அந்தண குல அவதாரம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இன்னொன்றும் நினைத்தார்.

க்ருஷ்ணர் அநேக விதமான கார்யங்கள் செய்ததில் துஷ்ட சிக்ஷணமும் நிறையச் செய்தார். ராமரும் மநுஷ்யர்களுக்கு எக்ஸாம்பிளாகவே வாழ்க்கை நடத்தியதோடுகூட நிறைய துஷ்ட சிக்ஷணமும் பண்ணினார். மத்ஸ்யத்திலிருந்து மற்ற அவதாரங்களெல்லாம் முக்யமாகப் பண்ணியதும் துஷ்ட சிக்ஷணம்தான். தன் ராஜ்யத்தில் துஷ்டர்களின் ஆட்சி ஏற்படாமல் ஒரு ராஜா சத்ரு ஸம்ஹாரம் செய்கிற மாதிரியே, த்ரிலோக ராஜாவாக இருக்கும் பரிபாலன மூர்த்தியான விஷ்ணு இந்த அவதாரங்களில் செய்திருக்கிறார். அதாவது க்ஷத்ரிய கார்யத்தைச் செய்திருக்கிறார். இதை வெளிப்படத் தெரிவிப்பதுபோலக் கடைசியான ராம-பலராம-க்ருஷ்ணாவதாரங்கள் மூன்றிலும் க்ஷத்ரியராகவே அவதாரம் செய்தார்.

இப்போது கலியிலே துஷ்ட சிக்ஷணமே முடியாது. உபதேசந்தான் செய்வது என்பதாக அவதாரம் ஏற்படவிருந்தபோது, அதற்குப் பொருத்தமாக ஸாத்விக குணத்தோடு, ஆசார்யனாக இருந்துகொண்டு உபதேசிப்பதற்கே ஏற்பட்ட ப்ராம்மண ஜாதியில் அவதரிப்பதுதான் யுக்தமாயிருக்குமென்று திவ்ய ஸங்கல்பமாயிற்று.

க்ருஷ்ணர் கொடுத்த வாக்குறுதிப்படிதான் ஆசார்யாள் அவதரித்தது என்றாலும் அந்த அவதாரத்துக்கும் இதற்கும் வித்யாஸமாகப் பல பார்த்ததில் இதுவும் ஒன்று: அதிலே க்ஷத்ரிய தர்மத்தை முக்யமாகப் பண்ணிக் காட்டியது — இதிலே ப்ராஹ்மண தர்மம் ஒன்றை மட்டுமே பண்ணிக் காட்டியது.

ஜனங்களில் அத்தனை லெவல்களில் இருக்கிறவர்களையும் அவரவருக்குப் பிடித்தமாதிரி செய்து காட்டி ஆகர்ஷித்தவர் க்ருஷ்ண பரமாத்மா. ஒரு திருடனாகட்டும், ஒரு காமுகனாகட்டும், ஒன்றும் தெரியாத இடைப் பசங்களாகட்டும்-அவர்கள் ஒவ்வொருத்தருங்கூட, ‘அட, இவன் நம்மைச் சேர்ந்தவண்டா!’ என்று நினைத்து வந்து ஒட்டிக்கொள்ளும்படியாக நவநீத சௌர்யம் (வெண்ணெய் திருடல்) , ராஸக்ரீடை, மாடு மேய்ப்பது, எல்லாமும் பண்ணினார். ஞானாசார்ய ஸந்நியாஸியாக எடுக்கும் அவதாரத்தில் அந்த மாதிரியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியுமா? இந்த வித்யாஸங்களோடு அதிலே க்ஷத்ரிய தர்மம், இதிலே ப்ராஹ்மண தர்மம் என்று அநுஸரித்துக் காட்டியதும் சேர்கிறது.

ஒரே தர்ம ஸம்ஸ்தாபனமே உத்தேசமானாலும் ஸந்தர்ப்ப சூழ்நிலையைப் பொருத்து அவதாரத்துக்கு அவதாரம் எப்படி ஒரேயடியாக வித்யாஸமாயிருக்கிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ப்ரம்மசர்ய ஆச்மரமத்திலும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  விஷ்ணு அவதாரமும் சிவாவதாரமும்:சிவ- விஷ்ணு ஒற்றுமை வேற்றுமைகள்
Next