பிறமத கண்டனத்திற்காக அல்ல: ஸ்வயமத கண்டனம் கூடாது என்றே! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அந்த மதங்களை நான் ‘க்ரிடிஸைஸ்’ பண்ணவரவேயில்லை. எந்த மதத்தையுமே சும்மாவுக்காக க்ரிடிஸைஸ் பண்ணவேண்டியதில்லை. ஒவ்வொரு மதத்திலும் பல காலமாக ஒவ்வொரு ஜனக்கூட்டம் இருந்து வந்திருக்கிறது என்றால், அந்த மதங்களில் அவர்கள் ஒரு நிறைவைக் கண்டுதானே அப்படி இருந்திருக்கவேண்டும்? எந்த மதமானாலும் ஸ்வய நலமாகப் போகப்படாது, ஆசைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும், அன்பாக இருக்கணும் ஸத்யமாக நடக்கணும் என்று சொல்லி, இந்த உடம்பு அநுபவிக்கும் உலக இன்பங்களுக்கு மேலாக ஒன்றைக் காட்டிக் கொடுக்கத்தானே செய்கின்றன? சீலமும், ப்ரேமையும், த்யாகமும், தங்கள் கொள்கைக்கும் அநுஷ்டானத்துக்கும் உரிய ஒரு ஸொந்த அநுபவமும் பெற்ற மஹான்களாக எல்லா மதங்களிலுந்தான் பலர் வந்திருக்கிறார்கள். தத்வ சோதனமும் தீர்க்கமாகப் பண்ணிக் கொண்டு போகும் அறிவாளிகளான ஃபிலாஸஃபர்களும் பௌத்தம், மீமாம்ஸை, ந்யாயம், ஸாங்க்யம் போன்ற மதங்களில் இருந்திருக்கிறார்கள். (பௌத்தரான) நாகார்ஜுனர் புஸ்தகங்களில் எனக்கே ஒரு ஈடுபாடு உண்டு.

ஆனால் எந்த மதமும் தப்பில்லை என்னும்போது நம்முடைய மதத்தை மட்டும் அப்படி (தப்பானது என்று) சொல்லலாமா என்பதுதான் கேள்வி. ‘நம்முடையது’ என்ற ஸ்வய அபிமானத்தில் fad -ஆக (அபிமான வெறியாகப்) போகாமல், நிஷ்பக்ஷபாதமாகப் பார்த்தாலே, இப்போது நான் காட்டின மாதிரி, எந்த மதத்தையும்விட இதில்தான் தலைமுறை தத்வமாக அதிக மாஹான்கள், அதாவது இந்த மதாநுஷ்டனத்தால் ஸ்வாநுபூதி பெற்ற பெரியவர்கள், தோன்றியிருக்கிறார்கள்; எந்த மதத்தை விடவும் வெகு நீண்ட காலமாக இது ஒன்றுதான் ஒப்பற்ற ஒரு நாகரிக ஸமுதாயத்தை ஜீவசக்தியுடன் காப்பாற்றி வந்திருக்கிறது என்று தெரிகிறது. எல்லாருக்கும் ஒரே ஏற்பாடாகப் பண்ணி வைக்காமல், பல தரப்பட்டவர்களுக்கும் அவரவருக்கேற்ற கார்யம், ஆசாரம் (அதாவது வாழ்க்கையழுக்கம்), அவரவருக்குப் பிடித்த இஷ்ட மூர்த்தி என்று இடம் கொடுத்துள்ள நம்முடைய மதத்திலேதான் ஸகல லெவல்களிலும் அதற்கான உயர்ந்த அநுபவங்களைப் பெற்று, ஒரு லெவலிலிருந்து ஸெளக்யமாக அடுத்த லெவலுக்கு போய்க் கடைசியில் பரமாத்மாவே ஜீவாத்மா என்று ஆகிவிடும் பரம ஸத்ய நிலை வரையில் ஜீவனுக்குச் சீராக வழியமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதை எப்படிச் சொல்லாமலிருப்பது? ஸாதாரணமான லௌகிக அநுபவங்களுக்கு மேலே எதையோ ஒன்றை எல்லா மதங்களும் அடைவிக்கின்றன என்று அவற்றைக் கொண்டாட வேண்டுமென்றால், அவை அடைவிக்கிறவற்றுக்கும் மேலே உத்தமோத்தமமான ஜீவ-ப்ரஹ்ம ஐக்யம் என்ற முடிவான நிறைவை நம் மதந்தான் அடைவிக்கிறது என்பதற்காக இதையும் அவற்றுக்கு மேலே கொண்டாடுவது ஸரிதானே? இப்படி இதன் தனி விசேஷங்கள் இருக்கிறபோது, இதன் பெரிய நிறைவான பரம தாத்பர்யத்தையோ, அதற்குப் போகிற வழியிலுள்ள இடை நிலையில் அவ்வப்போது ஒரு நிறைவைத் தரும் ஸம்ப்ரதாயங்களையோ புரிந்துகொள்ளாமல் மற்ற மதங்கள் இதைக் கண்டிக்கும்போது, ‘எல்லா மதமும் உசத்திதான்; ஆனால் எல்லாவற்றிலும் உசந்த நம் மதம் மட்டும் அவை எல்லாவற்றின் கண்டனத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்’ என்று சும்மாயிருக்கலாமா?

