எந்தப் பலனை விரும்பி, அதற்காக எந்த தெய்வத்தை உபாஸிக்கிறவனானாலும் சரி, அவன் இந்த உபாஸனைக்கே ஏதாவது உபத்ரவம் வந்து விடப்போகிறதே என்று கவலைப்படுகிறான். ‘இப்படிப் படலாமா? இது அந்த தெய்வத்திடம் இவனுடைய விச்வாஸக் குறைவு மாதிரியல்லவா இருக்கிறது? இவன் ஆரம்பிப்பது ஒரு தெய்வ உபாஸனை. அப்படியிருக்க அந்த தெய்வம் இவன் அதற்குச் செய்யும் உபாஸனைக்கே உபத்ரவம், விக்னம் வரப் பார்த்துக்கொண்டிருக்குமா?’ என்று கேட்கலாம். ஆனால் வாஸ்தவத்தில் இவன் கவலைப்படுவதற்கு நியாயமிருக்கவே செய்கிறது. சாஸ்த்ர புராணங்களில் சொல்லியிருப்பதைப் பார்த்துவிட்டுத்தான் இவன் இப்படிக் கவலைப்படுகிறான். இவனுடைய உபாஸனா மூர்த்தி, இன்னும் மற்ற தெய்வ மூர்த்திகள் ஆகிய எல்லாருங்கூட லோகாநுக்ரஹமாக பெரிய காரியங்களை ஆரம்பிக்கும்போது அவர்களுக்கே ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் விக்னம் ஏற்பட்டிருப்பதை இவன் புராணங்களில் பார்த்திருக்கிறான். அப்போது அவர்கள் பிள்ளையாரைப் பூஜை பண்ணித்தான் விக்ன நிவ்ருத்தி பெற்றிருக்கிறார்களென்றும் புராணங்களில் படித்திருக்கிறான். ‘அப்படிப்பட்ட தெய்வங்களுக்கே விக்னம் வந்ததென்றால் நாம் எம்மாத்திரம்?’ என்று இவன் கவலைப்படுவது நியாயந்தானே? ஒன்று, தான் உபாஸனைக்கு வேண்டிய திரவியங்கள் ஸம்பாதிப்பதிலோ, அல்லது மனஸை அதில் நிறுத்தி உபாஸிப்பதிலோ இடையூறு ஏற்படலாம். வீட்டிலே, ஊரிலே ஏதாவது நடந்து விக்னம் விளைவிக்கலாம். இது தனக்கு ஏற்படும் விக்னம். இப்படியில்லாமல், தன்னுடைய உபாஸனைக்கு உரிய தெய்வத்துக்கே ஏதாவது விக்னம் ஏற்பட்டு அது தனக்கு அநுக்ரஹம் செய்யமுடியாதபடியும் ஆகலாம். புராணங்களில் இப்படித் தானே (தெய்வங்களுக்கே விக்னம் உண்டாவதைப்) பார்க்கிறோம்? ஆனபடியால், எந்த விதமான விக்னமாக இருந்தாலும் ஸரி, அது விலகுவதற்காக அந்தத் தெய்வங்களும் பூஜித்தவரை நாமும் முதலில் பூஜித்துவிடுவோம் என்று முடிவு பண்ணுகிறான்.
ஸாதாரண மநுஷ்யனாக இருந்தால் இப்படி முடிவு பண்ணிப் பிள்ளையாருக்கு ஆரம்ப பூஜை பண்ணிவிட்டு அப்புறம் தான் எந்த தெய்வத்தை உபாஸிக்க வேண்டுமென்று உத்தேசித்திருந்தானோ அதைப் பூஜிப்பான்.
நம்முடைய ச்லோகத்தில் வரும் உபாஸகர் அப்படிப்பட்ட ஸாதாரண மநுஷ்யன் இல்லை. அவரை ‘தத்ஹோதோரிதி நீதிவித்’ என்று சொல்லியிருக்கிறது. அதாவது, அவர் தத்ஹேது என்கப்பட்ட ந்யாயத்தை அறிந்தவர். அந்த ந்யாயம் அறிந்தவரென்றால் தர்க்க சாஸ்த்ரம் தெரிந்த புத்திமான் என்றே அர்த்தம். எனவே அவர் நன்றாக யோசனை பண்ணி முடிவெடுப்பார். பிள்ளையார் விஷயத்தில் அவர் அப்படி நினைத்து என்ன முடிவு பண்ணுவாரென்றால்…
‘ஸகல தேவதைகளும் பிள்ளையாரைப் பூஜிக்கின்றன; அப்போதுதான் அவற்றால் நிர்விக்னமாக ஒரு கார்யத்தை முடிக்க முடியும்; பூஜிக்காத தேவதை எதுவாயிருந்தாலும் அதன் கார்யம் நடக்கமுடியாதபடி இவரால் விக்னம் செய்ய முடியும் – என்றால் இவர் அவை எல்லாவற்றையும் விடச் சக்தி வாய்ந்தவராக இருக்கவேண்டும். அதனால்தான் இவர் தயவை அவை யாவும் நாடியே ஆக வேண்டியிருக்கிறது. அவற்றின் தயவை இவர் நாடியதாக எங்கேயும் சொல்லியிருக்கவில்லை. அதனால் இவர் ஸர்வ சக்தரென்று தெரிகிறது. ஆனபடியால் அவர்கள் அளிக்கக்கூடிய பலன்களையும் ஸர்வ சக்தரான இவரே அளிப்பதற்கு வல்லவராக இருக்க வேண்டும். கணேச மூர்த்தங்களில் அநேகம் சொல்லி, அது ஒவ்வொன்றுக்கும் வைத்திருக்கிற பெயர்களைப் பார்த்தாலே இது வாஸ்தவந்தானென்று தெரிகிறது. லக்ஷ்மி கணபதி, வித்யா கணபதி, விஜய கணபதி என்றெல்லாம் பெயரிருப்பதைப் பார்க்கும்போது லக்ஷ்மி மாதிரி இவரே ஸம்பத்து அநுக்ரஹிப்பார், ஸரஸ்வதி மாதிரி கல்வியை அநுக்ரஹிப்பார், அம்பாள் – துர்கை – மாதிரி வெற்றியை அநுக்ரஹிப்பார் என்றெல்லாம் தெரிகிறது. எந்த விதமான பலனையும் அவர் அநுக்ரஹிப்பாரென்று காட்டுவதாக, ‘ஸர்வஸித்திப்ரத கணபதி’ என்றே ஒரு பெயரிலும் அவருக்கு மூர்த்தியிருக்கிறது!’ ஸித்தி விநாயகர்’, ‘வர ஸித்தி விநாயகர்’ என்ற பெயரில் அவருக்குப் பல கோவில்கள் ஏற்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். மற்ற ஸ்வாமிகளுக்கு ‘ஸித்தி’ என்று இப்படிப் பெயரோடு சேர்ப்பதாகக் காணோம்!
