காலப் போக்கில் கர்ம யோக நலிவு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸ்ருஷ்டி உண்டாகும்போதே, ‘நம்முடைய ஸ்ருஷ்டியில் இத்தனைதானென்றில்லை, அத்தனை தினுஸான மனோபாவம் கொண்ட ஜீவர்களும் இருந்து, நமக்குப் பெரிய நாடக விநோதமாகப் பிரபஞ்சம் இருக்கணும். இதற்கு, ஜீவனுக்குக் கொஞ்சம் ஸ்வாதந்த்ரியமும் இருக்கணும். ஆனாலும் விநோதம் விபரீதமாகப் போகவிடப்படாது’ என்று பகவான் நினைத்து ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி மார்க்கங்கள் என்ற இரண்டை வேத வாயிலாக வெளிப்படுத்தினான்.

ஆதி காலங்களில், பூர்வ யுகங்களில் ஜனங்கள் எவரெவர்களுக்கு எந்த மார்க்கமோ அதை எடுத்துக் கொண்டு ச்ரேயஸை அடைந்து வந்தார்கள். நிவ்ருத்தியில் சில பேர் போனார்கள். ப்ரவருத்தியில் மற்றவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு முக்யமான விஷயமென்னவென்றால்: ஜீவ ஸ்வாதந்த்ரியத்தை ரொம்பவும் இஷ்டப்படி ஓடவிடாமல் பூர்வ யுகத்து ஜனங்கள் ஸகலருமே ஈச்வரனுக்குக் கட்டுப்பட்டு, ஈச்வர ப்ரீதிக்காகவே செய்யணும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு ஆசைகள் அளவுக்கு மீறிக் கவடு விட்டுக் கொண்டே போகவில்லை. இதனால் என்னவாயிற்று என்றால் ஏதோ ஒரு காலம் வரையில் போக்ய பலன்களுக்காகவே அவர்கள் கர்மங்களைப் பண்ணி வந்தாலும்கூட அப்புறம் அந்த ஸெளக்கியங்களில் பற்றுக் குறைந்து போய், ஆத்மாவைக் கடைத்தேற்றிக்கொள்ளவேண்டுமென்று நினைத்தார்கள். ஆனால் ஞான நிஷ்டைக்கான யோக்யதை தங்களுக்கு இல்லை என்று உணர்ந்திருந்தார்கள். ஆகையால் அதற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதான பலத்யாகம் செய்து கர்ம மார்க்கத்தைக் கர்மயோகமாகவே அநுஷ்டித்து வந்தார்கள். ப்ரவ்ருத்தி தர்மம் அந்த ஆதி காலங்களில் கர்மயோகமாகவே உசந்த நிலையில் ப்ரகாசித்து வந்தது. இந்த யோகத்தில் முன்னேறி நல்ல சித்த சுத்தி உண்டான பிறகு ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு நிவ்ருத்தியில் போய் மோக்ஷமடைந்து வந்தார்கள்.

தர்ம சாஸ்திரங்களில் பொதுவான வாழ்க்கை முறையாகவே க்ருஹஸ்தாச்ரமத்திற்கு அப்புறம் வானப்ரஸ்த்யம், ஸந்நியாஸம் என்று நிவ்ருத்தியை விதித்திருப்பதால் அப்படியே எல்லாரும் அந்த நாளில் பண்ணி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு வயஸுக் கட்டம் வரையில் காம்யமாகக் கர்மாக்கள் பண்ணி போகங்களை அநுபவித்தாலும், அப்புறம் பற்றுக்களைக் குறைத்துக்கொண்டு நிஷ்காம்ய யோகமாக ஆரம்பித்திருக்கிறார்களென்று தெரிகிறது. ஸூர்யவம்ச ராஜாக்களைப் பற்றிக் காளிதாஸன் இப்படித்தான் ‘ரகுவம்ச’த்தில் சொல்லியிருக்கிறார் — அவர்கள் யௌவனத்தில் விஷய ஸுகப் பற்றுள்ளவர்களாக இருந்தாலும் அந்திமத்தில் யோகிகளாகியே சரீரத்தை விட்டார்களாம்.*

அந்த நாளிலுங்கூட இப்படிக் கர்மாவை யோகமாக்கிக் கொள்ளமுடியாத சில பேரும் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களும் கர்ம யோகிகள், ஞான யோகிகள் ஆகியவர்களைப் போற்றி நமஸ்கரித்துக்கொண்டு, ‘நம்மால் அப்படி இருக்க முடியாவிட்டாலும் அதுதான் நித்ய ச்ரேயஸுக்கான வழி’ என்றே தெரிந்துகொண்டிருந்தார்கள். தங்களுடைய (யோகமில்லாத) கர்ம மார்க்கம்தான் உசத்தி என்று ஸ்தாபிக்கப் பார்க்கவில்லை.