ஜீவனுக்கும் ப்ரஹ்மத்திற்குமே வித்யாஸமில்லை என்று முடிக்கிற மதத்தில் இத்தனை வர்ணாச்ரம வித்யாஸமிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம் என்று நன்றாக அலசி ஆராய்ந்து பார்க்காமல், ‘வித்யாஸம் பண்ணும் மதம்’ என்று மற்றவர்கள் கண்டிக்கும் போது நாம் உண்மையை அலசிப் புரிந்துகொண்டு அவர்களுக்கும் எடுத்துச் சொல்லாமல் சும்மா இருந்து விடுவதா?

புத்தர் பெரியவர், ஜினர் பெரியவர். ஆனால் அவர்களும் ‘எதிலும் நல்லதிருக்கிறது. நாம் பாட்டுக்கு ஸமரஸமாக இருந்துவிட்டுப் போவோம். வைதிக மதத்தை நாம் ஏன் கண்டனம் செய்யவேண்டும்?’ என்று இருந்துவிடவில்லையோல்லியோ? அப்படியானால், அவர்கள் இதை ‘க்ரிடிஸைஸ்’ செய்தது ஸரியில்லை என்று நமக்கு நன்றாகக் காரணம் தெரியும்போது நாமும் அவர்களுடைய ‘க்ரிடிஸிஸ’த்தை ‘க்ரிடிஸைஸ்’ செய்து ஸத்யத்தை நிலைநாட்டுவதற்கு நம்மாலான முயற்சி பண்ணுவது ஸரிதானே?

ஸரியான ஆதி மத ஸித்தாந்தம் எதுவும் இல்லாமலிருக்கிற வெளி தேசங்களில், அந்த தேசத்து ஜனங்களின் பக்குவ நிலை, கலாசாரம் முதலியவற்றுக்கு ஏற்றனவாக ஒருவித உள் நிறைவைக் கொடுக்க உபகாரம் செய்வதாக பௌத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் முதலியன அங்கே இருக்கின்றன. அப்படியே இருக்கட்டும். அதை நாம் ஆக்ஷேபிக்கவே வேண்டாம். ஆனால் எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கும் ஏற்றபடி வழிபோட்டுக்கொடுத்து, உச்சியான நிறைவு வரையில் அழைத்துக் கொண்டு போகும் ஒரு மதம் நமக்கு இருக்கிறபோது இங்கே அந்த மதங்கள் இடம் பிடிக்க வரும்போதும் நாம் ஒண்ணும் ஆக்ஷேபிக்கக்கூடாது என்றால் எப்படி?

