‘வெரைட்டி’ வழிபாடே மனித இயற்கை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படி நான் சொன்னதற்காக – நானாகச் சொல்லவில்லை, அந்த மன்னார்குடிப் பெரியவர் சொன்னதை எடுத்துச் சொன்னதற்காக, – நீங்கள் பிள்ளையாரைத் தவிர எல்லா தெய்வங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவரொருத்தரைத்தான் வழிபடவேண்டுமென்று அர்த்தமில்லை. சற்று முன்னே சொன்னாற்போல பகவானுக்கு தினுஸு தினுஸாக லீலை பண்ணியே இந்த த்வைத ப்ரபஞ்சக் கூத்தை நடத்த வேண்டுமென்று இருப்பதாலும், அவன் இந்தக் கூத்திலே பிசைந்து போட்டிருக்கிற மநுஷ்ய ஜீவனுக்கும் ஜெனரலாக எந்த ஒரு அநுபோகமானாலும் அதிலே தினுஸு தினுஸான வைசித்ரிய ருசி வேண்டியிருப்பதாலும்தான் இத்தனை தெய்வ ரூபங்களை அவன் தரித்துக் கொண்டிருப்பது. ஆகையால் அவாளவாளுடைய மனப்பான்மைப்படி ஒவ்வொருத்தரை ஒவ்வொரு ரூபம்தான் ‘இஷ்ட தெய்வம்’ என்னும்படியாக ஆகர்ஷிக்கும். அதே மாதிரி சாஸ்த்ராதிகளிலும் ஸம்ப்ரதாயப்படியும் ஸம்பத்துக்கு லக்ஷ்மி, வித்யைக்கு ஸரஸ்வதி, ஆரோக்யத்துக்கு சூர்யன், இன்னும் இந்த இந்த க்ரஹ பீடை போக ராஹூ – கேது, இன்ன நாளில் இன்னாருக்கு உத்ஸவம் என்று எப்படியெப்படி பூஜிக்கச் சொல்லியிருக்கிறதோ அப்படி அந்தந்த தெய்வத்துக்கு வழிபாடு நடத்தினால்தான் பலன் என்றே பொதுவாக ஜனங்களுக்கு நம்பிக்கையும், பிடிப்பும் இருக்கும். சனிப் பெயர்ச்சி என்றால் லக்ஷம் ஜனங்கள் திருநள்ளாற்றில் கூடுகிறார்கள், மகரவிளக்கு என்று சபரிமலையில் பத்துலக்ஷம் ஜனங்கள் கூடுகிறார்கள் என்றால் இதுதான் காரணம். அத்வைத ஸாதனையில் நன்றாக முன்னேறிப்போகிற அபூர்வமான சிலரைத் தவிர இந்த த்வைத ப்ரபஞ்சத்திலேயே பக்தி, ஏதோ கொஞ்சம் ஞானம் என்று போகிற எல்லாருக்கும் ஒண்ணே ஒண்ணு என்று பிடித்துக்கொள்வது கஷ்டம்தான். ‘வெரைட்டி’ தான் லோக வாழ்க்கைக்கே ஸாரமாயிருப்பது! இஷ்டதேவதை என்று ஏதோ ஒன்றை ஓரளவு கெட்டியாகப் பிடித்துக் கொண்டாலுங்கூட அப்போதும் அதற்கே தினுஸு தினுஸாக வேஷம் போட்டு அலங்காரம் பண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது! இன்றைக்கு உத்ஸவத்தில் கைலாஸ வாஹனம் என்று ராஜாதி ராஜனாக அலங்காரம் பண்ணிப் பார்க்கிறவனையே நாளைக்கு பிக்ஷாண்டி என்று எல்லாவற்றையும் வழித்துவிட்டு நிறுத்திப் பார்த்து ஸந்தோஷிக்கத் தோன்றுகிறது!

மனஸ் கவடு விட்டுக்கொண்டு நானாவித ருசி பேதங்களில் போனாலும், அதன் இயற்கையிலேயே அதை விட்டுப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்குக் கொண்டுவந்து ஒன்றிலேயே நிற்பதற்குப் பக்குவப்படுத்தத்தான் மதம் ஏற்பட்டிருக்கிறதேயொழிய, எடுத்த எடுப்பிலேயே மனஸை ஒன்றிலேயே அமுக்கிப் போடுவதற்கில்லை. இப்படி வற்புறுத்திப் பண்ணினால் மனஸின் இயற்கைப்படி அது ஈடு கொடுக்க முடியாமல் திணறி, திமிறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு முடிவிலே ஜடம் மாதிரியோ, இல்லாவிட்டால் எதிர்த்திசையில் வெறித்தனமாகவோதான் போகும். அதனால், நமது மதம் செய்கிற முதல் காரியம் நானாவிதமான லௌகிக ருசிகளிலேயே ஸந்தோஷிக்கிற மனஸை நானாவிதமான தெய்விக ருசிகளைக் காட்டி ஸந்தோஷப்படுத்தி, அந்த மனஸின் அழுக்கை எடுத்துத் தெளிவு பண்ணுவது தான். இப்படி நன்றாக அழுக்குப் போய் தெளிந்த தெளிவாக ஆகிப் பக்குவப்பட்ட அப்புறம், முடிவில்தான், நானா தினுஸு என்கிற த்வைத அநுபவங்களை விட்டு ஒன்றேயான அத்வைதம் என்று கொண்டு போவது.

