ஸ்ருஷ்டி காலத்திலிருந்து பகவான் வரிசையாக மஹாபுருஷர்களை ஆசார்யர்களாக அனுப்பி ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என்பதான இரு தர்மங்களையும் உபதேசிக்கச் செய்துவந்தான். நிவ்ருத்திதான் முடிவான மோக்ஷ ஸித்தியானதால் அதற்குத் தானே குருவாக தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் இருந்தான். அது பரமசிவ ஸ்வரூபம். அவர் தான் முக்யமாக நிவ்ருத்திக்கு (தெய்வம்). விஷ்ணுவும் ஹம்ஸாவதாரம், தத்தாத்ரேயர், ஹயக்ரீவர் என்ற ரூபங்களில் நிவ்ருத்தி தர்மத்தை உபதேசித்தார். ஆனாலும் இவற்றில் தசாவதாரம் மாதிரி அவ்வளவு சக்தியைக் காட்டவில்லை. தக்ஷிணாமூர்த்தி, ஹம்ஸர், ஹயக்ரீவர் ஆகியோர் லோகத்தில் ஸஞ்சாரம் பண்ணி ஞானோபதேசம் செய்யவில்லை. ஸநகாதியர், ப்ரம்மா போன்றவர்கள் அவர்களைத் தேடிப்போய் உபதேசம் பெற்றனர். தக்ஷிணாமூர்த்தி வார்த்தையால் உபதேசிக்காமல், அநுபவமாகவே அநுக்ரஹித்துவிடுவார். இப்போது நாம் தெய்வங்களை வேண்டிக் கொள்ளும்போது நம்முடைய வேண்டுதல்களில் பல நிறைவேறுகின்றன. ஆனால் அந்த தெய்வமே ப்ரத்யக்ஷமாகி அப்படிப் பண்ணுவதில்லை. ஸூக்ஷ்மமாகவே பண்ணுகின்றன அல்லவா? அப்படி தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர் ஆகியவர்களிடம் ஞானத்துக்காக வேண்டிக்கொண்டு அந்த அநுக்ரஹத்தை ஸூக்ஷ்மமாகப் பெற்றவர்கள், பெறுபவர்கள் உண்டு. சிவாலயமென்றால் அங்கே ஞானதாதாவாக அவர் தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் நிச்சயம் இருப்பாரென்று பாமர ஜனங்கள் உள்பட எல்லாரும் தெரிந்துகொண்டு, அவருக்கு முன்னால் ஒரு க்ஷணம் கண்ணை மூடிக்கொண்டு, ஞானம் (என்பது) என்னவென்று தெரியாவிட்டாலும் அவரிடம் வேண்டிக்கொள்ளுவார்கள். இந்த அளவுக்கு ஹயக்ரீவரைப் பற்றிச் சொல்லமுடியாது. இப்படிப் பரமசிவனையே நிவ்ருத்திக்கு முக்யமாக நினைப்பதாயிருக்கிறது. தத்தாத்ரேயரைப் போல் ஸஞ்சாரம் செய்தவர்கள் — ஸநகாதியரும்கூட விஷ்ணுவின் அம்சாவதாரங்கள்தான்; அவர்களும் ஸஞ்சாரம் செய்வார்கள் — இவர்களெல்லாம் லோகத்திலே பல பேருக்குப் பல ஸமயங்களில் நிவ்ருத்தியை உபதேசித்தார்கள். ஆனாலும் உபதேசமே தங்கள் கார்யம் என்று ஸித்தாந்தமாக வகுத்துக்கொண்டு எங்கே பார்த்தாலும் சிஷ்ய ஜனங்களுக்குச் சொல்லிக்கொண்டு போகவில்லை.
ப்ரவ்ருத்தி தர்மத்திற்குப் பரமாத்மா இவ்வளவு தூரம் தானே நேராகச் செய்யவேண்டியிருக்கவில்லை. கார்யத்தை விட்டு, மனஸை விட்டு, நிவ்ருத்தி என்று ஞானத்தில் போவதுதான் ஜனங்களுக்குக் கஷ்டமானதால் அதை உத்தேசித்தே அதிகமாக மஹான்களை அனுப்புவது, தானும் உபதேசிப்பது என்று செய்தார். மனஸையும் கார்யங்களையும் வைத்துக்கொண்டு செயல்படுவதுதான் மநுஷ ஸ்வபாவமானதால், இவற்றை ஈடுபடுத்தியே செய்கிற ப்ரவ்ருத்தி ஸாதனைக்கு அவரவரின் வித்யாப்யாஸ குரு ச்ரௌத, ஸ்மார்த்த சாஸ்த்ரங்களின்படி சொல்லிக்கொடுப்பதே போதுமானதாயிருந்தது.