ஆசார்யாள் கதை கேட்க உட்கார்ந்திருக்கிறோம். அவரைப் பெரியவர் என்று லோகம் பூரா கொண்டாடுகிறது. அவர் சொன்னவற்றில் அபிப்ராய பேதமுள்ளவர்கள்கூட அவர் மஹா புத்திமானென்றும், ஜனங்களுக்குத் தாம் செய்ய வேண்டிய ஒரு ‘மிஷன்’ இருக்கிறது என்ற ‘டெடிகேஷனோடு ராப் பகல் பாடுபட்ட த்யாகி என்றும், இன்னும் இப்படிப் பல தினுஸாகவும் போற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர் முக்யமாகப் பண்ணியது என்ன? அவர் காலத்தில் இங்கே இருந்த மற்ற மதங்களையெல்லாம் கண்டனம் பண்ணி, வைதிகமான ஸநாதன தர்மத்தை மறுபடி ஜீவனோடு ப்ரகாசிக்கச் செய்ததுதானே? அதற்காகத்தானே அந்த அவதாரம் ஏற்பட்டதே? அப்படியிருக்கும்போது எந்த மதத்தையும் எதுவும் க்ரிடிஸைஸ் பண்ணாமல் ஆசார்யாளைப் பற்றி உபந்யாஸம் செய்வதென்றால் எப்படி?

ஸரியான காரணம் காட்டி க்ரிடிஸைஸ் செய்கிறதில் தப்பேயில்லை. விதண்டாவாதமாகப் பண்ணினால்தான் தப்பு. ந்யாயமான காரணங்கள், பாயின்ட்கள் தோன்றும்போது நாமும் மற்றவர்களை க்ரிடிஸைஸ் செய்ய வேண்டியதுதான். அதே மாதிரி அவர்களும் நம்மைச் செய்ய வேண்டியது தான். (கண்டனம் செய்வதில்) தப்பு இரண்டு விதத்தில்தான் இருக்கிறது. ஒன்று, ஸரியாகக் காரணம் காட்டாமல் விதண்டை பண்ணவது. இன்னொன்று, நம் மனஸில் த்வேஷத்தோடு க்ரிடிஸைஸ் பண்ணப்போவது, மாற்று அபிப்ராயமுள்ளவர்களிடமும் த்வேஷம் என்பதேயில்லாமல் ப்ரேமையோடு அபிப்ராயங்களை மட்டும் க்ரிடிஸைஸ் செய்ய வேண்டும். ‘அவர்கள் புத்திக்கு அப்படித் தோன்றுகிறது. நமக்குத் தோன்றுவதை அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். அவர்களுக்குத் தோன்றுவதையும் கேட்டுக் கொள்வோம். இரண்டு பேரும் இரண்டையும் அலசி ஆலோசித்துப் பார்ப்போம்’ என்ற மனோபாவத்தோடு நடக்க வேண்டும். இந்த ப்ரேமையில்தான் ஸமரஸம் இருக்க வேண்டுமே தவிரக் கொள்கையில் இல்லை. கொள்கையில் அப்படி (ஸமரஸம்) என்று சும்மாயிருந்தால், மற்றவர்கள் நம் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை ஏமாந்த சோணகிரிகளாக்குவதில் தான் முடியும். மனஸில் அன்போடு, நமக்கு ஸத்யமாகத் தெரியும் கொள்கைகளுக்காகப் போராடவேண்டுமென்பதே முறை.

