் போலவே பலவித தேவஜாதிகள் இருக்கின்றன. துர்த்தேவதைகள், க்ஷுத்ர தேவதைகள் (சில்லுண்டி சாமிகள்) எல்லாம் இருக்கின்றன. எல்லாம் பரமாத்மா என்றாலும், [மநுஷ்யர்களான] நமக்கு எப்படி அது [அநுபவத்தில்] தெரியவில்லையோ அப்படியே இந்த தேவதைகள் பலவற்றுக்கும் தெரியாது. ஈச்வரன், விஷ்ணு, அம்பாள், பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர், ஸரஸ்வதி, லக்ஷ்மி, ஸூர்யன் இம்மாதிரி தேவதா மூர்த்திகள் பரமாத்மாவாகவே தங்களைத் தெரிந்து கொண்டும், வெளியிலே தங்களுக்கென்று ஒரு தனி ரூபம், தனியான தொழில் என்றிருக்கிற மாதிரி மற்ற எல்லா தேவதைகளும் இல்லை3. அவை ஈச்வரனின் ஸர்வலோக ஸர்க்காரில் இருக்கிற கோடாநு கோடிச் சிப்பந்திகளாக மட்டுமேயிருக்கின்றன. இயற்கை, இயற்கை என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதன் ஏராளமான சக்திகளில் கொஞ்சம் கொஞ்சம் அவற்றின் த்வாரா நிர்வஹிக்கப்படுகிறது.
மநுஷ்ய ஜீவர்களில் கெட்டவர்கள், நல்லவர்கள் என்று இருவிதமாகவும் இருக்கிறோமோல்லியோ? மிருகங்களிலும் துஷ்ட மிருகங்கள், ஸாதுவானவை என்று இருக்கின்றனவோல்லியோ? இப்படியே நல்ல தேவதை, துர்த்தேவதை, பெரும்பாலான ஜனங்களைப்போல நல்லதும் கெட்டதும் கலந்த தேவதை எல்லாமுண்டு. ஆராதித்தால் நல்லது செய்வது, ஆராதிக்காவிட்டால் நல்லது செய்யாமல் வெறுமனே இருப்பது, வெறுமனே மட்டுமில்லம்மால் கெட்டதே செய்வது, ஸாத்விக ஆராதனையால் ஸந்தோஷப்படுவது, ராஜஸ தாமஸ வழிபாடுகளாலேயே ப்ரிதீயுறுவது, மந்த்ரபூர்வமாகப் பிடிபடுவது, பூசாரியின் அநுஷ்டானத்தில் பிடிபடுவது என்றெல்லாம் பலவிதமான தேவ சக்திகள் இருக்கின்றன. காத்தாயி, காட்டேரி, கருப்பண்ணசாமி, வீரன், முனி, இருளன், அய்யனார் எல்லாம் இருக்கிறது. இவற்றில் ஸாத்விக ஸ்டஜில் இருப்பவர்களுக்கு ஸாத்விக தேவதையாக இருந்துகொண்டு, தாமஸமான ஜனங்களுக்கு தாமஸமாக இருக்கிறவையும் உண்டு. நைவேத்தியத்திலும் இவற்றின் தரத்தைப் பொறுத்து வித்யாஸம் உண்டு. பலி, கிலி முதலியவற்றாலேயே த்ருப்தியாகிற தேவதைகளும் உண்டு.
நாம் மட்டும் நல்லது அடைவதற்காகத்தான் இவற்றை வழிபடுகிறோம் என்றால்தான் அது selfish. ஆனால் நம் கிராமம், ஊர், உலகம் எல்லாமே இவை த்ருப்தியாக இருந்தால்தான் நன்றாயிருக்கும் என்பதற்காக இவற்றை வழிபட்டால் அது லோக க்ஷேமார்த்தம் செய்கிற பரோபகாரத்தில் சேர்ந்ததுதான்.
