எல்லாப் பலனும் அளிக்காதவராயினும்தான்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

சொல்ல வந்தது, விக்நேச்வரரை ஸகல பலதாதாவாக ‘ஏகம் பரம் தேவம்’ என்று கொள்ளாமல், தனித்தனிப் பலன்களைக் கொடுக்க ஏற்பட்ட பல தெய்வங்களில் ஒருத்தர்தான் இவரும் என்று வைத்து, அவரை அவருக்கென்று குறிப்பாக ஏற்பட்ட விக்ன நிவாரணத்தோடேயே நிறுத்தி விட்டால் ‘தத்ஹேது ந்யாயம்’ என்னவாகும் என்ற விசாரணைதான். இப்போதுங்கூட ஒரு விதத்தில் அந்த ந்யாயம் அவருக்கு ‘அப்ளை’ ஆகத்தான் செய்யும். இது விக்நேச்வரர் ஒருவருக்கே உரிய விசேஷமான பெருமை. அதாவது எல்லாப் பலன்களையும் இவரே நேராக அளிக்காத போதுகூட இவரைக் காரணமாகக் கொண்டே எந்தப் பலனையும் அடைந்துவிடலாம். இன்னொரு ஸ்வாமியைப் பூஜிக்கவேண்டுமென்பதில்லை.

அதெப்படி?

இவர் தருகிற பலன் என்ன? விக்ன நிவாரணம். இடையூற்றின் நீக்கம். இவருடைய அருள் இல்லாவிட்டால் நாம் எந்த தெய்வத்துக்குச் செய்கிற பூஜையும் இடையூறு இல்லாமல் நடக்க முடியாது. இதைவிட முக்யமாகச் சொல்ல வேண்டியது, இவருடைய அருள் இல்லாவிட்டால் எந்த தெய்வமும் அது விரும்புகிறபடி நமக்குப் பலன் தரவும் முடியாது. அந்தத் தெய்வங்களின் அநுக்ரஹ கார்யத்துக்கே இடையூறு ஏற்படலாம். அதைப் போக்க விக்நேச்வரரால் தான் முடியும்.

லோகத்துக்கெல்லாம் அநுக்ரஹம் பண்ணவேண்டுமென்று ஈச்வரன் த்ரிபுர ஸம்ஹாரம் செய்யப் புறப்படுகிறார். ஆனால் அவர் காரியத்துக்கே விக்னம் உண்டாகிறது. ரதத்தின் அச்சு முறிகிறது. அப்புறம் அவர் பிள்ளையானாலும் விக்நேச்வரரைத் தாம் வழிபடாவிட்டால், தாம் உத்தேசித்த லோக அநுக்ரஹ கார்யம்கூட நடக்காது என்று புரிந்து கொண்டு இவரைப் பூஜிக்கிறார். இவர் ப்ரீதி அடைந்து இடையூறுகளை நீக்குகிறார். அப்புறந்தான் தகப்பனார்க்காரரால் த்ரிபுர ஸம்ஹாரம் செய்ய முடிகிறது. இப்படி ஒவ்வொரு தெய்வமும் இவரை வழிபட்டு விக்ன நிவாரணம் பெற்றே தங்களுடைய கார்யத்தைச் செய்ய முடிந்திருக்கிறது என்று கதைகள் இருக்கின்றன.

அதனால்தான் இவரொருத்தரை மாத்திரம் எந்த தெய்வத்தின் பூஜையிலும் முதலில் வணங்கியே ஆகவேண்டியிருக்கிறது. ‘விக்ன நிவாரணம்’ என்பதாக இவருக்குப் பிரத்யேகமாக ஏற்பட்டுள்ள போர்ட்ஃபோலியோவின் விசேஷச் சிறப்பு இது! மற்ற ஸ்வாமிகள் நமக்கு வேண்டிய பலனைத் தருவதற்கு இஷ்டப்பட்டாலும், அந்த இஷ்டம் நிர்விக்னமாகக் கார்ய ரூபத்தில் முடிவதற்கு அவையும் இவரைத்தான் ‘டிபென்ட்’ பண்ணவேண்டியிருக்கிறது!

