அவதார தத்வம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆதியில் தாம் ஸூர்யனுக்கு உபதேசித்த ஸநாதன தர்மம், முதலில் பல காலம் பிள்ளை, பிள்ளை வழியாகப் போய் நன்றாக அநுஷ்டானத்திலிருந்துவிட்டு அப்புறம் பிற்காலத்தில் நலிவடைந்து விட்டதென்றும், அதைத்தான் தாம் இப்போது அர்ஜுனனுக்கு மறுபடி எடுத்துக்கூறுவதாகவும் க்ருஷ்ணர் சொன்னார். இதைச் சொல்லும் கீதை ச்லோகங்களும் பார்த்தோம். அவர் நரவேஷம் போட்டுக் கொண்டு மயக்கிய மயக்கத்தில், தாம் பகவதவதாரம் என்பதையே அர்ஜுனனுக்கு மறக்கடித்திருந்தார்! அதனால் அவர் இப்படிச் சொன்னவுடன் அவன், “இதென்ன க்ருஷ்ணா! நீ இப்போது பிறந்தவன். ஸூர்யன் என்றைக்கோ பிறந்தவன். (ஸூர்யன் அர்ஜுனன் காலத்திலும் இருந்தவனானாலும், தாம் அவனுக்கு உபதேசித்த பிறகே அந்த உபதேசத்தை அவன் எத்தனையோ யுகங்களுக்கு முன்னிருந்த இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தானென்று பகவான் சொன்னதால் அர்ஜுனன் இப்படிச் சொல்கிறான்.) அப்படியிருக்க அவனுக்கு உபதேசித்ததாகச் சொன்னால் என்ன அர்த்தம்!” என்று கேட்டான்.

அபரம் பவதோ ஜந்ம, பரம் ஜந்ம விவஸ்வத: |
கதம் ஏதத் விஜாநீயாம் த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி ||
(கீதை IV.4)

இப்படி அவன் கேட்டதற்கு பகவான், “இதற்கு முந்தி எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் ஆகிவிட்டன. எனக்கு மட்டுமில்லை. உனக்கும்தான். அந்தப் பூர்வ ஜன்ம ஸமாசாரமெல்லாம் எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது” என்றார்.

பஹுநி மே வ்யதீதாநி, ஜந்மாநி தவ சார்ஜுன |
தாந்யஹம் வேத ஸர்வாணி, ந த்வம் வேத்த பரந்தப ||
(கீதை IV.5)

இப்படிச் சொன்னதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. நிறுத்தியிருந்தால்கூட, அவரை மநுஷ்யர் மாதிரியே நினைத்துக் கொண்டிருந்த அர்ஜுனன் ஒன்றும் எதிர்க்கேள்வி போட்டிருக்க மாட்டான். “மநுஷ்யனாகிய தனக்கு அநேக முன் ஜன்மங்களிந்திருப்பது போலவே இந்த க்ருஷ்ணனுக்கும் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியோ இவன் அந்த ஜன்மாந்தரங்களையும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறான்” என்றுதான் நினைத்து, அதோடு விட்டிருப்பான். அப்படியே கேள்வி கேட்டிருந்தால்கூட, “உனக்கு ஏன், எப்படிப் பூர்வ ஜன்மங்கள் உண்டாச்சு?” என்று கேட்காமல், “உனக்கு எப்படி பூர்வ ஜன்ம ஸமாசாரமெல்லாம் ஞாபகமிருக்கு?” என்றுதான் கேட்டிருப்பான். நமக்கோ அது ஒரு விஷயமே இல்லை. தான் மநுஷ்யர் என்று அவர் நம்மை ஏமாற்ற முடியாது! அதனால் ஸர்வஜ்ஞரான அந்த பகவானுக்கு எப்படி ஞாபகமிருந்தது என்ற கேள்வி நமக்கு எழும்பாது. ஆனால் நமக்கு வேறே ஒரு பெரிய கேள்வி எழும்பும். “அர்ஜுனன் மநுஷ்யனானதால் கர்மாப்படி அவனுக்கு அநேக பூர்வ ஜன்மங்கள் இருந்து, இப்போது அவன் அர்ஜுனனாகப் பிறந்திருக்கிறான். இவரோ பகவான். இவருக்கு ஏது கர்மா? அதனாலே இவருக்கு ஏது பூர்வ ஜன்மாக்கள்? இவர் ஏன், எதற்காக, எப்படிப் பல ஜன்மாக்கள் எடுக்கிறார்? இப்போது நர லீலைக்காகப் பிறந்திருக்கிறமாதிரியே முன்னாலேயும் பிறந்திருப்பாரோ?” என்ற கேள்வி எழும்பும். நாம் இப்படிக் கேட்போம் என்று அவருக்குத் தெரியும். அர்ஜுனனுக்குத் தாம் உபதேசிப்பதையெல்லாம் வ்யாஸாசார்யாள் பாரதத்தில் எழுதி வைத்து, நாம் படிக்கப் போகிறோமென்று அவருக்குத் தெரியாதா? அதற்காகத்தானே அவர் உபதேசித்ததே? அதனால், அர்ஜுனன் ஒன்றும் கேள்வி கேட்காவிட்டாலும், நாம் கேட்போமே என்று எதிர்பார்த்து இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்:

அஜோ(அ)பி ஸந்-நவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோ (அ)பி ஸந் |
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாம்-யாத்ம மாயயா ||
(IV.6)

“நான் கர்மாவில் மாட்டிக் கொண்டு அதற்காக ஜன்மா எடுக்க வேண்டியதில்லைதான். நான் பிறப்பற்ற வஸ்து: அஜன். ப்ருகிருதி சேஷ்டிதத்தினாலும் மனஸின் விகாரத்தினாலும் பல தினுஸான மாறுபாடுகளை அடையும் ஜீவனல்ல. நான் மாறாத ஆத்ம வஸ்து: அவ்யயாத்மா. நான் ஸகல பூதங்களுக்கும் ஈச்வரன் :- பூதாநாம் ஈச்வர :- இப்படியெல்லாம் இருந்தும் — ‘அபி ஸந்’ என்றால் ‘இப்படியெல்லாம் இருந்தும் — ப்ரபஞ்சத் தோற்றத்தின் ஆதார காரணமான ப்ரக்ருதியை என்னுடைய மாயையால் வசப்படுத்திக் கொண்டு ஸம்பவிக்கிறேன், அதாவது ஜன்மா எடுக்கிறேன்: “ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”.

ப்ரபஞ்சத்தை மாயையினால் தோற்றுவிப்பது போலவே தம்மையும் ஜன்மா எடுப்பவராகத் தோற்றுவித்துக் கொள்கிறார். ஜீவ-ஜட ப்ரபஞ்சம் அத்தனையும்கூட அவரே எடுத்துக்கொண்ட தோற்றங்கள்தான். அவரைத் தவிர எதுவுமில்லை. ஆனால் ஜீவ-ஜகத்துக்களை ப்ரக்ருதி என்பது வசப்படுத்தி ஆளும்படியாக விளையாடுகிறார். அதனால், இவற்றுக்குத் தாங்கள் அவரே என்று தெரியவில்லை. ஜீவன் ப்ரக்ருதியின் ஸத்வ-ரஜோ-தமோ குணங்களில் சிக்கிக் கொண்டு பல விதமாகக் கர்மா செய்து, அவற்றை அநுபவிக்கவே ஜன்மா ஜன்மாவாக எடுத்துக்கொண்டு போகிறான். அவரோ இப்படி ப்ரக்ருதிக்கு வசமாகாமல், ப்ரக்ருதியைத் தாம் வசப்படுத்திக் கொண்டு ஆள்பவராக இருந்து கொண்டே, ஆனாலும் நம் மாதிரி ஜன்மா எடுக்கிறார். அதுதான் அவதாரம் என்பது.