இன்னம் ஒருபடி மேலே போய்ச் சொல்கிறேன். நம் சொந்த நலன், உலகத்தார் நலன் ஆகியவற்றை மட்டும் polytheism என்று ஸரியாகவோ தப்பாகவோ சொல்லப்படுகிற இந்த ‘பல சாமி பூஜை’ பூர்த்தி பண்ணுவதோடு நிற்கவில்லை. அந்த தேவதைகளின் நலனையும் பூர்த்தி பண்ணுகிறது. அவற்றில் பெரும்பாலானவை பூர்ணத்வம் பெறாதவையே என்று சொன்னேனல்லவா? அவையும் ஈச்வர ஸ்ருஷ்டியைச் சேர்ந்த ஜீவன்கள், நம்மைவிட அதிக சக்தி படைத்த ஜீவன்களானாலும் நம்மைப் போலவே அவற்றுக்கும் ஆசைகள், தேவைகள் உண்டு. அதுகளை நாம் பூர்த்தி பண்ணித் தருவதும் பரோபகாரம்தானே?
மற்ற மதங்கள் இந்த லோகத்திலேயிருக்கிற, கண்ணுக்குத் தெரிகிற, மநுஷ்ய மிருகாதிகளுக்குப் பிரீதி பண்ணுவதை மட்டுமே பரோபகாரமென்று சொல்கின்றனவென்றால், நம் மதம்தான் அதற்கும் மேலே போய், இந்த லோகத்தைச் சேராத, லோகாந்தரங்களைச் சேர்ந்த invisible ஜீவன்களுக்கும் பிரீதியாக இப்படி வைதிக ஹோமத்திலிருந்து பூசாரியின் படையல் வரையில் அநேக வழிபாடுகளை வைத்துப் பரோபகார எல்லையை இன்னமும் விஸ்தாரம் பண்ணியிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. பஞ்ச மஹா யஜ்ஞங்களில் வரும் ஹோமம், பலி, மந்த்ர அத்யயனம், தர்ப்பணம் எல்லாமே பலவிதமான ஸ்ருஷ்டிகளுக்கும் உதவி பண்ணுவதுதான்!
ஏக பரமாத்மாதான் இத்தனை வித ஜீவராசிகளாகவும் தேவதைகளாகவும், இவற்றைப் பூஜை பண்ணும் மநுஷ்யர்களாகவும் ஆகியிருப்பதை நம் மதம் திருப்பித் திருப்பித் சொல்லிக் கொண்டுதானிருக்கிறது. இந்த நினைப்பு அடியோடு துண்டித்துவிடக் கூடாதென்றுதான் எந்த தேவதையை வழிபட்டாலும் அதுவே ஸ்வாமி என்கிற மாதிரி ஸர்வ சக்தி, ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்றெல்லாம் சொல்வது. அந்த தேவதைக்கே ‘நான் பரமாத்மா’ என்பது தெரியாமலிருந்தாலுங்கூட, நாம் அது பரமாத்மா என்பதை முழுக்க மறந்து போய்விடக்கூடாது என்பதே தாத்பர்யம். அதாவது “பல சாமி” இல்லை – ஒரே ஸ்வாமியைத்தான் ஒவ்வொரு ரூபத்துக்குள்ளும் அந்தர்யாமியாக நினைக்கிற பாவமே இது. எந்த தேவதையும் பரமாத்மாவின் ரூபமே என்றாலும், இதை மறக்காமல் நினைப்பூட்டிக் கொண்டாலும், அதை ஒரு தனி தேவதையென்றே அதற்குரிய வழிபாட்டால்தான் உபாஸிக்க வேண்டும் என்று நம் மதம் சொல்கிறது. ஏனிப்படி என்று கேட்டால் – மநுஷ்யர்கள் மட்டும் யார்? அவர்களும் பரமாத்மாவின் ரூபங்கள்தானே? மத நம்பிக்கையில்லாத பொதுத் தொண்டுக்காரர்கள்கூட மக்களுக்குச் செய்வதே மஹேசனுக்காகும் என்கிறார்களே! இப்படி எல்லாரும் ஒரே ஈச்வரன் என்றாலும் அவர்களுக்கான ஸேவை அவரவர்களைத் தனி மநுஷ்யர்களென்று வைத்து, ஒவ்வொருவரின் தேவையை அநுஸரித்துத்தானே பண்ணவேண்டியதாயிருக்கிறது? வியாதியஸ்தனுக்கு சிகித்ஸை, அதிலும் இன்ன வ்யாதிக்காரனுக்கு இன்ன சிகித்ஸை, உத்யோகமில்லாதவனுக்கு வேலை, படிப்பில்லாதவனுக்கு படிப்பு, பசித்தவனுக்கு அன்னம் என்று வித்யாஸமாகத்தானே பரோபகாரம் பண்ணுகிறோம்? இவ்வாறே தேவதைகளிலும் ஒன்றொன்றின் தனி ரூபத்துக்கும் எந்தவிதமான ஆராதனை உரியதோ அந்தப்படித்தான் செய்ய வேண்டும். ஆனாலும் எல்லா பரமாத்மா என்பதையும் முழுக்க மறந்துவிடக்கூடாது.