ஆரோக்யத்துக்காக சூர்யனைப் பூஜிக்கிறோம், படிப்புக்கு ஸரஸ்வதியை, பணத்துக்கு லக்ஷ்மியை, என்று இப்படி ஒவ்வொரு பலனுக்காக ஒரு மூர்த்தியைப் பூஜை பண்ணுகிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூர்த்திகளில் ஒன்றுக்கு மற்றதன் தயவு வேண்டாம். சூர்யனுக்கு லக்ஷ்மி, ஸரஸ்வதிகளின் தயவு வேண்டியதில்லை. அவர்களுக்கும் அதே மாதிரிதான். அவரவர் தாங்கள் தரவேண்டிய பலனைத் தந்துவிட்டுப் போவார்கள்.

ஆனால் அப்படித் தரமுடியாமல் விக்னம் ஏற்பட்டு விட்டால்? சூர்ய பகவானுக்குத் தன் ஆரோக்ய அநுக்ரஹ கார்யத்தைச் செய்ய ஸரஸ்வதி தரும் படிப்போ, லக்ஷ்மி தரும் பணமோ வேண்டியதில்லைதான். ஆனால் அந்தக் கார்யத்துக்கே இடையூறு ஏற்பட்டால் பரவாயில்லை என்று அவர் இருக்க முடியுமா?

எந்த தெய்வமானாலும் தாங்கள் கொடுக்க விரும்பும் பலனுக்கு விக்னம் வந்தால் வந்துவிட்டுப் போகட்டுமென்று இருக்க முடியாதல்லவா? அதனால்தான் விக்ன நிவாரண போர்ட்ஃபோலியோக்காரரான கணபதியின் தயவு மாத்திரம் எல்லா தெய்வங்களுக்கும் வேண்டியிருக்கிறது! இவர் தயவில்லாமல் அவர்கள் தங்கள் அநுக்ரஹ கார்யத்தைப் பண்ணமுடியாது!

லௌகிக பலனாக இல்லாமல் ஞானம் வேண்டும், நிஜமான பக்தி வேண்டும் என்றெல்லாம் ஈச்வரனை, அம்பாளை, விஷ்ணுவைப் பூஜை பண்ணும்போதுகூட அதற்கு நம் பக்ஷத்திலோ, நமக்கு அநுக்ரஹிக்கவேண்டிய உபாஸ்ய மூர்த்தியின் பக்ஷத்திலோ விக்னம் ஏற்படாமலிருப்பதற்கு கணபதியின் தயவு வேண்டித்தானிருக்கிறது.

ஆனபடியால் அவரை ஸகல பல தாதாவாக வைக்காமல், நாம் பலனுக்காக வேறொரு மூர்த்தியைப் பூஜித்தாலுங்கூட முதலில் இவர் தயவை நாடி ஆரம்ப பூஜை இவருக்குச் செய்து தானாக வேண்டியிருக்கிறது.

இங்கே தான் தத்-ஹேது நியாயமறிந்தவன் ஆலோசனை பண்ணிப் பார்க்கிறான் : ‘சரி, விக்நேச்வரர் தாமே எல்லாவிதப் பலன்களையும் தராமல் விக்ன நிவிருத்தி செய்பவராக மட்டுமே இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி மட்டும் இவர் இருக்கும்போதுகூட எந்த தெய்வமானாலும் இவரைப் பூஜித்து இவருடைய தயவைப் பெற்றுத்தான் நம்முடைய கார்யத்தை நடத்திக் கொடுக்க வேண்டியிருக்கிறது. விக்னம் ஏற்படாமலிருப்பதற்காக எந்த தெய்வமானாலும் இவரிடம் வந்து நிற்கவேண்டித்தான் இருக்கிறது. அதாவது அந்த தெய்வங்கள் நம் கார்யத்தை இடையூறு இல்லாமல் நடத்தித் தருவதற்குக் காரணமாக, அதாவது ஹேதுவாக, இருப்பவர் இவர்தான். இப்படி மற்ற தெய்வங்களுக்குமேல் இவருக்கு ஒரு ‘பவர்’ இருப்பதால் அந்த தெய்வங்களைத் தம் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு செய்ய இவருக்கு சக்தி இருக்கும். அதனால், எந்தப் பலனைத் தருகிற எந்த தேவதையானாலும் அதனிடம் அவர் ‘இன்ன பக்தனுக்கு இன்ன அருளைப் பண்ணுங்கள்’ என்று சிபார்சு பண்ணினால், அந்த தேவதை அந்த சிபார்சை உத்தரவு போலவே எடுத்துக்கொண்டு அதன்படிப் பண்ணிவிடும். அந்த தேவதையின் போர்ட்ஃபோலியோவை இவர் தாமே எடுத்துக்கொண்டு அது தரும் பலனைத் தரவேண்டுமென்றில்லை. பரமேச்வரனின் ராஜாங்கத்தில் யாருக்கு எந்த இலாகாவோ அது அப்படியே இருக்கலாம். ஆனால் எந்த தெய்வமானாலும் அதனிடம் இவர் ‘இன்னாருக்கு நீ அருள் பண்ணு’ என்று சொல்லிவிட்டால் அது பண்ணிவிடும். இல்லாவிட்டால் ஏதாவது காரியத்தில் அந்த தெய்வம் ஈடுபடும்போது விக்னம் ஏற்பட்டுக் கஷ்டப்படும்படி ஆகிவிடும்.