ஸகல ஸித்தாந்தங்களும் உள்ளடங்கியதாக உள்ள வேத தர்மத்தை ஆக்ஷேபித்து, அல்லது அதில் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதுவே பூர்ண தர்மம் என்று ஸாதித்து, அறிவும் ஒழுக்கமும் வாய்ந்த சிலரும் கலியிலே ஸித்தாந்தங்களைப் பரப்பினார்களென்பதை நம்முடைய சாஸ்த்ர – புராணங்களில் கலிபுருஷன் பண்ணின க்ருத்ரிமமாகத்தான் சொல்லியிருக்கிறது. இது நல்லதற்கில்லாததே நல்லதாக வேஷம் போட்டுக் கொண்டுவந்து ஜனங்களை மயக்கி, அவர்கள் வேத விருத்தமான (வேதத்துக்கு முரணான) அம்சங்களையும் அநுஷ்டானங்களையும் கொள்கைகளையும் வாழ்முறைகளையும் பின்பற்றப் பண்ணியதுதான் என்று சொல்லியிருக்கிறது.

புத்தர், ஜினர் போன்றவர்களை, ஜனங்கள் நல்ல வழிக்குப் போகப்படாது என்று தடுப்பதற்காகவே மனஸறிந்து மாற்றுவழி போட்டுக் கொடுத்தவர்களென்று சொல்வது கஷ்டமாயிருந்தால் அப்படிச் சொல்ல வேண்டாம். அவர்களைப் பொருத்தமட்டில், அவர்களைப் போன்ற நிலைக்குப் போனவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் சொன்னவற்றை நல்லதற்கில்லாதவை என்று சொல்ல வேண்டியதில்லை. ஒரே அஹிம்ஸை, அன்பு, ஒழுக்கம் என்று இருந்துகொண்டு அவர்களைப்போல, ‘சரீரம் போனாலும் போகட்டும். லக்ஷ்ய ஸித்தி அடையாமல் எழுந்திருப்பதில்லை’ என்று, புலனையடக்கி அப்படியே ஒரு தபஸில் உட்கார்ந்துவிடக் கூடியவர்களுக்கு வேதமும் வைதிகாநுஷ்டானங்களும் நிஜமாகவே தேவையில்லைதான். இப்படி அந்த வேதமே சொல்லியிருக்கிறது. ‘ஞானியாய்ப் போனவனுக்கு அப்பா அப்பா இல்லை; அம்மா அம்மா இல்லை; லோகம் லோகமில்லை; தேவர்கள் தேவரில்லை; வேதமும் வேதமில்லை‘ என்று இப்படி ச்ருதி சிரஸாக இருக்கப்பட்ட ஒரு உபநிஷத்திலேயே இருக்கிறது1. ஆனால் இப்படிப்பட்ட உபநிஷத்துக்களிலேயே ‘தத்வமஸி’ என்கிற தலைசிறந்த ஞான லக்ஷ்யத்தைச் சொல்லுகிற