யாகத்தில் ஹிம்ஸை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸாத்விகமான வாழ்முறைக்கென்று குறிப்பாக ஏற்பட்ட பிரிவினரிடமே ஹிம்ஸையம்சம் இருப்பதாகத் தோன்றும் யாக கர்மாவை வேதங்கள் கொடுத்திருக்கின்றன என்றால் அதில் ந்யாயமில்லாமலிருக்குமா? ‘யஜ்ஞ பலியால் சில தேவ சக்திகள் ப்ரீதி அடைந்து லோகத்துக்கு நல்லது செய்கின்றன. பலியாகும் ப்ராணியும் ஸத்கதி அடைகிறது’ என்று சாஸ்த்ரம் சொல்கிறது. (இதை) ‘ப்ரூவ்’ பண்ணிக்காட்ட வேண்டுமென்று சொன்னால், சொல்பவர்களிடம், “நீங்கள்தான் இப்படி இல்லை என்று ‘ப்ரூவ்’ பண்ணிக் காட்டுங்களேன்” என்று திருப்பிச் சொன்னால் என்ன பண்ணுவார்கள்? லோக க்ஷேமத்தையே உத்தேசித்து ஏற்பட்ட ஒரு சாஸ்த்ரத்தில், தத்வார்த்தங்களிலும் ஆத்மாநுபவத்திலும் உச்ச நிலைகளைச் சொல்வதாக உலகமே கொண்டாடும் ஒரு சாஸ்த்ரத்தில் வீணுக்கு இப்படி ஒரு ப்ராணியை அக்னியில் ஆஹுதி செய்யும்படிச் சொல்லியிருக்குமா?

யாகம் என்ற பெயரில் கூட்டங்கூட்டமாக ப்ராணிவதை பண்ணி ப்ராம்மணர்கள் தின்றிருந்தால் தப்புத்தான். ஆனாலும் வெறும் ஆடம்பரத்துக்காக பிம்பிஸாரன் மாதிரி எவனாவது ராஜா ப்ராம்மணர்களைக் கொண்டு இப்படிச் செய்திருக்கலாமே தவிர, வாஸ்தவத்தில் எந்த யஜ்ஞத்திலும் இத்தனை ப்ராணி பலிக்கு அவச்யமே கிடையாது. ஏராளமாக ப்ராணிவதை செய்து யாகம் செய்வது தப்பு என்பதற்கு பாகவத்தில் ஒரு உபாக்யானமே இருக்கிறது:

ப்ராசீன பர்ஹிஸ் என்று ஒரு ராஜா. அவன் ஏகப்பட்ட பசு (ஆடு) வதை பண்ணி யாகங்கள் செய்தான்.

நாரதர் அவனைத் தடுத்து நல்லறிவு புகட்டுவதற்காக வந்தார். வந்தவர் என்ன பண்ணினாரென்றால் ஸ்வர்க்க லோகத்தில் நடக்கும் ஒரு காட்சியை அவனுக்குக் காட்டினார். அதிலே ஒரு பெரிய ஆட்டுக்கூட்டம். ஒவ்வொரு ஆட்டுக்கும் கெட்டியாக இரும்பு கொம்பு நல்ல கூராக இருக்கிறது. அந்த ஆடுகள் ஸாதுவான ஆடுகளாக இல்லாமல் புலி, சிங்கம் மாதிரி உக்ரமாக, தங்களுடைய இரும்புக் கொம்புகளைத் தீட்டிக்கொண்டு எதையோ கிழித்துப் போடுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றன. “ஐயையோ! இதுகள் ஏன் இப்படி விபரீதமாகப் பண்ணுகின்றன? எதை குத்திக் கிழிப்பதற்காக இவ்வளவு முஸ்தீபாக இருக்கின்றன?” என்று ப்ராசீனபர்ஹிஸ் கேட்கிறான். அதற்கு நாரதர், “உனக்காகத் தாண்டா இதுகள் காத்துக்கொண்டிருக்கின்றன! கணக்கு வழக்கில்லாமல் யஜ்ஞபலி கொடுத்த ஆடுகள் தான் இதுகள். இவற்றுக்கு ஸ்வர்கப் பிராப்தி கிடைத்திருப்பது வாஸ்தவந்தான். ஆனாலும் நீ மிதமிஞ்சி ஜீவஹத்தி பண்ணினது பாபந்தான் என்பதால், நீ எப்போது அங்கே வருவாய், உன் குடலைக் கிழித்துப் போடலாம் என்றே காத்துக்கொண்டிருக்கின்றன” என்றார்– என்று (பாகவதக்) கதை.

ப்ராம்மணர்கள் தின்னுவதென்பது யஜ்ஞ ப்ரஸாதம் என்ற மரியாதைக்காக ஒரு குன்றிமணி அளவுதான். வயிறு புடைக்க அல்ல.*

அஹிம்ஸை, ஸமத்வக் கொள்கை என்பவற்றுக்காகத் தற்காலத்தில் பௌத்த-ஜைன மதங்களை ஹிந்து மதத்தை விட உயர்வாக நினைத்துக் கொண்டாடுவதைப் பற்றிச் சொல்ல வந்தேன்.


* இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் “ஜீவஹிம்சை செய்யலாமா?” என்ற உட்பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பௌத்த சமண மதங்களும் ஹிந்து மதமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பிற மத கண்டனத்திற்காக அல்ல;ஸ்வயமத கண்டனம் கூடாது என்றே!
Next