முன்னெப்போதுமில்லா தர்மக் குலைவு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவதாரத்தைப் பற்றி க்ருஷ்ண பரமாத்மா சொன்னது தான் ஸ்ரீசங்கராவதாரத்தை ஏற்படுத்திவிட்டது. தர்மம் நலிந்து, அதர்மம் பெருகும்போதெல்லாம் அவதரித்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டாரல்லவா? அந்த வாக்கைப் பரிபாலனம் பண்ணிக்காட்ட வேண்டிய சூழ்நிலை அவர் பரமபத ஆரோஹணம் செய்து இரண்டாயிரம் – இரண்டாயிரத்தைநூறு வருஷங்களுக்கு அப்புறம் ஏற்பட்டது. அந்தக் காலத்து தேச ஸ்திதியை நிறையச் சொல்லியாயிற்று.

சுருக்கமாகச் சொல்வதென்றால் க்ருஷ்ணாவதார காலத்தில் ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி தர்மங்களுக்கு ஹானி ஏற்பட்டிருந்தது போலவே… இல்லை, அதைவிடப் பலமடங்கு தீவிரமாக, இப்போது ஏற்பட்டிருந்தது.

க்ருஷ்ணர் காலத்தில் ப்ரவ்ருத்தி மார்க்கம் யோகமாக அநுஷ்டிக்கப்படாமல் வெறும் கர்மாநுஷ்டானமாக ஸ்வர்காதி பலன்களுக்காகவே பின்பற்றபட்டதென்றால், இப்போது அதோடுகூடவே, அதைவிட மோசமாக இன்னொன்றும் நடந்தது. வெறும் கர்மாநுஷ்டானமாகவாவது அவர்கள் வேதத்தில் சொல்லியுள்ள காரியங்களைப் பின்பற்றினார்கள் அல்லவா? இப்போதோ அந்த வேதோக்த கர்மாக்களை அடியோடேயே புறக்கணிப்பவர்களும் நிறைய ஏற்பட்டுவிட்டார்கள். நிவ்ருத்தியிலும் இப்போது ஞானம் மாதிரியே ஒரு லக்ஷ்யத்தைக்காட்டி, ஆனால் சூன்யத்திலோ, அல்லது எதுவும் முடிவு செய்வதற்கில்லை என்ற த்ரிசங்கு ஸித்தாந்தத்திலோ கொண்டுபோய்த் தள்ளுவதாக மதங்கள் ஏற்பட்ட மாதிரி முன் எப்போதும் இருந்ததில்லை.

ஆக, ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி தர்மங்களை ரக்ஷித்து ஸம்ஸ்தாபனம் செய்ய நிச்சயமாக பகவானின் அவதாரம் ஸம்பவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அவதாரம் குறித்து ஐயம் கூடாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கீதாவாக்ய பரிபாலனம்:பிரச்னையும் தீர்வும்
Next