எல்லாம் பரமாத்மா என்ற நினைப்பு ஒருத்தனுக்கு அநுபவமாக ஆவது பெரிய விஷயம். அப்படி ஆவதற்கு முன் அவனுக்குச் சித்தசுத்தி ஏற்படவேண்டும். இந்த சுத்தி ஏற்படவே அநேக கார்யங்களைக் கொடுத்திருக்கிறது. இதில் ஒவ்வொரு தேவதையையும் அதற்குரியபடி பூஜிக்கிற காரியமும் அங்கம்தான். இது தவிர “யஜ்ஞேன தானேன தபஸா” என்று பரமாத்ம தத்துவத்தைச் சொல்லும் உபநிஷத்தே அந்தத் தத்வத்தைப் பிடிப்பதற்குப் பூர்வாங்கமாகவே பலவிதமான கார்யங்களை விதித்திருக்கிறது4. “தானேன” என்பது தனத்தால் செய்கிற தானம் மட்டுமில்லை. மனத்தால், வாக்கால், சரீரத்தால் செய்யும் எல்லா உபகாரமும் தானம்தான்.
இதேபோல, “பிதாவுமில்லை; புத்ரனுமில்லை; தேவதையுமில்லை; உபாஸிக்கிறவனுமில்லை” என்ற உச்சிக்கோடிக்கு அழைத்துப்போகிற உபநிஷத்துக்களே, இந்த உச்சிக்கு வழியாகவே “தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம்” என்கிறது. “ஏகப்பட்ட தேவதைகளுக்குப் பண்ணவேண்டிய கார்யங்களை, ஏகப்பட்ட பித்ரு கார்யங்களைக் கொஞ்சங்கூட, மறந்து கிறந்து விட்டு விடாதே” என்கிறது.
தத்வார்த்தமாக, symbolical-ஆக தேவதைகளில் புருஷன், பெண்டாட்டி, பிள்ளை, குட்டி என்று வைத்திருப்பது மட்டுமில்லை. வாஸ்தவமாகவே தேவஜாதியைச் சேர்ந்த பல ஸ்ருஷ்டிகள் மநுஷ்ய ஜீவன்களைப் போலவே இப்படிப்பட்ட உறவுகளில் ஸம்பந்தப்பட்டிருக்கின்றன.
லோகத்தில் எதுவும் நமக்கு வேண்டாம், ஏக பரமாத்மா ஒன்றைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மாத்திரமே நம் லக்ஷ்யமாக ஆகிறபோது அந்தப் பரமாத்மாவின் தேவதா ரூபங்களை விடத்தான் செய்வோம். அதேபோல லோகத்திலிருக்கிறவர்களுக்கு ஸேவை பண்ணவேண்டும் என்கிற எண்ணமும் அப்போது விட்டுப்போய்விடும். இதனால் ஒருத்தன் பரோபகாரமில்லாமல் கல்லு மாதிரி ஆகிவிட்டானென்று அர்த்தமில்லை. பரமாத்ம ஞானத்தை இவன் அடைந்து விட்டானென்றால், பரமாத்மாவிடம் பக்தியினாலோ ஞானத்தினாலோ கலந்து வாழ்கிறானென்றால் அப்போது இவன் உத்தேசிக்காமல் தன்னாலேயே ஸகல ஜீவன்களுக்கும் சாந்தி தருவதான மஹா பெரிய உபகாரம் இவனால் நடந்துகொண்டேதானிருக்கும்.
