தெய்வ பக்தியும் குரு பக்தியும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படிப்பட்ட பெரிய உபகாரத்தைப் பண்ணுகிற குருவிடம் எவ்வளவு பக்தி பண்ணினால்தான் போதும்? அதனால் தான் ஸாக்ஷாத் ஈச்வரனிடத்தில் எவ்வளவு பக்தி வைக்க வேண்டுமோ அதே அளவுக்கு குருவிடமும் வைக்கணும் என்று சொல்லியிருப்பது:

யஸ்ய தேவே பராபக்திர் – யதா தேவே ததா குரௌ

‘யதா தேவே’ – ஈச்வரனிடத்தில் எப்படியோ; ‘ததா குரௌ’ – அப்படியே குருவிடமும்; ‘பராபக்தி’ – உயர்ந்த பக்தி (வைக்கவேண்டும்) .

ச்லோகம் எப்படிச் சொல்லிக்கொண்டு போகிறதென்றால், இம்மாதிரி ஈச்வரனிடம் பக்தி வைத்து, அதே அளவுக்கு குருவிடமும் பக்தியாக இருக்கிற மஹாத்மாவான சிஷ்யனுக்குத்தான் உபதேசிக்கப்படுகிற விஷயத்தின் உள்ளர்த்தம் முழுதும் வெளிப்படும் என்கிறது.* ஈச்வர பக்திக்கு ஸமானமாக குருபக்தி உள்ள சிஷ்யனை “மஹாத்மா” என்று உயர்த்திச் சொல்லியிருப்பதால், இந்த பக்தி பாவமே அவனுக்கு ஆத்ம ஞானத்தைக் கொடுத்து மஹாத்மா என்னும்படியாக ஆக்கிவிடுகிறது என்று ஏற்படுகிறது. ச்லோகத்தில் “யஸ்ய” – “எவனுக்கு” – என்று ஆரம்பித்து, ‘எவனுக்கு ஈச்வரனிடம் உத்தம பக்தி இருக்கிறதோ அதோடுகூட அதே அளவுக்கு குருவிடமும் இருக்கிறதோ அந்த மஹாத்மாவுக்கு தத்வார்த்தங்கள் எல்லாம் பிரகாசிக்கும்’ என்று சொல்லியிருக்கிறது:

தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந:


* ச்லோகத்தின் முழு வடிவம்:

யஸ்ய தேவே பராபக்திர் – யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந: ||

இது ச்வேதாச்வதர உபநிஷத்து, குரு கீதை இரண்டிலும் காணப்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பிற சொத்துக்களும், குரு தரும் சொத்தும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அநுபவ ஞானம்
Next