புது வருஷம் பிறக்கும்போது பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அப்போது முதலில் ஒரு ச்லோகம் சொல்லப்படுகிறது:
வாகீசாத்யாஸ் – ஸுமநஸ் – ஸர்வார்த்தாநாம் உபக்ரமே |
யம் நத்வா க்ரு தக்ருத்யாஸ்யு: தம் நமாமி கஜாநநம் ||
‘கஜானன’ என்று முடித்ததால், ச்லோகம் பிள்ளையாரைப் பற்றியது என்று எல்லாருக்கும் புரிந்திருக்கும். அவரைப் பற்றி இங்கே என்ன சொல்லியிருக்கிறது? “ப்ரம்மாதி தேவர்களும்கூட எந்தக் கார்யத்தின் ஆரம்பத்திலும் எவரை நமஸ்கரித்தே எடுத்த கார்யத்தை முடித்தவர்களாகிறார்களோ அந்த கஜானனரை-யானை முகரை – நானும் நமஸ்காரம் பண்ணுகிறேன்” என்று சொல்லியிருக்கிறது.
‘அல்ப சக்தர்களாக உள்ள மநுஷ்யர்கள்தான் என்றில்லை, நிரம்ப சக்தி படைத்த தேவர்களும்கூடப் பிள்ளையாரை வணங்குகிறார்கள். எப்போதாவது, முக்யமான ஸமயங்களில், பிள்ளையார் சதுர்த்தி மாதிரியான தினங்களில்தான் வணங்குகிறார்கள் என்றில்லை. எப்போது பார்த்தாலும், எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் வணங்குகிறார்கள்’ என்று ச்லோகம் தெரிவிக்கிறது.
அது மட்டுமில்லை. வணங்கியதன் பயனைப் பூர்ணமாகப் பெற்றுவிடுகிறார்களென்றும் தெரிவித்துவிடுகிறது. அவர்கள் நமஸ்காரம் பண்ணினார்கள், இவர் அதை வெறுமனே வாங்கிக்கொண்டார் என்று முடிந்துபோகவில்லை. அவர்கள் எந்தக் கார்யத்தின் ஆரம்பத்தில் அவரை நமஸ்காரம் பண்ணினார்களோ அந்தக் கார்யத்தைப் பலிதமாக்கி, நிறைவேற்றிக் கொடுத்துவிடுகிறார். அவர்களை எடுத்த கார்யத்தை வெற்றிகரமாக முடித்தவர்களாக, அதாவது ச்லோகத்தில் சொல்லியிருக்கிறபடி ‘க்ருத க்ருத்யர்’களாக, ஆக்கிவிடுகிறார்.
தேவர்கள்கூடப் பிள்ளையாரை நமஸ்கரிக்கிறார்கள் என்பதற்கு ச்லோகத்தில் “வாகீசாத்யா: ஸுமநஸ்” என்று சொல்லியிருக்கிறது. “வாகீசன் முதலான தேவர்கள்” என்று அர்த்தம்.
‘ஸுமநஸ்’ என்றால் தேவர்.