மற்ற மதங்கள் இப்படிப் பல தேவதை ப்ரீதியைச் சொல்லவில்லையாதலால் அவர்களுக்கு ஒரே ஈச்வரனிடம் பிடிப்பு நன்றாக உண்டாகிறது என்பது வாதமாக மட்டுமே நிற்கிறதே ஒழிய, வாஸ்தவத்தில் அப்படி அவர்களில் அதிகம் பேருக்கு ஈச்வராநுபவம் உண்டாகாமல் அவர்களும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்களென்பதுதான் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது. அவர்களில் இருப்பதைவிட நம்மில்தான் ஜாஸ்தி மஹான்கள் தோன்றியிருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள் என்றும் அவர்களே சொல்லவும் சொல்கிறார்கள். இதனால் எனக்கு இன்னொன்றுகூடக் கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றுகிறது.
பெரிய ஸ்வயநலம், தன்னலம் எது? தனக்கு உண்டாகக்கூடிய பெரிய நன்மை எது? பரமாத்மாவைச் சேருவதுதானே? “எத்தனை தேவதைகளும், பித்ருக்களும் இருந்தாலும் ஸரி, எனக்கு அவை ஒன்றும் வேண்டாம்; நீதான் வேண்டும், அவையெல்லாமும் உன் ஸ்ருஷ்டிதானே? அவற்றுக்கு என்ன தேவை இருந்தாலும் அதைப் பூர்த்தி பண்ணவேண்டியது உன் பொறுப்புத்தான். மரம் வைத்த நீதான் தண்ணி விடணும். விடு, விடாமல் போ, அது உன் கார்யம். எனக்கு தேவதையும் வேண்டாம், பித்ருக்களும் வேண்டாம். உன்னைத்தான் பிடித்துக் கொள்கிறேன். அதற்காக அவை கோபித்துக்கொண்டு என்னைக் கஷ்டப்படுத்தினவென்றால் அது உனக்குத்தான் அவமானம். எல்லாவற்றுக்கும் மேலேயிருக்கிற உன்னை நான் பிடித்துக் கொள்கிறேன் என்பதற்காக ஏதோ குட்டி சக்திகள் என்ன ஹிம்ஸை பண்ணி, நீ பேசாமல் இருந்தால் அது உனக்குத்தான் அபக்யாதி’ – என்றிப்படி எல்லாரையும் நினைக்கச் சொல்லி நம் மதம் நம்முடைய பெரிய ஸ்வயநலத்தை மட்டும் கவனித்திருக்கலாம். ஆனாலும் ஸ்வயநல மதம் என்று சொல்லப்படுகிற இதுதான், இவன் ஒரே பரமாத்மாவைப் பிடித்துக்கொள்வதில் உள்ள ஐகாக்ரியம் [ஒருமுக சிந்தனை] என்கிற உத்தமமான ஸ்திதி சிதறிப்போகும்படியாகப் பல தேவ-பித்ரு கர்மாக்களைக் கொடுத்து ஸ்வயநலத்தைத் தியாகம் பண்ண வைத்து, கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன சக்திகளுக்கும் இவனைப் பரோபகாரம் பண்ண வைக்கிறது. இப்படி இவன் தியாகமும் பரோபகாரமும் செய்வதனாலேயே பகவான் இவனை மெச்சி இவனுக்கு இதர மதங்களிலிருப்பவர்களுக்கு முன்னால் ஞானத்தை அநுக்ரஹித்து விடுகிறான். அதனால்தான் இந்த மதத்திலேயே ஜாஸ்தி மஹான்களும் ஞானிகளும் பக்த சிரேஷ்டர்களும் தோன்றுகிறார்கள் – என்று தோன்றுகிறது.
இன்னொரு தினுஸாகச் சொல்வதென்றால் அது ஸமூஹத்தில் பெரும்பாலோர் இப்படிப் பரமாத்மாவைத் ‘தியாகம்’ பண்ணிவிட்டுக் குட்டி சாமி பூதப் படைகளைப் பிரீதி பண்ணுகிற பரோபகார புண்யத்துக்காகத்தான் இந்த மதத்திலேயே “சிறு தெய்வம் சேரேன்” என்று அவனையே பிடித்துக்கொள்ளும் மஹான்களையும் பரமாத்மா நிறையப் படைக்கிறார்!