‘இப்படி இவர் இருப்பதால் இவர் ஸகல தேவதைகளுக்கும் மூலமான ஏகப் பரம்பொருளே என்று தெளிவாகிறது,’ -இவ்வாறு ‘ஏகம் பரம் தேவம்’ என்று பிள்ளையாரைத் தர்க்க சாஸ்த்ர அறிவாளி தெரிந்துகொள்கிறார்.
அப்புறம் தத் – ஹேது ந்யாயத்தை இவருடைய வழிபாட்டில் ‘அப்ளை’ பண்ணிப் பார்க்கிறார்.
அவர் நினைக்கிறார் : ‘ஒவ்வொரு பலனைத் தரும் ஒவ்வொரு தேவதையும் அரிசி வியாபாரி, பருப்பு வியாபாரி, மிளகாய் வியாபாரி மாதிரி. ஆனால் அவர்களில் எவரும் பிள்ளையாரின் சிபார்சில்லாமல் சரக்குப் போடமுடியாது. அதனால் முதலில் இவரைப் பிடித்து சிபார்சு வாங்கிவிட்டே அவர்களிடம் போய்ச் சரக்கு வாங்கவேண்டியதாகிறது. இவரோ எவர் சிபார்சும் இல்லாமல் தாமே அரிசி, பருப்பு, மிளகாய் முதலிய அத்தனையும் விற்கும் பலசரக்குக் கடைக்காரராக இருக்கிறார்! (‘ஸ்ர்வ ஸித்திப்ரதர்’ என்பது இது தானே?) அப்படியானால், இவரொருவரைப் பிடித்தே நமக்கு எது வேண்டுமானாலும் வாங்கி விடலாமே! வேறு வ்யாபாரிகளிடம் (தேவதைகளிடம்) எதற்காகப் போக வேண்டும்?
‘ஒரு உபாயத்தால் நேராக ஒரு பலனை அடையமுடியும் போது அந்த உபாயத்தை மட்டும் கொண்டே பலனைப் பெற்றுவிட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு, வேறே ஏதோ உபாயத்தை எடுத்துக் கொண்டு, அது பலன் தருவதற்காக முதலில் சொன்ன உபாயத்தைப் பிடித்து அப்புறம் இரண்டாவது உபாயத்தினால் பலனடைவது என்பது அசட்டுத்தனமாகச் சுற்றி வளைப்பதுதானே?
‘இதர தேவதா உபாஸனை பலன் தரத் தக்கதாக வேண்டும் என்ற உத்தேசத்துக்கு (‘தத்’துக்கு) ஹேதுவாக நாம் உபாஸிக்க வேண்டியிருக்கும் பிள்ளையார் தாமே அந்தப் பலனை (மூலமான ‘தத்’தை) யும் தரமுடியும் என்னும் போது இவரை உபாஸிப்பது மாத்ரமே போதுமே! இதர தேவதோபாஸனை எதற்கு? தத்ஹேதோரேவ தத்ஹேதுத்வே மத்யே கிம் தேந?
‘எப்படியும் இவரைப் பூஜிக்காமலென்னவோ நாம் எந்த தெய்வ வழிபாடும் செய்ய முடியாது. முதலில் இவருக்கு ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொண்டுதான் ஆக வேண்டும். இப்படியிருக்க, அப்புறம் மட்டும் இன்னொரு தேவதாராதனம் எதற்கு? விக்ன நிவாரண மூர்த்தியான இவர் வழிவிடாமல் மற்ற தேவதைகள் நமக்கு அநுக்ரஹிப்பதற்கில்லை என்கிறபோது, அதோடுகூட இவரே எந்த தேவதை செய்யக்கூடிய அருளையும் தாமே செய்வாரென்னும்போது, நாம் விரும்புகிற பலன் எதுவானாலும் சரி, அதைப் பெற இவரை மாத்ரம் வழிபட்டாலே போதும்.’
தத்ஹேது ந்யாயம் தெரிந்தவர் இப்படி நிச்சயித்து இவரே ஏகப் பரம்பொருள் என்று பூஜிப்பதோடு முடித்து விடுகிறார் : தத்ஹேதோரிதி நீதிவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம். ஆரம்ப பூஜை மட்டும் இவருக்கு, அப்புறம் இன்னொருத்தருக்கு விஸ்தாரமான பூஜை என்றில்லாமல், “இவருக்கே முழுப் பூஜையும்” என்று முடித்துவிடுகிறார்!