அவதாரம் குறித்து ஐயம் கூடாது : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இந்த விளையாட்டிலே அவதார புருஷன் மாயையின் ஆதீனத்தால்தான் இருக்கிறானோ என்று தோன்றுமளவுக்கும் போய்விடுவதுண்டு! அப்படி ஸந்தேஹப்படக் கூடாதென்று தான், “ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய : மாயையை நான் வசப்படுத்தி அடக்கி வைத்துக்கொண்டு” என்று பகவான் கருணையோடு ‘க்ளியர்’ பண்ணியிருக்கிறார்.

ஆசார்யாள் சரித்ரத்திலேயே யாருக்காவது, எங்கேயாவது, “ஏன் இப்படிப் பண்ணினார்? காலடியில் ஒரு நதியை திசை மாற்றிக் கிட்டே ஓடப்பண்ணி, அப்புறம் நர்மதை ப்ரவாஹத்தை அடக்கி, இன்னும் ஸர்வஜ்ஞர் என்னும்படி ஸகல ஞானத்துடனும் கூடி தெய்விக சக்தராக இருந்த அவர் ஏன் இப்படி மநுஷர் மாதிரிப் பண்ணினார்? காசியில் விச்வநாதர் பஞ்சமனைப் போல் வந்தபோது ஏன் விஷயம் தெரிந்துகொள்ளாமல் அவனை தூரப் போகச் சொன்னார்? அப்புறம் அவனிடம் தாம் உபதேசம் வாங்கிக் கொண்டு நமஸ்காரம் பண்ணினார்?” என்கிற மாதிரி கேள்வி எழுந்தால் அப்போது கீதா வாக்யத்தை நினைத்துத் தெளிவு பெறவேண்டும்.

அவதாரத்திடம் மாயைக் கலப்பு இருக்கிறமாதிரிதான். ஆனால் மாயை யஜமான ஸ்தானத்திலிருந்து கொண்டு நம்மை ஆட்டிவைப்பதுபோல் அவதாரத்தை ஆட்டிவைக்க முடியாது. அவதாரம் யஜமானாக இருந்து, மாயை அந்த யஜமானுக்கு உடைமையாக, அடிமையாக இருக்கிறது. ஆனாலும் கெடுபிடி யஜமானாக இல்லாமல் விளையாட்டு விநோத யஜமானாக அவன் இருப்பதால் மாயைக்குத் தன் மேல் ஆதீனம் இருப்பதுபோலத் தோன்றுமளவுக்கு அதை ஆடவிடுகிறான்! ஆனால் சட்டென்று அதைப் “போ” என்று தள்ளியும் விடுவான். “மரமே, கண்டாயா? மட்டையே, கண்டாயா?” என்று விரஹ தாபத்தில் அழுதவனே அப்புறம் — எத்தனையோ ச்ரமப்பட்டு, ஸமுத்ரத்துக்கே அணை கட்டி பெரிசாக யுத்தம் பண்ணி ஜயசாலியாக ஆன அப்புறம் — எத்தனையோ ஆவலுடன் அந்தப் பத்னி வரும்போது, கொஞ்ங்கூட ஆசாபாசமே இல்லாமல், “கடமைக்காக உன்னை மீட்டேனே தவிர எனக்கு ஒன்றும் ‘அட்டாச்மென்ட்’ இல்லை. நீ எங்கேயாவது போய்க்கொள்” என்பான்! இந்த நிமிஷம் ஒரு அஸுரனைக் கொல்லும் திவ்ய சக்தி, அடுத்த நிமிஷம் ஒரு இடைச்சியிடம் அடி வாங்கிக்கொள்ளும் அபலமான மநுஷத்தன்மை என்று அவதாரம் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி போகமுடியும் என்று புரிந்துகொண்டால் ஸந்தேஹம் வராது. ஒரு அவதாரத்தைப்பற்றி, ‘அது ஏன் இப்படி? இது ஏன் இப்படி? ஒரே மாறுபாடாயிருக்கிறதே!’ என்று கேள்வி கேட்கமாட்டோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கலந்து பழகும் ஆசைக்காகவும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  முன்னெப்போதுமில்லா தர்மக் குலைவு
Next