‘வழி காட்டுவதற்காகத்தான் அவன் மநுஷன் மாதிரி விளையாடுகிறான். தர்ம ஸம்ஸ்தாபனத்திற்காக ஸங்கல்பம் மட்டும் பண்ணுவது ஒத்து வரவில்லை என்றுதான் அவதாரம் பண்ணுகிறான்’ என்று இத்தனை நாழி காரணம் சொன்னதெல்லாம்கூடப் போதவில்லை. தர்மம், அதில் ஜனங்களுக்கு வழி காட்டுவது எல்லாம் இருக்கட்டும். இதெல்லாம் எப்படியிருந்தாலும் அவனுக்கே ஒரு ஆசை, தான் படைத்த குழந்தைகளோடு கலந்து பழகி வாழவேண்டுமென்று! அவன்தானே ஸர்வ பூதங்களுக்கும் மாதா பிதாக்கள்? குழந்தைகள் எப்படியிருந்தாலும் அவற்றோடு சேர்ந்து இருக்கணுமென்று மாதா பிதாக்களுக்கு இல்லாமல் போகுமா? அப்படித்தான் அவனுக்கும், ஆசை! அவன் ஆசைப்பட்டாலும், அவன் அரூபமான பரமாத்மாவாக இருந்தால், நாம் அவனை கிரஹிக்க முடியுமா? க்ரஹிக்க முடியாதவனோடு எப்படி உறவு கொண்டாட? அல்லது திவ்ய ரூபம் எடுத்துக்கொண்டு சதுர்புஜனாக வந்தாலும் நாம் அவனிடம் போய்க் கலந்து பழகுவோமா? கன்னத்தில் போட்டுக்கொண்டு வரம் கேட்போம். இன்னம் கொஞ்சம் ஜாஸ்தியாகப்போனால், தர்சன மாத்திரத்திலேயே மூர்ச்சைபோட்டு விழுந்து விடுவோம். அதற்காகத்தான் நம் போன்ற மநுஷ்யனாகவே அவதாரங்களில் வந்து நம்மை இழைந்து பழக வைக்கிறது. ஒரு வேடனா, குரங்கா, இடைச்சியா-இவர்கள்கூட ‘நமக்கு இவன் பரம ஸொந்தம்’ என்று பாந்தவ்யம் பாராட்டும்படியாக அவதாரம் செய்வது, தன் ஆசை தீர, அவர்களுடைய ஆசை தீரவும்தான் எல்லோரும் ஸஹஜமாக ஒட்டிப் பழக வேண்டுமானால் அவர்கள் மாதிரியே ஆடினால்தான் முடியும் என்றுதான் பரமாத்மா அவதாரங்களில் ஆசாபாசம், கோபம், அழுகை எல்லாம் காட்டுவது. ஆனால் மொத்தத்தில் கணக்குப் பார்த்தால் இதற்கெல்லாம் மிகவும் அதிகமாக உத்தமமான ப்ரேமை, ஞானம், சீலம், ஸத்யம் எல்லாவற்றையும் அவதாரபுருஷன் நடத்திக்காட்டி தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணியிருப்பான்.
தன்னுடைய ஆசையை அவதாரத்தினால் நிறைவேற்றிக் கொண்டால்மட்டும் போதாது; ஜனங்களுக்கும் அதனால் நல்லதற்கு வழி ஏற்படும்படி உதவ வேண்டும் என்று நினைத்து, இந்த இரண்டையும் சேர்த்து முடிச்சு போடுவதற்கு ஸந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். தர்மம் ரொம்பவும் சீர்கெடுகிறபோது, ‘ஸந்தர்பம் வந்து விட்டது’ என்று அவதாரம் செய்கிறான்.
இதில் அவன் மாநுஷமாக இருப்பதைப் பார்த்து நமக்கு ஸந்தேஹம் வந்துவிடப் போகிறதே என்றுதான், “எத்தனை தான் மநுஷன் மாதிரி நான் இருந்தாலும், மனித உணர்ச்சிகளைக் காட்டுகிறது போலவும் மனிதர்களுடைய உலக இன்பங்களை அநுபவிக்கிறது போலவும் இருந்தாலும், மனிதர்கள் மாயை வசப்பட்டு இப்படி இருப்பது மாதிரி நான் இல்லை. மாயையை நானாக்கும் வசப்படுத்திக்கொண்டு-ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய… அவஷ்டப்ய (ப்ரக்ருதி என்றால் மாயைதான்) இப்படிச் செய்கிறேன். பரமாத்மாவாக, பரப்ரஹ்மமாக நான் உள்ள நிலையில் மாயை என்கிட்டேயே வரமுடியாது. ஆனாலும் லீலைக்காக நான் ஈச்வரனாக உள்ளபோது மாயையை வைத்துக்கொண்டுதான் ஸ்ருஷ்டி பண்ணமுடிகிறது. அதனால் அப்போது மாயையை நான் இழுத்து என்னிடம் வைத்துக்கொண்டு, அதாவது என் வசப்படுத்திக்கொண்டு, முன்னே ப்ரளயத்தில் லயித்துப் போயிருந்த பூத க்ராமத்தை (உயிர்க்குலத்தை) மறுபடி பிறவிகள் எடுக்கச் செய்கிறேன்.
