கொஞ்சம் வேறே தினுஸாகவும் சொல்லலாம். அதாவது, வெவ்வேறு பலன்களைத் தருவதற்கு வெவ்வேறு தெய்வங்கள் இருப்பது வாஸ்தவந்தான். விக்நேச்வரர் ஸர்வ சக்தரானாலுங்கூட எல்லாப் பலன்களையும் தாமே அளிப்பது என்று வைத்துக்கொள்ளாமல் விக்னத்தைப் போக்குவது என்ற ஒரு பலனை மட்டுமே தாம் அளிப்பவராக இருந்து கொண்டு, மற்ற தெய்வங்கள் அததற்கென்று விதித்திருக்கிற பலன்களைக் கொடுக்கும்படியாக விட்டுவிடுகிறாரென்றும் வைத்துக்கொள்ளலாம்.
ஏனென்றால், இவருக்குச் சொன்னது மற்ற தெய்வங்களில் சிலருக்கும் பொருந்துவதுதான். அதாவது, அந்த தெய்வம் ஒவ்வொன்றைக் குறித்த புராணத்திலும், ஆகம தந்த்ரங்களிலும் அந்த தெய்வத்தையே ஸர்வ சக்தி வாய்ந்த ஏகம், பரம் என்று சொல்லியிருக்கிறது. இது ஸத்யந்தான். இருக்கிற ஒரே பரமாத்மாதான் இப்படிப் பல தெய்வங்களாகியிருக்கிறது. அதுவேதான் நாமெல்லாராகவுங்கூட ஆகியிருக்கிறது. ஆனால் நமக்கு ஸர்வசக்தி வாய்ந்த அது தான் நாம் என்ற ஞானம் கொஞ்சங்கூட இல்லாதபடி நம்மை அதுவே மாயையால் மயக்கியிருக்கிறது. ஆனால் அது தெய்வங்களாகி இருக்கிறபோதோ அவற்றில் ப்ராதன தெய்வங்களுக்குத் தாங்கள் பரமாத்ம வஸ்துவே என்ற ஞானம் நன்றாக இருக்கும்.
எல்லா தெய்வங்களையும் இப்படிச் சொல்ல முடியாது. அவற்றில் பூர்ண பரமாத்ம சக்தியோடு இருப்பவை, அப்படி இல்லாமல் ஓரளவு சக்திமட்டும் உள்ளவை என்று இரண்டு பிரிவு உண்டு என்று அபிப்ராயமிருக்கிறது. அந்த வித்யாஸங்கள் இங்கேவேண்டாம். ஏனென்றால், பரிபூர்ண பிரம்ம சக்தி வாய்ந்த ‘ரத்ன த்ரயம்’ எனற அப்பைய தீக்ஷிதர் காரணம் காட்டி நிலைநாட்டியுள்ள சிவன், அம்பாள், மஹாவிஷ்ணு ஆகியவர்களுக்காக நாம் பூஜை பண்ணினாலுங்கூட ஆரம்பத்தில் விக்நேச்வர பூஜை பண்ணத்தானே செய்கிறோம்?
ஆக, பொதுவழக்கு என்னவென்றால் எந்த ஒரு தெய்வத்துக்கும் தான் பரமாத்ம வஸ்துவே என்று தெரிந்தாலும் கூட அது ஸர்வ சக்தியையும் காட்டாமல், அதாவது ஸகலவிதமான பலன்களையும் தானே வழங்காமல், தனக்கென்று குறிப்பாக விதிக்கப்பட்டுள்ள பலனைமாத்திரந்தான் தரும். ஏகமான பரமாத்மா இந்த மாதிரி பல தெய்வரூபங்களைக் கொண்டதே ஒவ்வொன்றும் ஒரு பலன் தரவேண்டும் என்பதற்குத்தானே? இந்த நம்முடைய ஸநாதன தர்மத்திலே ஜனங்கள் இப்படி ஒரு Pantheon (தெய்வங்களின் கூட்டம்) வைத்துக் கொண்டு விதவிதமான அலங்காரம், ஆராதனா பத்ததிகள், நைவேத்யங்கள் என்று பண்ண வேண்டுமென்று பரமேச்வரனுடைய ‘ப்ளானி’ ல் தானே ஏற்பட்டிருக்கிறது? லோக வியாபாரத்தில் தினுஸு தினுஸாகக் கூத்தடிக்கணுமென்று ஈச்வரனுக்கு இருக்கிற ஆசையிலேதான் இப்படிப் பல தேவதா ரூபங்களை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு பலனுக்கு ஒவ்வொரு தெய்வமென்று அவன் நம் ரிஷிகளுக்குக் காட்டி, அவர்கள் மூலம் ஒவ்வொன்றுக்கும், மந்த்ரம், தந்த்ரம் என்று பிரித்து ஆராதனாக்ரமங்களைக் கொடுத்திருப்பது.