அதனால் பிள்ளையார், ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி, அம்பாள், சிவன், விஷ்ணு, ராமன், க்ருஷ்ணன், நவக்ரஹம், ஐயனார் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டே விதவிதமாக அலங்காரம் பண்ணி, உபசாரம் பண்ணி, நைவேத்தியம் பண்ணி, ஒவ்வொன்றுக்கும் அததற்கான நியமங்களை அநுஷ்டானம் பண்ணி ருசி பேதத்திலேயே நிறைவு காண்கிற மனஸுக்கு ஸந்தோஷம் கொடுத்துக் கொடுத்து, தத் – த்வாராவே (இதன் மூலமே) அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உசத்திக்கொண்டு போவோம். லௌகிகத்திலேயே அழுந்திக் கிடக்கிற மனஸை எப்படியோ ஒரு அப்படி தெய்வ விஷயமாகக் கொஞ்சம் தொட்டுகொண்டு அதிலே ஒரு ஸந்தோஷம் அடையும்படிப் பண்ண இது (பல தெய்வ வழிபாடு) ஒத்தாசை பண்ணுகிறதா இல்லையா?

குழந்தைகளுக்கு ஒரே வர்ணத்திலுள்ள ஒரு பொருளைக் காட்டிலும் கலர் கலராகக் காட்டினால் ஒரே உத்ஸாஹம், குஷி பிறந்து சிரித்துக் கூத்தாடும். அத்யாத்ம ரீதியில் நாமும் அந்தக் குழந்தை மாதிரிதான். அதனால் அத்தனை ‘ஹிண்டு பாந்திய’ னையும் வெட்கப்படாமல் வைத்துக் கொண்டு, ஒரே மூர்த்திதான் என்னும்போது ஏற்படக்கூடிய சலிப்பு இல்லாமல் (சிரித்துக்கொண்டு) ‘போர்’ அடிக்காமல், ஏதோ தெரிந்த மட்டும் வழிபாடு பண்ணி, ஏதோ நமக்குக் கிடைக்கிற மட்டும் கொஞ்சம் பக்தி ருசியை அநுபவிப்போம். ஏக ரஸம் எல்லாம் அப்புறம்தான், இப்போது அவியல்தான்!

எடுத்துக் கொண்ட விஷயத்தின் உயர்வை விசேஷப்படுத்திக் காட்டுவதற்காகத்தான் தத்ஹேது ந்யாயப்படி விக்நேச்வர உபாஸனை ஒன்று மாத்திரமே போதும் என்று காட்டியிருக்கிறதே தவிர, இதனால் நடைமுறையில் அப்படியே எல்லாரும் பண்ணி விடவேண்டும், மற்ற ஸ்வாமியையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டுமென்று அர்த்தமில்லை. இந்த ச்லோகத்தைப் பண்ணினவரே எல்லா ஸ்வாமியையும் ஸ்தோத்ரம் பண்ணினவர்தான். விக்நேச்வர பூஜையே போதுமென்றில்லாமல் விசேஷமாக சிவாராதனம் பண்ணினவர்தான்.

ந்யாய ரீதியாக புத்தி மட்டத்தில் ஒன்றை நிலைநாட்டி விட்டால் போதுமா? மனஸ், மனஸ் என்று ஒன்று, அதுதானே புத்திக்கு மேலே நம்மைப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைக்கிறது? பக்தி என்று வந்துவிட்டால் அங்கே புத்தியையே கொண்டுவரக் கூடாது என்று கூடச் சொல்கிறார்களே!

ஆனபடியால் புத்தி லெவலில் ந்யாயம் சொல்வது அப்படியே இருக்கட்டும், நம்முடைய ஸ்டேஜில் நமக்கு அது நிறைவு தரவில்லை என்றால், ஸகல தேவதாராதனம், இஷ்ட தெய்வ ஆராதனம் என்று எதில் ஸந்துஷ்டியோ அதன்படி செய்வோம். இப்படியும் அப்படியுமாகக் கலந்து கலந்து வேண்டுமானாலும் செய்வோம்.

அதே ஸமயத்தில், புத்தி ரீதியில் ஆராய்ந்து பார்த்தால் இப்படி ஸர்வ தேவதோபாஸனா பலன்களையும் விக்நேச்வரர் ஒருத்தரின் மூலமே, அவரொருவரை மட்டும் வழிபடுவதனாலேயே, அடையமுடியும் என்பதான ஒரு பெரிய சிறப்பு அவருக்கு நிச்சயமாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வோம். நாம் பல பேரை வழிபடுகிறபோது, முதலில் அவரிடம் வந்து குட்டிக் கொள்ளும்போது, புத்தி ரீதியில் நாம் தெரிந்துகொண்ட இந்த ந்யாயமே நம்முடைய ஹ்ருதயத்திலும் பளிச்சென்று நினைவுக்கு வந்து அவரிடம் நாம் செய்கிற பக்திக்கு ஒரு ஜீவனை ஊட்டிவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is எல்லாப் பலனும் அளிக்காத வராயினும் தான்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  இக-பர பலன்கள்
Next