அப்பா வைத்துவிட்டுப் போகிற வீடு நாளானால் இடிந்து போகும். அதனால் அவ்வப்போது அதற்கு ரிப்பேர் பண்ணணும், வெள்ளையடிக்கணும், பெயின்ட் அடிக்கணும். அப்பா வைத்துவிட்டுப் போகிற நிலத்திலேயும் வருஷா வருஷம் முதல் போட்டு, விதை போட்டு உழைத்தே மாசூல் காணமுடியும். எத்தனை எருப் போட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பூஸாரம் போய்விடுகிற நிலங்களும் உண்டு. மழை பெய்யாமல் போவது, Dam திறக்காமலிருப்பது, பூச்சி, பொட்டு, ஒரேயடியாக மழை பெய்து அடித்துக் கொண்டு போகிறது, அழுகிப் போகிறது இப்படிப் பல கஷ்டங்கள். எல்லாவற்றிற்கும் மேலே ‘ஸீலிங்’ (உச்சவரம்பு) சட்டம்! ரூபாயாக (சொத்து) வைத்துவிட்டுப் போனாலும் நாளுக்கு நாள் ‘டிவால்யுவேஷன்’ (நாணய மதிப்பு குறைந்து போவது)! பல தினுசு டாக்ஸ்! புதுசாக என்ன டாக்ஸ் வருமோ என்று ஓயாமால் பயம். திருட்டுப் போவது; எங்கே திருட்டுப் போய்விடுமோ என்று ஸதா பயம்.
இப்படியெல்லாம் எந்த விதமான ஸொத்தானாலும் அது சாச்வதமாயில்லாமல் க்ஷீணித்துப் போக இடமிருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஸொத்தைப் பெறுகிற வார்ஸின் மனசு கெட்டுப்போவது. ஸொத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளணும் என்பதற்காகப் பலவிதத்தில் தப்புகள் செய்வது; சட்டத்தை மீறிச் செய்வது; பிறத்தியாருக்கு நஷ்டம், கஷ்டம் உண்டாக்கியும் தங்களுக்கு லாபமாகப் பண்ணிக் கொள்ளப் பார்ப்பது; லஞ்சம் கொடுக்கிறது; பொய்க் கணக்கு காட்டி ஏமாற்றுகிறது; ஸீலிங்குக்காக ‘பினாமி’ என்று பிறத்தியார் உடைமை மாதிரி பொய்யாகப் பிரித்துக் காட்டுவது; இன்னும் பல தினுஸான தகிடுதத்தம் செய்வது – இப்படியெல்லாம் தப்பு வழியிலே போய், ஸொத்து (சிறு முடிச்சு போலக் கையைக் காட்டி) இவ்வளவு என்றால், அதை முன்னிட்டு மூட்டை கட்டுகிற பாவம் (பெரிய அளவாகக் கையை விரித்துக் காட்டி) இத்தனாம் பெரிசாகிறது!
பூர்வபுண்யத்திலேயோ, ஏதோ அத்ருஷ்டத்திலேயோ அப்பா ஸொத்து நன்றாகவே வளர்கிறது, தப்புப் பண்ணாமலே விருத்தியாகிறது என்றால்கூட, கடைசியில் ஒரு நாள் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று அத்தனைகளையும் விட்டுவிட்டுப் போக வேண்டியதாகவே ஆகிறது. அரண்மனை மாதிரி வீடாகட்டும், ஆயிரம் வேலி முப்போகம் விளைகிற நிலமாகட்டும், கோடி-பத்து கோடி என்று ரூபாயாகட்டும், எதுவானாலும் அதிலிருந்து துளிக்கூட நமக்குப் பிரயோஜனம் கிடைக்காத படி அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு நாள் புறப்படும்படி ஆகிறது.
ஆக அப்பா ஸொத்து சாச்வதமில்லை.
நாமே தேடிக் கொள்கிற ஸொத்துக்களுக்கும் இதே கதைதான்.
சாச்வதமான ஸொத்து, இழந்து போகாத, ரிப்பேர் பண்ணவேண்டாத ஸொத்து, டாக்ஸும் திருட்டும் தொடாத ஸொத்து, ‘திருட்டுப் போயிடுமோ?’ என்று பயப்படவும் வேண்டாத ஸொத்து, தப்பு வழிகளில் போய் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டாத ஸொத்து அப்பா கொடுக்க முடியாது; நாமாகவும் தேடிக்கொள்ளமுடியாது.
குரு என்கிற ஒருத்தர்தான் சாச்வதமான அந்த ஸொத்தைத் தருகிறவர். இது நாம் போன பிற்பாடு நம் கூட வராத ஸொத்தில்லை – நம்மையே திரும்பி வரப் பண்ணாத ஸொத்து! எது சாச்வதமோ அந்தப் பரமாத்மாவுடன் நம்மைப்பிரிக்க முடியாமல் சேர்த்துவிடுகிற ஸொத்து.
ஞானம் என்ற ஸொத்தை குரு அநுக்ரஹிக்கிறார். ஸொத்து க்ஷீணித்துக் கொண்டே போவது, நாம் சிரமப்பட்டு அதை விருத்திபண்ணப் பாடுபடுவது, இந்தப்பாட்டில் பாவ மூட்டையை இன்னும் பெரிசாக்கிக் கட்டிக்கொள்வது என்பதற்கெல்லாம் இடமே வைக்காமல் நாளுக்கு நாள் தானும் வளர்ந்து நம்மையும் வளர்ப்பது குரு தருகிற உபதேச ஸொத்து.
மற்ற ஸொத்து எதுவானாலும் அதனால் கிடைக்கும் எல்லா ஸுகங்களும் தாற்காலிகம்தான். ‘நித்யானந்தம்’ என்றே சொல்லப்படுவதான சாச்வத ஸுகத்தைத் தருவது குரு அநுக்ரஹிக்கிற ஞானமொன்றுதான்.