சாந்தோக்யத்தில், முடிக்கிற இடத்தில்2 எவன் இம்மைக்குத் திரும்பி வராத ஸ்தானத்தை அடைகிறான் என்று சொல்லும்போது, அவன் விதிப்படி வேத அத்யயன – அநுஷ்டானங்களைச் செய்து, குடும்ப வாழ்க்கை நடத்தி, இந்திரியங்களைச் சலனமில்லாமல் நிலை நிறுத்தி, வேத கர்மாக்களில் வருவதைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் அஹிம்ஸையக் கடைப்பிடித்துத்தான் அந்த உத்தம ஸ்தானத்தை அடையத் தகுதி பெறுகிறான் என்று சொல்லியிருக்கிறது. அதாவது ஒரு புத்தருக்கோ, ஜினருக்கோ, மற்ற ஞானிகளுக்கோ ஏற்பட்ட தர்மங்களை ஸகலருக்கும் நம் மதம் வைத்து விடவில்லை. அப்படி ஒருவன் முடிவிலே ஞானியாய்ப் போவதற்காகவே அவனுக்கு அடியிலிருந்து வெவ்வேறு தர்மங்களை ஸ்டேஜ், ஸ்டேஜாக மாற்றிக்கொடுத்துக்கொண்டு போவதில்தான் நம் தர்மத்தின் பெருமையே இருக்கிறது. இதிலே இன்னும் பெருமை, அடி நிலையிலே இருக்கிறவனையும் அணைத்துப் போகவேண்டும், அவரவர் இருக்கும் இடத்திலிந்து கையைப் பிடித்து அழைத்துப் போகவேண்டும் என்பதற்காக, ஞானியும்கூட அந்த அடிநிலைக்காரன் மாதிரியே செய்துகாட்ட வேண்டுமென்று நம் மதத்தில் சொல்லியிருக்கிறது. குறிப்பாக கீதையில் பகவான் இதை ரொம்பவும் வற்புறுத்திருயிருக்கிறார்3. நடைமுறைக்கு ஏற்றதாகவும், மனோதத்வ ரீதியில் பொருத்தமுடையதாகவும் இப்படி நம் மதத்தில் ஞானியைக்கூட ஸாமான்ய ஜனங்களுக்கு வழிகாட்டியாக அவர்களுடைய தர்மத்தைச் செய்துகாட்ட வேண்டுமென்று சொல்லியிருக்க, இதற்கு நேர்மாறாக ஸாமான்ய ஜனங்களுக்கும் ஞானியின் தர்மத்தையே வைப்பது என்று ஒருத்தர் ஸித்தாந்தம் செய்தால், அவர் தனி வாழ்க்கையில் எத்தனை பெரியவராயிருந்தாலும் அந்த ஸித்தாந்தத்தால் மக்களின் ஆத்ம க்ஷேமம் குழறும்படியாகப் போகிறதே என்பதை உத்தேசித்து அதை நிராகரணம் செய்யத்தானே (நிராகரிக்கத்தானே) வேண்டியிருக்கிறது?