என்றாலும் இந்தக் கர்மாநுஷ்டானங்களை நிஷ்காம்யமாகச் செய்தால் நிவ்ருத்தி மார்க்கத்திற்கு முன்னேறுவதற்கான சித்த சுத்தியை அளிக்கவல்ல யோகமாகவே அது ஆகும் என்ற ரஹஸ்யத்தை ஆதியில் பகவானேதான் விவஸ்வானுக்கு, அதாவது ஸூர்யனுக்கு, உபதேசிக்கும்படியிருந்தது. ஸூர்யன் நம்முடைய மன்வந்தரத்தின்1 அதிபதியான வைவஸ்வத மநுவுக்குக் கர்ம யோகமாகிய ப்ரவ்ருத்தி தர்மத்தை (அதாவது நிவ்ருத்தி தர்மத்திற்கு வழிபோட்டுக் கொடுப்பதாக உள்ள ப்ரவ்ருத்தி தர்மத்தை) உபதேசம் செய்தார். வைவஸ்வதன் என்றால் விவஸ்வானின் பிள்ளை என்று அர்த்தம். வைவஸ்வத மநு தன்னுடைய பிள்ளையும் ஸூர்யகுலத்தில் முதல் ராஜாவுமான இக்ஷ்வாகுவுக்கு உபதேசம் செய்தார். இப்படியே ப்ரவ்ருத்தி தர்மம் கர்மயோகமாகப் பிள்ளை பிள்ளைவழி நெடுங்காலம் உபதேசிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
விவஸ்வானான ஸூர்யனுக்குத் தான் கர்ம யோகம் உபதசேம் பண்ணி, அது பிள்ளை வழியாக அநேக ராஜரிஷிகளின் வழியாகப் போனதை கீதையில் பகவான் சொல்லியிருக்கிறார்2. கீதையில் கர்மம், ஞானம் ஆகிய இரண்டு யோகங்களும் உபதேசிக்கப்படிருக்கின்றன. அதோடு இதுவரை நான் சொல்லாத பக்தி யோகம் என்பதும் உபதேசிக்கப்பட்டிருக்கிறது.
1பிரம்மா விழிப்பு நிலையில் செயற்படும் அவரது ஒரு பகற்காலம் ஆயிரம் சதுர்யுகம் கொண்டது. ஸ்ருஷ்டியும் அப்போதே இயங்கும். அப்பகற்பொழுது முடிந்ததும் இதே போல் ஆயிரம் சதுர்யுகம் கொண்டதான பிரம்மாவின் இரவு பிறக்கும். அப்போது அவர் உறங்குவார். ஸ்ருஷ்டியும் செயலற்று ஒடுங்கிவிடும். கல்ப பிரளயம் என்பது இதுவே. இரவு முடிந்து பிரம்மாவுக்கு மறுதினம் தொடங்கும்போது ஸ்ருஷ்டி மறுபடி தொடங்கிவிடும். ஸ்ருஷ்டியானது இயக்கத்திலுள்ள ஆயிரம் சதுர் யுகங்களில் பதினான்கு மநுக்கள் தோன்றி ஸ்ருஷ்டியின் மீது மேலாதிக்கம் செலுத்துவர். ஒரு மநுவின் இவ்வாட்சிக்காலத்துக்கே மன்வந்தரம் என்று பெயர். ஒவ்வொரு மநுவின் காலம் முடிந்த பின்னும் மன்வந்ததர பிரளயம் என்பது ஏற்படும். அடுத்த மநு அடுத்த மன்வந்தரத்தின் முதற் பிரஜையாகத் தோன்றி மனித குலத்தைத் தோற்றுவிப்பார். தற்போதைய ச்வேதவராஹ கல்பத்தில் நாம் ஏழாவது மநுவான வைவசஸ்வதரின் மன்வந்தரத்தில் இருக்கிறோம்.
2நான்காம் அத்தியாயத் தொடக்கம்.