லோக லீலையில் தர்மம் ரொம்பவும் க்ஷீணித்துப் போகும்போதும் மாயையைப் பிடித்திழுத்து வசப்படுத்திக் கொண்டு, என்னிடமே அதற்குரிய முக்குணங்கள் வந்து விட்டாற் போலவும், அதனால் நானும் மாநுஷமான ஒரு ஜீவனாகிவிட்டாற் போலவும் வேஷம் போட்டுக்கொண்டு அவதாரமாகப் பிறப்பெடுக்கிறேன்” என்று சொன்னார். கொஞ்சத்தை மட்டும் சொல்லி மீதியை நாம் புரிந்து கொள்ளவிட்டு கீதோபதேம் செய்தார்.
பூதக்ராமத்தைப் பற்றி குறிப்பிடும்போது “அவசம் ப்ரக்ருதேர் வசாத்” என்று, அதாவது, மாயையின் வசப்பட்டு ஸ்வாதீனமே இல்லாமல் ஜீவ ஸமூஹம் இருக்கிறதாகச் சொல்லி, அதற்கு Contrast -ஆகத் தன்னுடைய அவதார ஜன்மாவைக் குறிப்பிடும்போது “ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய“, அதாவது, மாயையைத் தாம் வசப்படுத்திக்கொண்டு இப்படிச் செய்வதாகச் சொன்னதிலேயே இத்தனை விஷயத்தையும் கெட்டித்து அடக்கிவிட்டார். அவதாரம் மாநுஷமாகத் தோன்றுவதால் மாயைக்கு உட்பட்டது என்று நாம் கொஞ்சங்கூட நினைத்துவிடக்கூடாது என்று, ‘அதுதான் எனக்கு வசம்; உங்களைப்போல் நான் அதற்கு வசமில்லை’ என்றார். (“ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய”, “ப்ரக்ருதிம் ஸ்வாம் அஷ்டாப்ய” என்ற) இரண்டு இடத்திலும் “ஸ்வாம்”, “ஸ்வாம்” என்று போட்டு “மாயை என்னுடையது; நான் உங்களைப்போல் மாயையின் உடைமையில்லை” என்று காட்டினார். “ஸ்வாம்” என்றால் “என்னுடைய”. “ஸ்வாமி” என்றால் உடைமையாளார் என்று அர்த்தம். அவருடைய உடைமை மாயை, அதை அவர் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். “வா” என்று சொல்லி வசப்படுத்தி வைத்துக்கொண்டு விளையாடவும் விளையாடலாம்; “போ” என்று தூக்கிப்போட்டுவிட்டு ஆத்மாராமராகவும் உட்கார்ந்திருக்கலாம்.
நம் மாதிரி அவதார புருஷனுக்கும் கோபம், துக்கம், பயம் முதலானவை வர அவன் ‘அலவ்’ பண்ணுவான். இதைப்பற்றி ஒன்று தோன்றுகிறது: அவன் ஆத்மாவிலேயே அச்சடித்தமாதிரி உள்ளூற இருப்பதாலேயே இப்படி ‘வெளியிலே மனஸுக்குப் பல தினுசு உணர்ச்சிகள்தான் ஏற்பட்டு விட்டுப் போகட்டுமே; அதனால் நம் உள் ஸ்திதி பாதிக்கப்படுகிறதா என்ன?’ என்றே அவற்றை ‘அலவ்’ பண்ணுகிறான் என்று தோன்றுகிறது.
