‘தத்-ஹேது ‘ நியாயம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ந்யாயங்களில் ஒன்றான தத் – ஹேது ந்யாயத்துக்கு இங்கே எடுத்துக்காட்டுக் கொடுத்துவிடுகிறார். ‘தத் – ஹேதோ:இதி நீதி’ என்று (ச்லோகத்தில்) வருவதற்கு ‘தத்ஹேது என்னும் நியாயம்’ என்று அர்த்தம். நீதி, நியாயம் இரண்டும் ஒன்றுதான். பேச்சுவழக்கில்கூட நீதிபதி – ந்யாயாதிபதி, நீதிமன்றம் – ந்யாய ஸ்தலம் என்று இரண்டு விதமாகவும் சொல்கிறோமல்லவா?

இந்த தத் – ஹேது ந்யாயத்தைக் கொஞ்சம் புரிய வைக்கப் பார்க்கிறேன்.

‘ஹேது’ என்றால் காரணம். ‘ஏது’ என்று தமிழில் சொல்வார்கள். ‘ஒய’ரைத் தொட்டால் ஆபத்துக்கு ஏதுவாகும் என்று சொல்கிற இடத்தில் ‘ஏது’ என்பது காரணம் என்றுதானே அர்த்தம் கொடுக்கிறது? ஹேதுவுக்கு ‘ஆப்போஸிட்’ அஹேது. அது பெயரெச்சமாக வரும்போது ‘அஹைதுக’ என்று ஆகும். பகவான் காரணமே இல்லாமல் காட்டுகிற கருணையை ‘அஹைதுக க்ருபா’ என்பார்கள். இதேமாதிரி ஒரு ஞானி காரணமேயில்லாமல் காட்டுகிற பக்தியை ‘அஹைதுகீ பக்தி’ என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது. பக்தி மார்க்கத்திலேயே போகிற பக்தன் பகவானை அடையவேண்டும் என்ற காரணத்துக்காக பக்தி பண்ணுகிறான். ஞானியோ பகவானின் நிர்குண ஸ்வரூபத்தைத் தன்னிலேயே பெற்றுவிட்டவனாதலால் இனிமேல் தான் பகவானை அடையவேண்டுமென்றில்லை. ஆனாலும் காரணமேயில்லாமல் பரம ஞானிகளும் தன்னியல்பாக உருகி உருகி பக்தி பண்ணியிருக்கிறார்கள். இதைத்தான் பாகவதம் “அஹைதுகீ பக்தி” என்கிறது.

‘தத்-ஹேது ந்யாய’த்தில் ஹேது என்றால் காரணம், அதாவது உபாயம். ‘தத்’ என்றால் ‘அது’. எது? காரணத்தால், உபாயத்தால் அடையும் லக்ஷ்யம், அல்லது பலன். ஒரு பலனை (‘தத்’தை) அடையப் பல உபாயங்கள் (‘ஹேது’க்கள்) இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனாலும் இவை தாங்களே நேராகப் பலன் தர முடியாமல், நேர்ப் பலன் தருவதாக உள்ள இன்னொரு உபாயத்தின் ஸஹாயம் பெற்றே பலன் கொடுக்க முடியும் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, இந்த உபாயங்களில் ஒன்றை நாம் கைக் கொண்டால், முதலில் நேர் உபாயத்தை இதற்கு ஸஹாயமாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது, இது பலன் கொடுக்கக்கூடியதாக ஆவதற்கு உபாயமாக நேர் உபாயத்தை ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளணும். அப்புறம் இதைக் கொண்டு பலனைப் பெற வேண்டும். அதாவது முக்ய லக்ஷ்யம் (தத்) என்று ஒன்று, அதை அடைய நாம் கைக்கொள்ளும் உபாயம் (ஹேது) என்று ஒன்று என்பவற்றோடு நிற்காமல், இந்த உபாயத்தைப் பலனளிக்கத்தக்கதாக வேண்டும் என்ற இன்னொரு லக்ஷ்யமும் (‘தத்’தும்) – இந்த இன்னொரு லக்ஷ்யத்தை உபலக்ஷ்யம் என்று சொல்லலாம் – இந்த உபலக்ஷ்யத்தை நிறைவேற்றித் தருவதாக இன்னொரு ஹேதுவும் (இந்த இரண்டாவது ஹேதுவை உபஹேது என்று சொல்லலாம்; இப்படியொரு உபஹேதுவும்) வேறு சேர்கின்றன. ஆனால் எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கணும்? உபலக்ஷ்யத்தை அடைவிக்கும் உபஹேதுவேதான் முக்ய லக்ஷ்யத்திற்கும் நேர் ஹேதுவாக இருக்கிறதென்று பார்த்தோமே? ஆகையால் அந்த நேர் ஹேதுவைக்கொண்டே ‘டைரக்டா’க நம்முடைய முக்ய லக்ஷ்யத்தை அடைந்துவிட்டுப் போகவேண்டியதுதானே? வேறே ஒரு ஹேதுவைக் கொண்டுவருவானேன்? நேர் ஹேதுவைக்கொண்டு அந்த இன்னொரு ஹேது பலிக்கும் படிச் செய்வது என்ற இன்னொரு லக்ஷ்யத்தை (‘தத்’தை) வேறே இழுத்துவிட்டுக் கொள்வானேன்?