அப்புறம், போகப்போக, ஜனங்களுக்கு ஆசைகள் அதிகமாக ஆரம்பித்தன. அதனால் பலனை விரும்பியே, பலனுக்காகவே கர்மா செய்வது ஜாஸ்தியாயிற்று. பலத்யாகம் செய்து சித்த சுத்தி பெறுவது, அப்புறம் நிவ்ருத்திக்குப் போவது என்பது குறைந்துகொண்டே வந்தது. இப்படிக் கர்மா செய்தவர்கள், ‘இதுதான் ஸரி. இதுதான் பரம புருஷார்த்த ஸாதனம். கர்மாவை விட்ட ஸந்நியாஸ மார்க்கம் ரொம்பத் தப்பு’ என்று பெரிய ஸித்தாந்தமாகவே எழுதி வைத்துவிட்டார்கள். ஈச்வரன் ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்பதையெல்லாம் தள்ளிவிட்டு, ‘வேதோக்த கர்மா தானாகவே பலன் தருகிறது. ஈச்வரெனென்ற பலதாதாவுமில்லை. கார்யமில்லாத ஆத்மானந்த மோக்ஷமுமில்லை. வேதத்தில் சொன்ன கர்மாக்களை அதற்கான பலனுக்காகவே பண்ணி ஸ்வர்க்கத்துக்குப் போவோம். அப்படியே ஸ்வர்க்கத்துக்கு மேலே மோக்ஷம் என்று ஒன்று இருக்குமானாலும், ஒன்றும் செய்யாமல் ஞான விசாரம் என்று பண்ணிக் கொண்டிருந்தால் அது கிடைத்துவிடும் என்றால் எப்படி? நாம் கடைசி வரை பண்ணவேண்டியது கர்மாதான். அதனாலேயே அந்த மோக்ஷம் வருமானால் வரட்டும்’ என்று ஸித்தாந்தம் பண்ணினார்கள்.

நிவ்ருத்தி, ஞானம், ஸாக்ஷாத்காரம் ஆகியவற்றை வேதங்களின் முடிவுப் பகுதிகளான உபநிஷத்துக்கள் சொல்கின்றன. அவற்றை வேதத்தின் உத்தர (பின்) பாகம் என்பார்கள். ஞான காண்டம் என்ற அதை அப்படியே தள்ளிவிட்டு, வேதத்தின் பூர்வ (முன்) பாகத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை மாத்திரம் ஒப்புக்கொண்டு இப்படிச் செய்த ஸித்தாந்தத்திற்குப் ‘பூர்வ மீமாம்ஸை’ என்றும் ‘கர்ம மீமாம்ஸை’ என்றும் பெயர். ‘மீமாம்ஸை’ என்றால் ‘நல்ல விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி’.

உத்தரபாகமான ஞான காண்டத்தை ஆதாரமாகக் கொண்டு உண்டான ஸித்தாந்தத்திற்கு ‘உத்தர மீமாம்ஸை’ என்று பெயர். ஆனாலும் அதை ‘வேதாந்தம்’ என்று குறிப்பிடுவதே வழக்கமாயிற்று. ஒவ்வொரு வேத சாகையின் அந்தத்திலும் (முடிவாக) வரும் உபநிஷதங்களைக் குறித்த சாஸ்திரமாதலால் ‘வேதாந்தம்’ என்று பெயர் வந்தது. பூர்வ மீமாம்ஸையையே மீமாம்ஸை என்று சொல்வதாக வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்த விஷயம் இருக்கட்டும்.


* ரகுவம்சம் 1.8

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கர்ம மார்க்கத்தின் இருவித பலன்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  இரு மார்க்கங்களின் உபதேசங்கள்
Next