ஸாதாரணமாக ஒரு ஆத்ம ஞானி என்றால் அவர் ‘சரீரம் எப்படிப்பட்ட நிலையில் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! குளிரில்தான் விரைக்கட்டும், நெருப்பில்தான் பொசுங்கட்டும்! அது ஒன்றும் ஆத்மாவை பாதிக்கவில்லையே!’ என்று அவர்பாட்டுக்கு இருப்பாரென்று தெரிகிறது. ஆனால் ‘மனஸும் ஆத்மாவுக்கு வேறானதுதானே? அது எப்படி வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆசை, அழுகை, கோபம் எது வேண்டுமானாலும் பட்டுவிட்டுப் போகட்டும்’ என்று அவர் இருப்பதாகச் சொல்வதில்லை. ஏனென்றால் அவரும் ப்ரக்ருதி மாயைக்கு உட்பட்ட ஜீவனாகத் தோன்றியவர்தான். அந்த மாயை கொடுத்திருக்கிற மனஸ்தான் இவரை ஒரு தனி ஜீவனாக ஆக்கி வைத்தது. ஆகையால் அந்த மனஸை அடக்கிப் போட்டுவிட்டே அவர் தனியான ஜீவாத்மாவாக இல்லாமல் பரமாத்ம நிலையை அடைந்து ஞானியாயிருப்பது. அப்படியிருக்கும்போது அவர் எப்படி மனஸை மறுபடி கூப்பிட்டு வைத்துக்கொள்ள முடியும்? (மனஸுக்கே உரியதான) ஆசை, கோபம், அழுகை முதலானதுகளை ‘அலவ்’ பண்ண முடியும்? பகவான்தான் மாயைக்கு அதீச்வரன். அவன்தான் ப்ரக்ருதிக்கு வசப்படாமலே, தானாக, தன்னிஷ்டப்படி, ஸங்கல்பப்படி ஜீவன் மாதிரி அவதரித்தவன். அவன் பரமாத்மாவாக இருக்கிற ஞானநிலையிலிருந்து விலகுவதென்பது ஒரு போதும் நடக்க முடியாத விஷயம். ‘ஞானியின் சித்தத்தையும் பராசக்தியான மஹாமாயை கவர்ந்து மோஹத்தில் ஆட்படுத்த முடியும்’ என்று இருக்கிற மாதிரி* பகவானைப் பற்றி ஒரு காலத்திலும் சொல்லமுடியாது. ஏனென்றால் அவனுடையது, அவனை depend பண்ணிக்கொண்டே உயிர்வாழ்வதுதான் அந்தப் பராசக்தி, மாயை எல்லாமுமே! அதனால் அவன் ஒருத்தனே பகவானாக உள்ள நிலையிலோ, அவதாரமாக வருகிற நிலையிலோ, மாயாமனஸைத் தன்னிச்சையாக ‘வா’ என்றும் கூப்பிட்டு வைத்துக் கொள்ளலாம், ‘போ’ என்றும் பிடித்துத் தள்ளலாம்.
மநுஷாள் மாதிரி இருந்து அவர்களோடு கலந்து பழகி அவர்களுக்கு வழிகாட்டி உத்ஸாஹப்படுத்த வேண்டுமென்று அவன் அவதாரமாக வருகிறபோது வேஷம் நன்றாகப் பொருந்துவதற்காகவே கொஞ்சங்கூடத் தயங்காமல், பயப்படாமல் மனஸின் நானாவிதமான உணர்ச்சிகளையும் ‘அலவ்’ பண்ணுகிறான். அதனால் ஒரு அவதார புருஷனுக்கும் கோபம் வரும், பயம் வரும், அழுகை வரும், ச்ருங்காரம் வரும். ஒரு ஞானி சரீரம் எப்படி வேண்டுமானால் ஆடிவிட்டுப் போகட்டுமே என்று இருக்கிற மாதிரியே அவதார புருஷன் மனஸும்தான் எப்படிவேண்டுமானால் ஆடி விட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவதால்தான் இப்படியெல்லாம் நடப்பது! அப்போதைக்கு மேல்மனஸிலேதான் அவதாரத்துக்கு இந்த உணர்ச்சிகளால் பாதிப்பு இருக்கிற மாதிரியே இருக்குமே தவிர, நம் மாதிரி அந்த உணர்ச்சிகளே அவனை அடித்துக்கொண்டு போய்விடுவதென்பது ஒருபோதுமில்லை. எத்தனை ஆசை, கோபம், அழுகை இருந்தாலும் அது அவனுடைய பரமாத்ம நிலையைப் பாதிக்க முடியாது; லோகத்தில் அவன் முடிவாகப் பண்ணவேண்டிய தர்மஸம்ஸ்தாபனத்தைப் பண்ணி முடிப்பதற்கும் குந்தகம் ஏற்படுத்த முடியாது. கொஞ்சம் ஃபெயிலாகிறதுபோல அவன் சாய்ந்தாலும் அப்புறம் நிமிர்ந்து நின்று பாஸ் பண்ணிவிடுவான். சாய்ந்தும் நிமிர்ந்தும் ஆடுவது அவனுக்கு விளையாட்டு!
* துர்கா ஸப்தசதி வாக்கியத்தை நினைவு கூர்வது.