ப்ரம்மசர்ய ஆச்ரமத்திலும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

[சில நிமிஷங்கள் யோசனையில் இருந்தபின் : ] இந்த அவதாரத்தில் ஆயுஸ் முழுக்க உபதேசம், ஸந்நியாஸம் என்றால் முழுக்கவே இல்லை. முதலில் கொஞ்சம் வருஷம் ப்ரஹ்மசர்யம், குருகுலவாஸத்தில் பூர்த்தியாக வித்யாப்யாஸம்; அப்புறந்தான் ஸந்நியாஸமும், உபதேசம் பண்ணுவதும்.

அவதார கார்யத்திற்கு 32 வருஷம் தேவைப்பட்டதென்று நான் சொன்னது ஸரியில்லை. அதைவிடவும் ஒரு எட்டு வருஷம் குறைச்சலாகவே போதுமென்றிருந்தது.

தீடீரென்று ஒரு குழந்தை உபதேசம் செய்கிறதென்றால் இது ஏதோ தெய்விகமான அத்புதம் என்று ஆகிவிடும். தெய்விகமும், மநுஷத்தன்மையும் கலந்திருப்பதான அவதார லக்ஷணத்துக்கு இது பங்கம் உண்டாகிவிடும். ஒரு தெய்வக் குழந்தையை ஜனங்கள் எப்படித் தங்களுக்கான ‘மாட’லாக நினைத்து பின்பற்ற முடியும்? அதன் உபதேசம் தங்களுக்கும் அநுஷ்டான ஸாத்யம் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஒரேயடியாய் உச்சஸ்தானத்தில் அமர்த்தப்பட்ட அவதாரத்துக்கும் அப்போது ஜனங்களோடு கலந்து பழகும் ஆசை நிறைவேறாது. உபதேச குருவாக வருகிறபோதே ஒரு உச்சஸ்தானம், ஒதுக்கம் எல்லாம் வரத்தான் செய்யும். ரொம்பவும் நியமமாயிருந்துகொண்டு ஞான வைராக்யங்களை உபதேசித்துக்கொண்டிருப்பவர் மற்ற அவதாரங்களைப்போல ஜனங்களோடு அத்தனை ‘இன்டிமஸி’யுடன் உறவு கொண்டாட முடியாதுதான். ஏதோ கொஞ்சத்தில் கொஞ்சம் முடிவதும் அவர் அற்புத லேபிள் ஒட்டிக் கொண்டே பிறந்தாரானால் அடியோடு போய்விடும்!

அதனால், “க்ருஹஸ்தாச்ரமத்தின் மூலம் மநுஷ்யனுக்கு ‘மாட’லாக எத்தனையோ பாடங்களைக் காட்டத்தான் நமக்கு அடியோடு முடியாதென்றாலும், ப்ரஹ்மசாரியாக இருந்தாவது அதில் ‘மாட’லாக இருந்து காட்டுவோம்” என்று பரமாத்மா நினைத்தார்.

