“ப்ரக்ருதியை வசப்படுத்திக்கொண்டு” — “ப்ருக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய” — என்று எதற்காகச் சொன்னார்? இன்னோரிடத்தில் இதே கீதையில் சொல்லும்போதும்* இதே அர்த்தத்தில் “ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய” என்கிறார். இங்கே “அதிஷ்டாய” என்று சொன்னதையே அங்கே “அவஷ்டப்ய” என்கிறார். இரண்டிற்கும் “வசப்படுத்திக் கொண்டு” என்றுதான் அர்த்தம். ஆசார்யாள் அப்படித்தான் (இரண்டு இடத்திலும் “வசீக்ருத்ய” என்றே) பாஷ்யம் பண்ணியிருக்கிறார். இங்கே தாம் ஜன்மாக்கள் எடுப்பதைச் சொன்னவர், அங்கே தாம் மற்றவர்களுக்கு மறுபடி மறுபடி ஜன்மாக்கள் தருவதைப் பற்றிச் சொல்கிறார். (அங்கே,) கல்ப ப்ரளயத்தில் ஒடுங்கிப் போன எல்லா உயிர்களையும் ப்ரளய கால முடிவில் தாம் ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு மறுபடி வெளியிலே விட்டு மீண்டும் மீண்டும் பிறப்பிப்பதைச் சொல்கிறார் :
ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந: |
பூத-க்ராமம் இமம் க்ருத்ஸ்நம் அவசம் ப்ரக்ருதேர்-வசாத் ||
“நான் தர்ம ஸம்ஸ்தாபனத்துக்காக அவதார ஜன்மாக்கள் எடுக்கிறேன் என்று இந்த இடத்தில் சொல்லி அதோடு விட்டிருக்கலாம். அந்த இடத்திலும் “கல்ப ப்ரளயத்தில் ஒடுங்கிய உயிர்கள் கர்மாக்களை அநுபவிப்பவதற்காக, மறுபடியும் ஜன்மாக்கள் எடுக்கும்படி செய்கிறேன்” என்று சொல்லி விட்டிருக்கலாம். இரண்டு இடத்திலும், “நான் ப்ரக்ருதியை வசப்படுத்திக்கொண்டு இப்படிச் செய்கிறேன்” என்று ஏன் சொல்லவேண்டும்?
இங்கேதான் அவதார ரஹஸ்யம் வெளியாகிறது. அவதாரத்தைப் பற்றிய ஸூக்ஷ்மமான உண்மை என்ன என்பது தெரிகிறது. அதைத் தெரியவைப்பதற்காகவே இப்படி (ஒரு சொற்றொடர்) போட்டிருக்கிறார்.
*IX-8