வேடிக்கை இருக்கட்டும். யதார்த்தமாகச் சொன்னாலும் ஈச்வரன்தான் ராஜா. தவர்கள், பித்ருக்கள் எல்லாம் அவனுடைய ராஜாங்கத்தில் சிப்பந்திகள் என்றாலும், பிரஜைகள் சிப்பந்திகள் மூலம் நடக்க வேண்டியதற்கு அவர்களிடம் போகவேண்டுமென்றுதான் ராஜா நினைப்பானே தவிர, அவர்களை விட்டுவிட்டுத் தன்னைப் பிடித்துக்கொள்ள வேண்டுமென்று நினைப்பானா? மநுஷ்ய ராஜாக்களைப் போல இல்லாமல் எல்லா ஜனங்களுக்கான எல்லாக் காரியங்களையும் தான் ஒருத்தனாகவே கவனிப்பதற்கு ஈச்வரனுக்கு சக்தி இருக்கத்தானிருக்கிறது என்றாலும், ஏதோ ஒரு காரணத்துக்காக, லீலைக்காக, அவர்தானே இப்படிக் கொஞ்சங் கொஞ்சம் அதிகாரம் கொடுத்து அநேக தேவஜாதிகள் இந்த லோக நிர்வாஹத்தை கவனித்துக் கொள்ளும்படியாக வைத்திருக்கிறார்? லோகத்தையும் நேச்சரையும் ஒருவன் தாண்டிப்போகிற வரையில், இவன் ஸம்பந்தமாகவே அவர் நியமித்திருக்கிற இந்த அதிகாரிகளை அவன் ஆச்ரயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்றுதானே இதற்கு அர்த்தம்? கீதையில் பகவானே இந்த விஷயத்தை ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார். “எல்லா தர்மத்தையும் மூட்டை கட்டிவிட்டு என் ஒருத்தனையே பிடிச்சுக்கோ; என்கிட்டேயே சரணாகதி பண்ணு” என்று அவர் சொன்னது மட்டும் பிரஸித்தி யாயிருக்கிறது. ஆனால் இப்படிச் சொன்னது கடைசியில்தான்5. அதற்கு முந்தி6, “பல தினுஸான ஆசைகள் உள்ளவர்கள் அந்தந்த ஆசைகளைப் பூர்த்தி பண்ணும் அநேக தேவதைகளை உபாஸனை ண்ணுகிறார்கள். அப்போது அவர்களுக்கு அந்த தேவதைகளிடம் ஸ்திரமான ஈடுபாட்டை நானேதான் உண்டுபண்ணுகிறேன். ஆனாலும் அந்த தேவதைகளுடனேயே நின்றுவிடாமல், அதுகளுக்கும் அந்தர்யாமியாக நான்தான் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற தத்துவத்தை மறந்து அந்த தேவதைகளே எல்லாம் என்று நினைத்துவிடக்கூடாது. இப்படி நினைக்கிறவன் அவை தருகிற அல்ப இச்சா பூர்த்திகளோடையே நின்றுவிடுகிறான். என் நினைவை விடாமல், அவற்றை உபாஸிக்கிறவன் நாளாவட்டத்தில் என்னிடமே வந்து சேருகிறான்” என்று சொல்கிறார்.