ப்ரம்மசர்ய ஆச்ரமம் வஹிப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. என்னவென்றால், வேத வழியை நிலை நாட்டுவதே அவதார நோக்கமாயிருக்க, வேதத்தின் கர்ம ஸம்பந்தம் என்பதே இல்லாத ஸந்நியாஸிகவே அவதாரம் ஆயுஸ் முழுக்க இருந்துவிட்டால் எப்படி? ஸந்நியாஸிக்கும் (உபநிஷத்துக்களின்) மஹாவாக்யங்களால் வேத ஸம்பந்தம் இருக்கிறதென்றாலும், பெரும்பாலான ஜனங்கள் பண்ணக்கூடியது அவன் பண்ணும் மஹாவாக்ய விசாரம் அல்லவே! அவர்களுக்கானது வைதிக கர்மாக்கள் தானே? அதாவது, ப்ரவ்ருத்தி மார்க்கம்தான். அதுவோ க்ருஷ்ணர் காலத்தையும்விட இப்போது கெட்டுப் போயிருந்தது. வர்ண விபாகம் வேண்டாம் என்ற மதங்கள் இப்போதுதான் பரவி, வைதிக கர்மாநுஷ்டானத்திற்கு பெரிய ஹானி உண்டாக்கி வந்தன. இந்த ஸமயத்தில் தோன்றும் ஒரு அவதாரம் நிவ்ருத்திக்கான சித்த பரிபக்வம் பெற்ற கொஞ்சம் பேருக்கு மட்டும் அத்வைதத்தைச் சொல்லி விட்டுப் போய்விட்டால் எப்படி ஸரியாயிருக்கும்? லோகத்தில் பொதுவாக எப்படி தர்ம ஸம்ஸ்தாபனம் ஏற்படும்? முடிந்த முடிவாக ஞான லக்ஷ்யத்தைக் காட்டி நிவ்ருத்தியை நிலை நாட்டுவதே இந்த அவதாரத்தின் தலையான உத்தேசமானாலும், ஆரம்பமும், மத்தியும் இல்லாமல் முடிவுக்கு எப்படிப் போவது? லோகம் பூராவுக்கும் தர்ம ஸம்ஸ்தாபனம் என்னும்போது ப்ரவ்ருத்தி தர்மத்தில், அதாவது வேதோக்தமான கர்மாநுஷ்டானத்தில் பெரும்பாலான ஜனங்களை ஊக்கி உத்ஸாஹப்படுத்தாமல் ஒரு அவதாரம் முடிந்து போவதற்கில்லை. வியவஸ்தைகள் கெட்டுப்போய் ஜனங்களெல்லாம் ரொம்பவும் அசாஸ்த்ரீயமாகக் கார்யங்களைச் செய்துகொண்டிருக்கும்போது அவர்களுக்கு சாஸ்த்ரோக்தமான கர்மாக்களில் ஈடுபாடு ஏற்படுத்தித் தரவேண்டியது அவதாரத்தின் முக்யமான கடமையாக ஆகியிருந்தது. ஆகையால் பெருவாரியான ஜனங்களை உத்தேசித்து வைதிக கர்மாநுஷ்டானம், ஆச்ரம வ்யவஸ்தைகள் ஆகியவற்றையும் (இந்த அவதாரத்தில்) வலியுறுத்திச் சொல்லத்தான் வேண்டும் என்று ஸ்வாமி நினைத்தார்.

சொன்னால் மட்டும் போதாதே! சொன்னதை ஸொந்த வாழ்க்கையில் எக்ஸாம்பிளாக நடத்திக் காட்டினால்தானே சொல்லுக்குச் சக்தி ஏற்படும்? ஆனால் வைதிக கர்மாநுஷ்டானமில்லாத ஸந்நியாஸி எப்படி அதற்கு எக்ஸாம்பிளாக வாழ்ந்து காட்ட முடியும்?