இதைத்தான் ‘தத்-ஹேது ந்யாயம்’ என்று கேள்வி ரூபத்தில் சொல்வது. ‘தத்-ஹேதோரேவ தத்-ஹேதுத்வே மத்யே கிம் தேந?‘ என்பதுதான் அந்தக் கேள்வி. இரண்டு ‘தத்’ வருகிறது. ‘தேந’ என்று முடிவதும் ‘தத்’தின் மூன்றாவது வேற்றுமைதான். (அதற்கு) ‘தத்’ தினால் என்று அர்த்தம். இந்த வாக்யத்திற்கு என்ன அர்த்தமென்றால்: “‘தத்’துக்கு ஹேதுவாயிருப்பதே ‘தத்’துக்கு ஹேதுவாயிருக்கும்போது நடுவாந்தரத்தில் ‘தத்’தினால் ஆவதென்ன?”

புரியவில்லையா? யோசித்துப் பார்த்தால் புரிந்துவிடும். முதல் ‘தத்’ என்பது உபலக்ஷ்யம். இரண்டாவது ‘தத்’ முக்யலக்ஷ்யம். மூன்றாவதாக ‘தேந’ என்பது குறிப்பிடும் ‘தத்’ தும் உபலக்ஷ்யம்தான். இப்படிப் புரிந்துகொண்டால் அந்த வாக்யத்தின் அர்த்தம் ‘உபலக்ஷ்யத்துக்கு உபாயமாயிருப்பதே முக்ய லக்ஷ்யத்துக்கு உபாயமாக இருக்கும்போது நடுவில் உபலக்ஷ்யம் என்ற ஒன்றினால் ஆவதென்ன- உபலக்ஷ்யம் என்று ஒன்றை நடுவில் கொண்டுவருவானேன்? ‘என்பது.

த்ருஷ்டாந்தம் காட்டினால் தெளிவாகப் புரியும்: அரிசி மூட்டை வாங்கணும். அதுதான் லயம்-தத். ‘கிராமத்தில் பண்ணையாரிடம் மூட்டை இருக்கும். அவரிடம் போய் வாங்கலாம்’ என்று நினைக்கிறோம். பண்ணையார் ஹேது. ஆனால் அவர் நம்மூர்ப் பலசரக்குக் கடைக்காரர் சிபாரிசு பண்ணினால்தான் மூட்டை போடுவார். இப்படிப் பலசரக்குக்காரர் மூலம்தான் நாம் பண்ணையாரைப் பிடிக்க வேண்டுமென்னும்போது, முன்னே ஹேதுவாகச் சொன்ன பண்ணையாரே பலசரக்குக்காரரை கொண்டு நாம் அடைய வேண்டிய (உப) லக்ஷ்யம் (‘தத்’) ஆகிறார். இதற்குப் பலசரக்குக்காரர் ஹேதுவாகிறார் (உபஹேது.) வேடிக்கை என்னவென்றால், பலசரக்குக்காரரிடமே அரிசியும் இருக்கிறது. வேறே யாருடைய சிபார்சும் இல்லாமல் அவரே நமக்கு அதை விற்கவும் விற்பார். அதாவது அவரே நம்முடைய முக்ய லக்ஷ்யத்திற்கு நேர் ஹேதுவாக இருக்கிறார். இப்படியிருக்கும்போது இவரிடமே அரிசி வாங்கி வியாபாரத்தை ஈஸியாக முடித்துவிட வேண்டியதுதானே? நடுவாந்தரத்தில் பண்ணையாரை இழுத்துவிட்டுக்கொண்டு, இந்தப் பலசரக்குக்காரர் மூலமே அவரை அரிசி விற்கும்படிப் பண்ணுவது என்ற கார்யத்தை (இன்னொரு லக்ஷ்யத்தை-‘தத்’ தை) வேறே உண்டாக்கிக்கொள்வானேன்?

இதோ இந்தக் குத்துவிளக்கில் இந்த (கிழக்கு) முகத்தை ஏற்றவேண்டுமானால் என்ன செய்யணும்? ஒரு வத்திக் குச்சியைக் கிழித்து இந்த (கிழக்கு முகத்) திரியை ஏற்றணும். அவ்வளவுதான் பண்ணவேண்டியது. யாராவது, ‘முதலிலே அநதப் பக்க (மேற்கு முகத்) திரியை ஏற்றுங்கள். அப்புறம் அந்தத் திரியினால் இந்தத் திரியை ஏற்றுங்கள்’ என்றால்….. (சிரிக்கிறார்கள்.) நேரே இந்தத் திரியையே ஏற்றலாமாயிருக்க, மத்தியிலே இன்னொரு திரி எதற்கு? ‘தத்-ஹேதோ ரேவ தத்-ஹேதுத்வே மத்யே கிம் தேந?’

‘ந்யாயேந்து சேகர’ ச்லோகத்தில் இதைப் பிள்ளையாருக்கு எப்படிப் பொருத்தியிருக்கிறது?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 'பெரியவா'ளின் பிள்ளையார் ஸ்லோகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  இதர தெய்வ உபாஸகரும் வழிபடுவது
Next