இப்படிக் கொடுத்திருப்பதில் விக்ன நிவாரணத்துக்கென்று விகநேச்வரரை வைத்திருக்கிறான். அதாவது அவனேதான் அப்படியும் ஒரு ரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறான். ஆகையினாலே அவர் அவருக்குக் கொடுத்திருக்கிற அந்த போர்ட்ஃபோலியோ (இலாகா) ப்படி மாத்திரந்தான் அதிகாரம் வஹிப்பார்; வித்யை, ஸம்பத், விஜயம் முதலானவற்றை அவர் நேரே தாமாகவே தரமாட்டார்; அததற்கான தெய்வம் அந்தந்த பலனைக் கொடுத்துவிட்டுப் போகட்டும் என்றே விட்டுவிடுவார் – என்றும் வைத்துக் கொள்ளலாம். இப்போது தத்ஹேது ந்யாயம் ‘அப்ளை’ ஆகுமா?
ராஜாங்கத்தில் ஒரு ‘மினிஸ்ட்ரி’ அமைக்கிறபோது ஒருத்தர் ஃபைனான்ஸ், ஒருத்தர் மராமத்து, ஒருத்தர் போலீஸ் என்றெல்லாம் பொறுப்புக் கொடுக்கிறார்கள். எவருக்கும் எந்த இலாகாவும் வஹிக்கிற யோக்யதை இருக்கலாம். அல்லது ஜனநாயக ஸெட்-அப்பிலே எதிலுமே இல்லாவிட்டாலும், எதுவானாலும் தெரிந்த மாதிரி எடுத்துக்கொண்டு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிடலாம்! எப்படியானாலும் அவருக்கு என்று ஒரு இலாகா இருக்கும்போது இன்னொன்றில் ஒரு மந்திரி பிரவேசித்து உத்தரவு போட முடியாது. ஒருத்தரே இன்றைக்கு ஒரு இலாகா மந்தியாயிருந்து விட்டு நாளைக்கு வேறு இலாகாவுக்கு மாற்றப்படுகிறார், அல்லது இன்றுவரை இரண்டு இலாகாக்களுக்கு மந்திரியாயிருந்துவிட்டு நாளைக்கு ஒன்று அவரிடமிருந்து எடுபட்டுப் போகிறது என்றால், நாளையிலிருந்து எந்த இலாகாவில் மாத்திரந்தான் தனக்குப் பொறுப்போ அதிலேதானே அவர் அதிகாரம் வஹிக்க முடியும்? ‘நேற்றைக்கு நான் அந்த போர்ட்ஃபோலியோ பார்த்தேனே, அதிலே இன்றைக்குச் சட்டம் போடுவேன்’ என்று அவர் பண்ண முடியாதோல்லியோ?
லோக நிர்வாஹம் நடத்துகிற தெய்வ ராஜாங்கத்திலும் இப்படியே தேவதைகள் அவாளவாளுக்கு பொறுப்புத் தந்துள்ள பலன்களைக் கொடுத்து அநுக்ரஹிப்பதுதான் பொது வழக்கு.
‘பொது வழக்கு’ என்று எப்போது சொல்கிறேனோ அப்போதே இதற்கு ‘அபூர்வ விலக்கு’ ம் உண்டு என்பது தொக்கி நிற்கும்.
ஒரு தெய்வம் – அது விக்நேச்வரராகவும் இருக்கலாம், வேறு எந்த தெய்வமாகவும் இருக்கலாம் – ஏதோ ஒரு தெய்வம், தனக்குள்ளேயும் ஸர்வசக்தரான பரமாத்மாவே இருக்கிறாரென்ற உசந்த ஸ்வாநுபூதியிலிருந்து கொண்டு அநுக்ரஹிக்கிறபோது, குறிப்பாக ஒருவித பலனைத்தான் என்றில்லாமல், பரமாத்மா போலவே ஸகலவிதமான பலன்களையும் கொடுத்துவிடுவதுண்டு. ‘நீதான் என் ஒரே தெய்வம். உன்னையன்றி ஒருவரிடமும் போகமாட்டேன்’ என்று ஒரு பக்தர் ஒரு தெய்வத்தையே இஷ்டமூர்த்தியாகக் கொண்டு சரணாகதி பண்ணிவிடும்போது, அந்த தெய்வமும் பரமாத்ம பாவத்தில் உள்ளூரத் தன் வரைக்கும் இருப்பதோடு மட்டுமில்லாமல், கார்யத்திலும் பரமாத்மாவாகவே ஸகல பலன்களையும் அநுக்ரஹிக்கும். அது பரமாத்ம ஸ்வாநுபூதி பெறாத குட்டி தேவதையாக, அல்லது மாநுஷமான ஸாதாரண மாதா, பிதா, குரு, பதி – இப்படி ஒருவராக இருந்தால்கூட, இவர்களிடம் ஒருத்தர் ஹ்ருதயத்தை அர்ப்பணம் செய்து சரணாகதி பண்ணி விட்டால், ஸாக்ஷாத் பரமாத்மாவே அந்த சரணாகதனின் பக்தியை மெச்சி அந்தக் குட்டி தேவதை அல்லது மநுஷ்யர் மூலம் ஸகல பலன்களையும் அநுக்ரஹித்துவிடுவார். ஆனால் இப்படிப்பட்ட சரணாகதி, இஷ்டதெய்வம் என்று ஒன்றிடமே பற்று என்பதெல்லாம் அபூர்வமாகவே இருக்கப்பட்டவை.