இதை ஸமாளிக்கவுந்தான், ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்தில் முதலில் இருந்துவிட்டு அப்புறம் ஸந்நியாஸியாவது என்று தீர்மானம் பண்ணினார். க்ருஹஸ்தன் மாதிரி அத்தனை யாக யஜ்ஞாதி கர்மாக்கள் ப்ரம்மசாரிக்கு இல்லாவிட்டாலும் இவனுக்கும் அநேக வைதிக அநுஷ்டானங்கள் உண்டு. ஆதலால், ‘வழிகாட்டியாக ப்ரம்மசர்யாச்ரமத்திலிருந்து கொண்டு செய்ய முடிந்ததையெல்லாம் செய்யலாம்-வேதாத்யயனம் பண்ணலாம்; ஸமிதாதானம் பண்ணலாம்; பிக்ஷை எடுத்து வரலாம்; இந்த ஆச்ரமத்திற்குரிய நான்கு வ்ரதங்களை அநுஷ்டிக்கலாம்; இதெல்லாம் வறட்டு வறட்டு என்று வெறும் கார்யமாகப் போய்விடாமல் ஹ்ருதயம் கலந்து ப்ரியமாக, பணிவாக குரு சுச்ரூஷை பண்ணலாம்-‘பெர்ஃபெக்டா’க இப்படி நடத்திக் காட்டிவிட்டு அப்புறம் ஸந்நியாஸத்திற்குப் போகலாம். அசாஸ்த்ரியமாக பல பிக்ஷுக்கள் இந்த நாளில் தோன்றியிருக்கிற மாதிரி இல்லாமல், ‘இந்தக் குழந்தை ஸந்நியாஸி யார் தெரியுமாவாம்? நியமமாக குருகுலவாஸம் பண்ணிவிட்டு, அப்பபுறம் சாஸ்த்ரோக்தமாக, குருமுகமாக (ஸந்நியாஸ) தீக்ஷை வாங்கிக்கொண்ட குழந்தையாம்’ என்று லோகம் பேசும்படியாக நடத்திக் காட்டவேண்டும். க்ருஹஸ்தனாயிருந்து தார-புத்ராதிகள், அதிதிகள் ஆகியவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்துகாட்ட முடியாவிட்டாலும், ப்ரஹ்மசாரியாயிருந்து ஆசார்ய ஸேவை, தாயாருக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஆகியவற்றை சுத்தமாக நடத்திக் காட்ட வேண்டும். வேத சாஸ்த்ரங்களில் லோகத்துக்கு மறுபடி பிடிப்பு ஏற்படுத்தித் தரவேண்டிய அவதாரம், ஒரு சாஸ்த்ரமும் தேவையில்லாத அதிவர்ணாச்ரம ஞானியாகப் பிறந்து விடாமல், ப்ரஹ்மசாரியாகவாவது இருந்து சாஸ்த்ரோக்தமான கர்மாக்களைச் செய்து அப்புறமும் சாஸ்த்ரோக்தமாக ஸந்நியாஸ தீக்ஷை பெற்று, அந்த ஆச்ரமத்துக்கான நியமங்களைப் பின்பற்றிக் காட்டுவதுதான் முறை” என்று பரமாத்மா நினைத்தார்.

நல்ல வேளையாக ஒருத்தனுக்கு நான்கு ஆச்ரமங்களும் ‘கம்பல்ஸரி’ தான் என்று வைக்காமல் நல்ல பக்வம் அடைந்தவனானால் ப்ரம்மசாரி க்ருஹஸ்தாச்ரமம் ஏற்காமல் அந்த ஆச்ரமத்திலேயே ஆயுஸ் முழுதும் இருக்கலாம் — ‘நைஷ்டிக’ ப்ரஹ்மசாரி என்று இருக்கலாம் — என்றும், இன்னும்கூட மனஸ் பக்வப்பட்டு விவேக வைராக்யம் நிரம்பியிருந்தால் ப்ரஹ்மசர்யத்திலிருந்தே ஸந்நியாஸாச்ரமத்திற்குப் போகலாமென்றும் சாஸ்த்ரங்களில் இருக்கிறது. போதாயனர், கௌதமர், வஸிஷ்டர், உசனஸ், அங்கிரஸ், யமன், காத்யாயனர், வ்யாஸர் ஆகியவர்கள் கொடுத்துள்ள ஸ்ம்ருதிகளில் (தர்ம சாஸ்த்ரங்களில்) இப்படிக் இருக்கிறது. ஜாபால ச்ருதியும் யோக்யதாம்சமுள்ள ப்ரஹ்மசாரி நேரே ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ளலாம் என்கிறது. “ஆகையினால் இந்த அவதாரத்தில் அப்படித்தான் பண்ண வேண்டும். குழந்தையாகவும் ப்ரஹ்மசாரியாகவும் முதலில் ஒரு எட்டு வருஷம் இருந்துவிட்டு அப்புறம் ஸந்நியாஸியாகி அவதார கார்யத்தை முடிக்கலாம். க்ருஹஸ்தாச்ரமம் என்றால் இந்த யுகத்து ஜனங்களுக்கு விகல்பமான எண்ணங்கள் தோன்றுவதுபோல ப்ரஹ்மசர்யாச்ரமத்தைப் பற்றி இல்லாததால் இந்த மாதிரிப் பண்ணலாம்” என்று தீர்மானித்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஏன் ஸந்நியாஸியாக அவதாரம்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அந்தண குல அவதாரம்
Next