அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-
த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது: |
தத்-ஹேதோரிதி நீ திவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்
ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ)வ்யாத் ஸ ந: ||
இது தான் ‘ந்யாயேந்து சேகர’ த்தின் மங்கள ச்லோகம்.
இதற்கு என்ன அர்த்தமென்றால் : ‘வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விக்நேச்வரர் அல்லாத இன்னொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விக்நேச்வரருடைய இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் ‘தத்-ஹேது ந்யாயம்’ தெரிந்தவனாயிருந்தாலோ (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விக்நேச்வரர் ஒருவரை மாத்திரம் பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்து தர வல்லவராக உள்ள அந்த விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’ என்பதாகும்.