கீதையின் கடைசியில் சொன்னது ரொம்பவும் பக்வியாக இருப்பவனாலேயே முடியும். இங்கே, நடுவில் சொன்னது நடுவாந்தர ஸ்திதியிலிருக்கிறவனுக்கு. அவ்வளவுகூடப் போகாத நம் மாதிரியான பெரும்பாலருக்கு இதற்கும் முந்தி, ‘ஆரம்பத்திலேயே7 சொல்லும்போது அநேக தேவதைகள் மூலமும் தானே அந்தர்யாமியாகக் கார்யம் பண்ணுவதைகூடச் சொல்லாமலேதான் பேசுகிறார். என்ன சொல்கிறாரென்றால் : “பூர்வத்தில் ஸ்ருஷ்டியின்போதே ப்ரம்மா தேவ ஜாதி, மநுஷ்ய ஜாதி இரண்டையும்தான் படைத்தார். இந்த இரண்டு ஜாதிகளும் ஒன்றையொன்று ஆதரித்துக்கொண்டு, ஆராதித்துக் கொண்டு (“பரஸ்பரம் பாவயந்த:” என்கிறார்), இரண்டு பேரும் அதனால் உசந்த க்ஷேமத்தை (“ச்ரேய:பரம்” என்று இருக்கிறது) அடையவேண்டும் என்று அப்போதே பிரம்மா அவர்களுக்கு நியமனம் பண்ணி, இப்படி மநுஷ்யர்கள் தேவதைகளை உபாஸிப்பதற்கே யஜ்ஞங்களை ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார்” என்கிறார். லோக ஜீவனத்துக்கான மழை, இன்னம் அநேக போகங்களை தேவதைகள்தான் தருகிறார்கள். நாம் செய்யும் யஜ்ஞத்தினால் தேவதைகளின் தேவைகளைப் பூர்த்தி பண்ணி, நம்முடைய வாழ்வுக்கு வேண்டியதை அவர்களிடமிருந்து பிரதியாக வாங்கிக் கொள்ள வேண்டும். “தேவதைகளுக்கு யஜ்ஞ ஆராதனை பண்ணாமல் தாங்கள் மட்டும் சாப்பிடுகிறவர்கள் திருடர்கள்தான்; அவர்கள் சாதத்தைச் சாப்பிடவில்லை, பாபத்தையே சாப்பிடுகிறார்கள்” என்றெல்லாம் “மாம் ஏகம்” என்று முடித்த கிருஷ்ண பரமாத்மாவே ஏகப்பட்ட சாமிபூஜையை பலமாக விதிக்கிறார்!
யாரார் எந்தெந்த ஸ்டேஜில் எப்படிப்பட்ட பக்குவ ஸ்திதிகளிலிருப்பார்கள், அந்த ஸ்டேஜில் அவர்கள் என்ன பண்ணினால் நிறைவு பெறுவார்கள், ஆனால் இந்த நிறைவே நிறைந்த நிறைவு என்று நின்றுவிடாமல் மேலே போவார்கள் என்று ரொம்பவும் understanding-உடன் கவனித்து ஒரு ஜீவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டுபோவதற்காகவே, முடிவிலே ஜீவ-ப்ரம்ம அபேதத்தை சொன்ன ஹிந்து மதம் அடியிலே அநேக தேவதைகள், பித்ருக்கள் உபாஸனையைச் சொல்லியிருக்கிறது என்று புரிந்துகொள்ளாததால் ‘க்ரிடிஸைஸ்’ செய்கிறார்கள். அநேக ஜன்மாந்தர வாஸனைகளோடு பிறந்திருக்கிற பெருவாரியான ஜனங்களை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக, gradual-ஆகத்தான் முன்னேற்ற முடியும். அப்படியில்லாமல் முதலிலேயே மேலே ஆரம்பித்தால் அது பிடிபடாமல் கீழே விழும்படியாகத் தான் ஆகும் என்பதற்கு proof-ஆகவே மற்ற மதஸ்தர்களை விட நம்மிலேயே வெகு அதிகமாக மஹான்களும் ஸாதுக்களும் தோன்றியிருக்கிறார்கள்.
நாம் ரொம்பவும் அல்ப சக்தர்கள் என்ற அடக்கம் இருந்துவிட்டால் எல்லாம் ஸரியாய்விடும். நம் மனஸ் எதையும் நினைக்கிறது, நம் புத்தியானது பிரமிக்கும்படியான விஷயங்களைத் தெரிந்து கொள்கிறது என்கிறதில் தலை கனத்துப் போகக்கூடாது. புத்தி ப்ரகாசம் மநுஷ்ய ஜாதிக்கு நிறைய இருக்கலாம். ஆனால் புத்திக்கு மீறிய சக்திகளிடம் இந்த ஸாமர்த்தியத்தைக் காட்டி நாம் ஜயிக்க முடியாது. வேதப் பிரதிபாத்யமான, ஸாத்விகமான தெய்வ சக்திகள் மட்டுந்தானென்றில்லை. காத்து (காற்று), கருப்பு என்று அநேக ஆவி லோக சேஷ்டைகளைச் சொல்கிறார்களே, இதெல்லாம் நுழையவிடாமல் காபாற்றுகிற காத்தவராயன், கருப்பண்ணன் முதலானவற்றுக்குக்கூட நாம் அடங்கினவர்கள் என்பதால்தான் பிராம்மணர்கள் கூட பூசாரி பூஜை செய்யும் கிராம தேவதைகளுக்கும் வருஷத்தில் ஒரு நாளோ, தங்கள் வீட்டில் கல்யாணம், கார்த்திகை என்றாலோ வழிபாடு நடத்தும் வழக்கம் தொன்றுதொட்டு ஏற்பட்டிருக்கிறது. 8ஸ்ம்ருதியிலேயே [தர்ம சாஸ்திரத்திலேயே] ரிஷிகள், ‘இங்கே சொன்னதோடு எல்லாம் முடிந்துவிடவில்லை; பாக்கி பண்ண வேண்டியவைகளை ஸ்த்ரீகளிடமிருந்தும், நாலாம் வர்ணத்தவர்களிடமிருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருப்பது கிராமதேவதை வழிபாடும் சாஸ்திர ஸம்மதம்தான் என்பதற்கு ஆதரவாயிருக்கிறது.