ஏன், எப்படி அவர் ஜன்மாக்கள் எடுக்கிறாரென்ற கேள்விகளில் எப்படி என்பதற்கு இங்கே பதில் சொல்லியாயிற்று. அப்புறம்தான் ஏன் இப்படி அவரும் ஜன்மா எடுக்கிறார் என்பதற்குக் காரணம் சொல்கிறார். அதுதான் ஆசார்ய சரித்ரத்துக்கு ‘லிங்க்’. ஸுப்ரஸித்தமாகவுள்ள இரண்டு ச்லோகங்களில் சொல்கிறார்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத |
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே
|| (IV. 7-8)

ஏற்கெனவே தாம் எடுத்த ஜன்மங்களைப் பற்றித் தமக்கு எல்லாம் தெரியும், அர்ஜுனனக்குத் தெரியாது என்றுதான் ஆரம்பித்தார். அதாவது பூர்வ ஜன்மங்களைப் பற்றியே சொன்னார். அப்புறம் பொதுவாகத் தாம் ஜன்மா எடுப்பது எப்படி என்று சொல்லி, பூர்வத்தில் மட்டுமில்லாமல் எக்காலத்திலுமே தாம் ஜன்மா எடுத்தது, எடுக்கப்போகிறது எல்லாம் ஏன், எதற்காக என்று சொல்கிறார்.

என்ன சொல்கிறார்?

எப்போதெப்போது தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டாலும் : “யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி”;

தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டால் என்ன ஆகும்? அதர்மத்துக்கு அபிவிருத்தி உண்டாகும். அதைச் சொல்கிறார்: “அப்யுத்தாநம் அதர்மஸ்ய.”

இப்படி தர்மம் க்ஷீணித்து, அதர்மம் மேலோங்கும் போது, எப்போதெல்லாம் இப்படி ஏற்படுகிறதோ, அப்போது — “ததா”: “அப்போது” ;

அப்போது, என்னையே பிறப்பித்துக் கொள்கிறேன்: “ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம்.”

தர்மம் க்ஷீணித்தபோது என்ன ஆகும்? ஸத்துக்களான ஜனங்கள் ரக்ஷணையில்லாமல் தவிப்பார்கள். துஷ்டர்களிடம் ஸாதுக்கள் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவார்கள். இந்த ஸத்துக்களை ரக்ஷிக்க வேண்டும், அந்த துஷ்டர்களை சிக்ஷிக்க வேண்டும் என்று பரமாத்மா நினைப்பார்: “பரித்ராணாய ஸாதூநாம், விநாசாய ச துஷ்க்ருதாம்.” ஸாதுக்களை நன்றாகக் கட்டிக் காப்பாற்ற வேண்டும், துஷ்டர்களை அழித்து ஸம்ஹாரம் பண்ணவேண்டும் என்று பகவான் நினைப்பார்.

“இது ஏதோ அப்போதைக்குப் பண்ணின கார்யமாக முடிந்துபோய் விடக்கூடாது. அப்புறமும் கொஞ்சம் நீண்ட காலத்திற்கு லோகத்தில் தர்மம் நன்றாக ஸ்தாபிதமாயிருந்து, ஸாதுக்கள் நிம்மதியாக வாழும்படியாகவும், துஷ்டர்கள் தலை ஓங்காதபடியும் செய்யவேண்டும். சைதில்யம் அடைந்த தர்மம் லோகத்தில் எந்நாளும் நலியாமல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படிப் பண்ணுவதற்கில்லைதான். எதிரெதிர் சக்திகள் — pair of opposites என்பவை — போராடிக் கொண்டு மாறி மாறி மேலுக்கும் கீழுக்கும் போவதில்தான் லோக நாடகமே இருக்கிறது. ஆனாலும் ஸ்ருஷ்டியின் விசித்ரப் போக்கில் இது ஸம பலப் போராட்டமாக இல்லாமல் ஆஸுரமான (அஸுரத்தனமான) அதர்மதத்திற்கே ஜாஸ்தி ஆளுகை கொடுத்துவிடுவதால் நாடக ரஸம் போய் விரஸமாகி விடுகிறது. இந்த மாதிரி ரொம்பவும் முற்றிப்போகும்போதுதான் அவதாரம் எடுத்து சீர்படுத்துவது. இப்படி சிஷ்ட ரக்ஷணமும் துஷ்ட சிக்ஷணமும் செய்து தர்மத்தின் ஆளுகையை ஏற்படுத்திவிட்டு நாம் திரும்பிய பிறகும் ரொம்ப சீக்ரமே அஸுரர்கள் தலைதூக்கி சிஷ்டர்களைத் தலை சாய வைக்கத்தான் பார்ப்பார்கள். அதாவது அதர்ம சக்திக்கு ரொம்ப சீக்ரமே ‘அப்யுத்தானம்’ (எழுச்சி) உண்டாகப் பார்க்கும். நமக்கு நாமே பிறப்பைக் கொடுத்துக்கொண்டு மெனக்கிட்டு அங்கே போய்ப் பண்ணினது இவ்வளவு சுருக்க (விரைவில்) வீணாகி விடாமல் செய்யணும். எந்நாளுக்குமாக தர்மத்தைப் பெர்மனென்ட் பண்ணுவதற்கில்லையானாலும், ரொம்பவும் டெம்பரரியாகப் பிசுபிசுத்து விடாமல், கொஞ்சம் நீண்ட காலத்துக்கு ஆழமாக நிலைநாட்டவேண்டும். அதாவது, தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணவேண்டும். மேலெழ வெறும் ‘ஸ்தாபனம்’ இல்லை, ஆழமாக ‘ஸம்-ஸ்தாபனம்’ பண்ண வேண்டும்” என்று நினைப்பார். “தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய”: தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்காக.