இதற்காகத்தான் நம்முடைய ஸ்ரீசங்கர பகவத்பாதாளின் அவதாரமானதால், அவரும், அவருக்கு முன்னேயும் பின்னேயும் வந்த வேதாந்த ஸம்ப்ரதயப் பெரியவர்களும் ஏனைய ஸித்தாந்தங்களில் எடுத்துக் காட்டியிருக்கும் தோஷங்களைச் சொல்லாமல் விடமுடியவில்லை. முன்னேயே சொன்ன மாதிரி, தோஷம் தெரிகிற இடத்தில் அதைச் சொல்வதில் தப்பில்லை; சொல்லத்தான் வேண்டும். ஆனால் தோஷத்தைச் சொன்னாலும் த்வேஷம் இருக்கப்படாது என்பதுதான் முக்யம்.

அந்த மதங்களைக் கண்டிக்க வேண்டுமென்பதற்காக அல்ல; அந்த மதங்கள் நம் மதத்தைக் கண்டிப்பது ஸரியல்ல என்று எடுத்துக்காட்டி, நம்முடைய தாய்மதத்தை உள்ளபடி புரியவைப்பதற்காகவே இதெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது.

வேத தர்மத்திற்கு முரண்பாடான மத ஸ்தாபகர்கள், ஸித்தாந்த ப்ரவர்த்தகர்கள் என்று சில பேரை மட்டும் கலியுகத்தின் போக்குக்குக் காரணமாகச் சொல்லி விட்டுவிடுவதற்கில்லை. ஒரு முள்ளு மரம் முளைக்கிறதென்றால் அதற்கு விதை இருக்கணுமென்பதுபோலவே, அந்த விதை முளைத்து வளரத் தக்கதாக பூமியும் இருந்தால்தானே முடியும்? மதஸ்தாபகர்களும் ப்ரசாரகர்களும் என்னதான் ஸித்தாந்த விதைகளை ஊன்றினாலும் ஜன ஸமூஹத்தின் மனநிலை என்கிற பூமி அவற்றை பூஸாரமூட்டிப் போஷித்தால்தானே அவை அந்த ஸமூஹத்தில் தழைத்து வளரமுடியும்? இப்படி, வேத தர்மத்துக்கு விரோதமான போக்குகளிலேயே அப்போது ஜெனரலாக ஜனங்களுக்கு ருசி ஏற்பட்டு, அதனாலேயே அவைதிக மதங்களை நன்றாகப் பரவும்படிச் செய்வதாக ஆயிற்று. அஸுர, ராக்ஷஸர்கள் ஜனங்களின் புத்தியிலேயே ப்ரவேசித்ததாகச் சொன்னது இதைத்தான். கலிபுருஷன் ரொம்ப ஸாமர்த்யமாக இந்த மதங்களும் தார்மிகமான வழிகளைச் சொல்கிற மாதிரியும், அதை உபதேசிக்கிறவர்கள் பின்பற்றுகிறவர்கள் ஆகிய இரண்டு பேரும் தர்மமாகவே போகிற மாதிரியும் ‘ஷோ’ பண்ணியிருந்தான்.

கலி பிறந்தபின்னும் க்ருஷ்ண பரமாத்மா, வ்யாஸாசார்யாள் ஆகியவர்கள் கொடுத்திருந்த பலத்தினால் சுமார் இரண்டாயிரத்தைநூறு வருஷம் ரொம்பவும் சீரழிவு ஏற்படாமலே வைதிக தர்மாசரணை நடந்துவந்ததற்கப்புறம் இப்படி இடைக்காலத்தில் அசதி மறதியாக இருந்ததற்கும் சேர்த்து வைத்துக் கலி புருஷன் தன்னுடைய ஆதிக்யத்தை ஒரே முரட்டுதனமாகக் காட்ட ஆரம்பித்தான். ரொம்ப நேரம் தூங்கிப் போய்விட்டால், ‘ஐயோ, இப்படித் தூங்கிப் போய்விட்டோமே, கார்யத்தைப் பண்ணியாகணுமே!’ என்று ஒரே தடால் புடாலென்று ஆரம்பிக்கிற மாதிரிக் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்தான். இன்னொரு உதாரணம் சொல்லணுமானால், ‘அடைத்து வைத்த ஸோடா பாட்டிலை உடைத்த மாதிரி’ ஆயிற்று! அந்த வேகத்தில் எழுபத்திரண்டு மதங்கள் ஸநாதன தர்மத்திற்கு மாறாகத் தோன்றின என்று புஸ்தகங்களில் போட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ரொம்ப உத்தண்டமாகக் கிளம்பிற்று என்றும் போட்டிருக்கிறது. அஸந்தர்ப்பமானவை எல்லாமே தடபுடலாகத்தான் கிளம்பும். வாஸ்தவத்திலேயே ஹிதமாகவும் ஸத்யமாகவும் இருப்பவை ஸாத்விகமாக, சாந்தமாகத்தான் தோன்றிச் செயலுக்கு வரும். அப்படியில்லாதவை அதம்பிக்கொண்டு அடாவடியாகத்தான் ஆரம்பிக்கும். கலி அதர்மயுகம் என்று நிரூபித்துக் காட்டுகிறமாதிரி அப்போது இப்படி 72 மதங்கள் தோன்றின என்று புஸ்தகங்களில் இருக்கிறது.


1 ப்ருஹதாரண்யகம் IV.3.22

2 VIII.15.1

3 “தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதியில் “ஆசாரம்” என்ற உரையில் “கீதையின் கட்டளை“, “தலைவர் கடமை: கீதை உபதேசம்“, “அறிந்தவனும் அறியாதாரும்” ஆகிய பிரிவுகள் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is யாகத்தில் ஹிம்ஸை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கலி அதர்மத்திற்கே ஸங்கற்பிக்கப்பட்டதா?
Next