‘ஸுமநஸ்’ என்றால் நேர் அர்த்தம் ‘நல்ல மனம்’. நல்ல மன விசேஷம்தான் தேவ சக்தி. துஷ்ட மனஸ்தான் அஸுர சக்தி. புஷ்பத்துக்கும் ஸுமநஸ் என்று பேர் உண்டு. ஒரு செடி அல்லது கொடியின் நல்ல மனம் மாதிரி இருப்பது அதன் புஷ்பம். நல்ல மனஸுக்கு அடையாளம் என்ன? அதில் அன்பு ஊறிக்கொண்டிருப்பதுதான். இம்மாதிரி ஒரு செடியிலோ கொடியிலோ மாதுர்யத்தின் ஸாரமான தேன் ஊறிக்கொண்டிருப்பது அதன் புஷ்பத்தில்தானே? அதன் பழத்தை விடவும் தித்திப்பு தேன்தான். கசப்பாகக் கசக்கும் காய், பழம் கொண்ட தாவரவகைகள் எத்தனையோ உண்டு. ஆனால் அவற்றிலும் புஷ்பத்திலே ஊறுகிற தேன் கசப்பாக இருப்பதாக எங்குமே கிடையாது. ஒரு செடி அல்லது கொடியில் பார்க்கவும் ரொம்ப அழகானது, ஸ்பர்சத்துக்கும் ரொம்ப மென்மையானது, வாஸனையும் அதிகம் கொண்டது, எல்லாவற்றுக்கும் மேலாக அதனுடைய பரம மாதுர்ய ஸாரத்தைத் தருவது அதன் புஷ்பந்தான். இப்படிச்சொன்னதால் ஐம்புலன்களில் கண், சர்மம், மூக்கு, நாக்கு ஆகிய நான்குக்கும் ஒரு புஷ்பம் இன்பம் ஊட்டுவதாகத் தெரிகிறது. கண்ணுக்கு ரொம்பவும் அழகான ரூபம் பூவுக்கு இருக்கிறது. சர்மத்துக்கு ஸுகமாக அதன் மார்தவம் (ம்ருதுத்தன்மை). மூக்குக்கு நல்ல ஸுகந்தம். நாக்குக்கு ருசியான தேன். பாக்கி இருப்பது காது. அந்தக் காதுக்கு இன்பமான வண்டுகளின் ரீங்காரத்தையும் ஒரு புஷ்பம் தன் தேனைக்கொண்டு வரவழைத்துவிடுகிறது!
ஸுமநஸ் என்றால் அழகானது என்றும் அர்த்தம்.
இப்படி நல்ல மனம், அழகு, தேவர்கள், புஷ்பம் ஆகிய நாலுக்கும் ‘ஸுமனஸ்’ என்று பெயரிருப்பதை வைத்துச் சிலேடை செய்து பல ச்லோகங்கள் உண்டு. (ஸ்ரீ அனந்தராம) தீக்ஷிதர் பிராபல்யப் படுத்திவரும் மஹிஷாஸுரமர்த்தினி ஸ்தோத்ரத்தில் கூட இப்படி ‘ஸுமநஸ்—ஸுமநஸ்’ என்று மூன்று நாலு தரம் அடுக்கிக்கொண்டு போயிருக்கிறது. ‘நல்ல மனம் கொண்ட தேவர்கள் அர்ச்சனை பண்ணுகிற அழகான புஷ்பங்களின் நிரம்பவும் மநோஹரமான காந்தியுடன் கூடியவளே!’ என்று ஸ்தோத்ரிக்கும்போது, ‘நல்ல மனம்’, ‘தேவர்கள்’, ‘அழகு’, ‘புஷ்பம்’, ‘நிரம்பவும் மநோஹரமான’ என்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ஸுமந’வைப் போட்டு அழகாக ச்லோகம் அமைந்திருக்கிறது.
தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர் பிள்ளையார் என்று சொல்லும்போதே நல்ல மனம்கொண்ட எவரானாலும் அவரை பூஜை பண்ணித்தான் பண்ணிவிடுகிறார்கள் என்றும் தெரிவித்துவிடுகிற மாதிரி “வாகீசாத்யா: ஸுமநஸ:” என்று, தேவர்களைக் குறிப்பாக இந்த ஸுமனஸ் என்ற பெயரால் சொல்லியிருக்கிறது.
நல்ல மனமுள்ளவரெல்லாம் ஒருத்தரைப் பூஜை பண்ணுகிறார்களென்றால், அப்படிப் பூஜிக்கப்படுபவரும் ரொம்ப நல்ல மனஸ் படைத்தவராகத்தானே இருக்க வேண்டும்?