என்னதான் ‘நன்கு’ நிலைநாட்டினாலும், சாச்வதமாக ஸ்தாபிப்பதற்கில்லையல்லவா? அதனால் ஒரு காலகட்டம் ஆன பிற்பாடு மறுபடியும் அதர்மம் கையோங்கும்தானே?

“ஓங்கிவிட்டுப் போகட்டும். எப்போதெப்போது இப்படி ஏற்பட்டாலும் அப்போது பிறக்கிறேன் என்றுதான் சொன்னேனே! மறுபடியும் சொல்கிறேன்; ஸம்பவாமி யுகே யுகே: இப்படிப்பட்ட ஒவ்வொரு ஸந்தர்பத்திலும் அவதாரம் எடுக்கிறேன்.”

‘யுகே யுகே’ என்றால் ‘ஒவ்வொரு யுகத்திலும்’ என்று ‘லிடர’லாக அர்த்தம் பண்ணிக் கொண்டு ஒரு யுகத்தில் ஒரு அவதாரம்தான் செய்வார் என்று நினைத்துவிடக்கூடாது. ‘இனி எத்தனை யுகங்கள் ஸ்ருஷ்டி நடந்தாலும், அலுக்காமல் சலிக்காமல் தர்ம ஸம்ஸ்தானத்திற்காக மறுபடி மறுபடி அவதரிப்பேன்’ என்று பகவான் சொல்வதாகவே அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். முதலில் யுக அளவைச் சொல்லாமல், “யதா யதா” (எப்போதெப்போது) என்று தானே சொன்னார்? அதை அடுத்த ச்லோகத்திலேயே மாற்றி ‘யுகத்துக்கு ஒரு தடவை’ என்று பண்ணுவாரா?

எப்போதெல்லாம் தர்மம் மிகவும் சீர்கேடுற்று, அதர்மம் வலுத்தாலும் தாம் ஸத்துக்களைக் காப்பாற்றி அஸத்துக்களை அழிப்பதற்காக அவதாரம் என்ற பெயரில் ஜன்மா எடுப்பதாக பகவான் சொன்னார்.

‘பரித்ராணாய ஸாதூநாம்’ — “ஸத்துக்களைக் காப்பாற்றுவதற்காக” — என்று சொன்னதாலேயே, எத்தனைதான் அதர்மம் கையோங்கினாலும் அப்போதும் தர்மம் அடியோடு போய்விடாமல் தர்மத்தை அநுஷ்டிக்கும் ஸத்துக்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டிருப்பார்கள் என்று ஆகிறது.

ப்ரக்ருதியின் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்ட மநுஷ்யர்கள் மாதிரி கர்மாவுக்காக ஜன்மா தமக்கு இல்லை; லோக ரக்ஷணத்துக்காகவே தாமாக ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு ஜன்மா எடுக்கிறேன் என்று சொன்னார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அவதாரம் தோன்ற அவசியச் சூழ்நிலை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அவதார ரஹஸ்ய சூசனை
Next