‘நிரந்தர’ யோகமான அத்வைதம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அப்படிச் சேர்வதிலும் உத்தமநிலை நிரந்தரமாகப் பரமாத்மாவுடன் சேர்வதுதான் என்று உபநிஷத்துக்கள் சொல்கின்றன. ‘நிரந்தரமாக’ என்றால் ‘காலத்தில் சாச்வதமாயிருக்கிற’ என்று நாம் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். அதுவும் தப்பில்லைதான். ‘அந்தரம்’ என்றால் இடைவெளி. ‘நிரந்தரம்’ இடைவெளியில்லாதது. காலத்தில் இடைவிடாமலிருப்பது ‘நிரந்தரம்’ என்பது ஸரிதான். ஆனால் ‘காலம்’ என்பது இங்கே நாம் அதிகப்படியாகச் சேர்த்துக்கொள்ளும் அபிப்ராயம். ‘நிரந்தரம்’ என்றால் வெறுமனே ‘இடைவெளியற்றது’ என்றுதான் அர்த்தம். இடத்திலே இடைவெளியில்லாமல் நிறைந்திருப்பதும் ‘நிரந்தரம்’ தான். இப்படி ‘காலத்தில்’, ‘இடத்தில்’ என்றெல்லாம் நாம் ‘ஸப்ளை’ செய்து வருவித்துக் கொள்ளாவிட்டால், ‘நிரந்தரம்’ என்பதற்கு ‘இடைவெளியில்லாதது’ என்று மட்டும்தான் அர்த்தம். ‘பரமாத்மாவோடு நிரந்தரமாகச் சேர்வது’ என்றால் அவனுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடைவெளியே இல்லாமல் ஒன்று சேர்ந்துவிடுவது என்றுதான் அர்த்தம். ஒன்று சேர்ந்துவிடுவது என்பது ஒன்றாகவே ஆகிவிடுவதுதான். ஒன்றாகவே ஆகிறவரைக்கும் கொஞ்சமாவது இடைவெளி இருந்துகொண்டுதானிருக்கும். கொஞ்சம் இடைவெளி இருந்தாலுங்கூட அவன் அங்கே, நாம் இங்கே என்று பிரிந்து பேதப்பட்டு இருக்கிறோமென்றுதான் அர்த்தம். இப்படி இருக்கும்வரையில், ‘இந்த இடைவெளி இன்னும் ஜாஸ்தி ஆயிடுமோ?’ என்ற பயம் இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனபடியால் இடைவெளி அடியோடு இல்லாமல் அவனிடம் ‘நிர்-அந்தர’மாக ஐக்யமாகி, அவனேயாகிவிட வேண்டும். ஜீவ-ப்ரஹ்ம அபேத யோகம் எனும் இதுதான் ச்ருதி சிரஸ் (வேதத்தின் முடியான உபநிஷத்) தருகின்ற பரம உத்தம யோகம். ‘அந்தரம் இருந்தால் அதாவது துளி இடைவெளி, துளி பேதம் இருந்தால்கூட இந்தச் சேர்க்கை எப்பொழுது முடிந்து விடுமோ என்ற பயம் இருந்துகொண்டேதான் இருக்கும்’ என்று தைத்திரீயோபநிஷத்தின் ப்ரஹ்மவல்லியில் சொல்லியிருக்கிறது. (ஆனந்தவல்லி என்றும் அந்தப் பகுதியைச் சொல்வதுண்டு.) முமுக்ஷுவானவன் எப்போது ப்ரஹ்மத்திலேயே நிலைகொள்கிறானோ அப்போதுதான் அபய ப்ரதிஷ்டை பெறுகிறான் என்றும் இதற்கு முந்தி சொல்லியிருக்கிறது.* அத்வைதம், அத்வைதம் என்பது ஜீவாத்மா இப்படி ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து அதுவே ஆகி விடுவதுதான்.

இந்த ஜீவ-ப்ரஹ்ம அபேதமாகிய உத்தம யோகத்தை சொல்வதற்காகவே பகவான் கீதையை உபதேசித்தார். ஆனால் க்ஷத்ரியனாக, கர்ம வீரனாக இருக்கப்பட்ட அவனுக்கு இதற்கான நிவ்ருத்தி மார்க்க உபதேசத்தை உடனடி உபாயமாகக் கொடுத்தால் அவனால் க்ரஹித்துக்கொண்டு பின்பற்ற முடியாது என்பதால் கர்ம யோகத்தை முக்யமாகச் சொல்லி, மற்ற அநேக யோகங்களையும் சொல்லிவிட்டு. முடிவிலே ‘மோக்ஷ ஸந்ந்யாஸ யோகம்’ என்பதாக நிவ்ருத்தியை நன்றாக விளக்கிச் சொன்னார். ஆனால் அர்ஜுனன் கர்மயோகம் அநுஷ்டித்துத்தான் ஞான நிஷ்டைக்கு வரவேண்டுமாதலால், கர்ம பல தாதாவான தன்னிடம் எல்லாக் கார்யங்களையும் அர்ப்பித்துவிட்டு சரணாகதி பண்ணினால் அவனைத் தாம் ஸகல பாபங்களிலிருந்து விடுவிப்பதாக அபய வாக்குச்சொல்லி முடித்தார். “துக்கப்படாதே! மா சுச:!” என்று பரம கருணையுடன் அவனைத் தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லி முடித்தார்.


* ஏழாவது மந்த்ரம்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கீதை கூறும் யோகங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கண்ணன் செய்த புனருத்தாரணம்
Next