ஈச்வர ஸ்ருஷ்டியில் உள்ள எல்லாவிதமான உயிர்களுக்கும் பிரீதியை உண்டுபண்ணி, அவற்றில் ஸௌம்யமானவை மேலும் ஸௌம்யமாகி லோகத்துக்கு நன்மை செய்யுமாறும், உக்ரமானவை சாந்தமாகி ஆவி சேஷ்டை, அம்மை நோய் முதலிய க்ஷாமங்களை உண்டாக்கமலிருக்குமாறும் செய்வது உத்தமமான காரியந்தான். விஷயம் தெரியாதவர்கள் ‘க்ரிடிஸைஸ்’ செய்வதால் இதெல்லாம் ரொம்பத் தாழ்ந்த ஸ்திதிக்கு மதத்தை இறக்கிவிடுகிறது என்று தப்பாக நினைத்து, விட்டுவிடக்கூடாது.
க்ரிடிஸிஸம் என்று நினைத்து அவர்கள் சொல்வதே பாராட்டி ஸர்ட்டிஃபிகேட் கொடுப்பதாகத் தான் எனக்கு தோன்றுகிறது. அத்வைதத்தைச் சொல்கிற மதமே அநேக தேவ-பித்ரு கர்மாக்களைச் சொல்வதுதான் நம் மதத்தின் பெருமை. இதனால்தான் அது ஸகலவிதமான லெவல்களிலிருப்பவர்களையும் ஒரே அமைப்பில் அரவணைத்துக்கொண்டு போகிறது என்பது ஒரு பெருமை. இதனால்தான் பரோபகாரம் என்பதை மநுஷ்ய லோகத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், மற்ற லோகத்து ஜீவர்களுக்குப் போஷணை தருவதாகவும் விஸ்தரித்து, அவர்களைக் கொண்டு நம் லோகத்துக்கும் நல்லதைப் பெற்றுத்தர முடிகிறது என்பது இன்னொரு பெருமை.
1. பரோபாகாரத்திலேயே இவ்வுரையின் தாத்பரியம் முடிவதால் இதனை இப்பிரிவில் சேர்த்துள்ளோம்.
2. பிரம்ம யஜ்ஞம், தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், மநுஷ்ய யஜ்ஞம், பூத யஜ்ஞம் என்பன. இவைப்பற்றி “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் ‘எள்ளும் தண்ணீரும் எங்கே போயின?‘, ‘பரோபகாரம்‘, ‘எல்லா உயிர்களின் திருப்திக்காக‘ என்ற உரைகள் பார்க்கவும்.
3. ஒரே பரமாத்மாவை பல மூர்த்திகளில் உபாஸிப்பது குறித்து “தெய்வத்தின் குரல்”, முதற்பகுதியிலுள்ள “இஷ்ட தேவதை“, இரண்டாம் பகுதியில் “ ” என்ற உரையும் பார்க்க. அங்கு கூறிய விஷயங்கள் விடுத்து இங்கு மேலே சொல்கிறோம்.
4. ப்ருஹதாரண்யகம் 4.4.2
5. கீதை பதினெட்டாவது அத்யாயத்தில்.
6. ஏழாவது அத்யாயத்தில்.
7. கீதை மூன்றாவது அத்யாயத்தில்.
8. இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” – இரண்டாம் பகுதியில் ‘ ‘ என்ற உரையில் பார்க்க.