‘இதனால் என்ன ஏற்படுகிறதென்றால், நமக்கு எந்தத் தெய்வத்தின் மூலம் எந்தப் பலன் கிட்டவேண்டுமானாலும் ஸரி, விக்நேச்வரரொருத்தரைப் பூஜை பண்ணிவிட்டாலே போதும். அவர் தம்முடைய இன்ஃப்ளுயென்ஸைக் கொண்டு எந்த தெய்வமானாலும் அதனிடம் சொல்லி நமக்கு வேண்டிய அருளைப் பண்ணும்படி செய்துவிடுவார்.’

தத்ஹேது நியாயமறிந்தவன் இப்படி யோசித்து, ‘விக்நேச்வரரின் இன்ஃப்ளுயென்ஸை ஹேதுவாகக் கொண்டே எந்த தெய்வத்திடமிருந்தும் அது கொடுக்கக்கூடிய பலனை அடையமுடியும் என்னும்போது இவருக்கு மாத்திரம் பூஜை பண்ணுவதோடு நிறுத்திக்கொண்டு விடலாமே! பலதாதா என்பதாக இன்னொரு தெய்வத்துக்கு வேறு ஏன் பூஜை செய்யணும்? இவராலேயே நாம் மற்ற தெய்வங்களிடம் காரியம் ஸாதித்துக்கொள்ள முடியுமென்னும் போது இவருக்குப் பூஜை பண்ணுவதோடுகூட அவர்களுக்கும் எதற்குப் பண்ணணும்? அவர்களைப் பூஜை பண்ணி நமக்கு ஆகவேண்டியது என்ன? “தத்ஹேதோரேவ தத்ஹேதுத்வே மத்யே கிம் தேந” என்று நினைக்கிறான். ஆரம்ப பூஜை இவருக்கு, அப்புறம் முக்ய பூஜை இன்னொருத்தருக்கு என்று இல்லாமல் இவரையே முக்யமாய் வைத்து முழு பூஜையும் இவருக்கே பண்ணி விட்டுத் திருப்தியாகிவிடுகிறான். தனக்கு வேண்டிய எந்த விதமான பலனையும் விக்நேச்வர – த்வாரா (விக்நேச்வரரின் வழியாகப்) பெற்றுவிடுகிறான்.

தத் ஹேதோரிதி நீதி வித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்

“நீதிவித்-து” என்பதற்கு ‘தத்ஹேது நீதி அறிந்தவனோ என்றால்’ என்று அர்த்தம். மற்ற ஸாதாரண ஜனங்கள் பிள்ளையாருக்கு ஆரம்பத்தில் ஒரு குட்டி பூஜை, அப்புறம் இன்னொரு தெய்வத்துக்குப் பெரிசான முக்ய பூஜை என்று செய்தாலும், தத்ஹேது ந்யாயம் தெரிந்தவனோவென்றால் இவரைக் காரணமாகக் கொண்டே இதர தேவதா ப்ரஸாதங்களையும் பெற்றுவிட முடியுமென்பதால் இவருக்கே முழு பூஜையும் செய்து முடித்துவிடுகிறான் என்ற இவ்வளவு அர்த்தம் ” தத்ஹேதோரிதி நீதிவித்-து பஜதே ” என்பதில் அடங்கியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பல தெய்வங்கள் ஏன்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'வெரைட்டி'வழிபாடே மனித இயற்கை
Next