அநுபவ ஞானம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

‘பிரகாசிக்கும்’ என்றால் உள்ளர்த்தங்கள் மூளைக்குப் புரியும் என்று அர்த்தம் செய்துகொள்வதோடு முடித்து விடக்கூடாது. மூளைக்குப் புரியும்படியாக ரஹஸ்யார்த்தங்களை குருவே சொல்லிவிடுவார். பக்தியினால்தான் இந்த மூளைக் கார்யத்தைப் பண்ணிக்கொள்ளவேண்டும் என்றில்லை. பின்னே என்ன அர்த்தம் என்றால், உபதேசத்தின் ஸாரமாக எந்த அநுபவம் இருக்கிறதோ அது சிஷ்யனின் ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும். (சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டுத் தொடர்கிறார்கள்.)

நன்றாக யோசித்துப் பார்த்தால், ‘ரஹஸ்யார்த்தங்கள் நன்றாக ப்ரகாசிக்கும்’ என்று சொல்வதன் தாத்பர்யம் என்னவாக இருக்கமுடியும்? மறைவாகவோ, சுருக்கமாகவோ, வ்யங்கியமாகவோ (உள்ளுறை பொருளாகவோ), ரொம்பவும் சிக்கலான கருத்திலோ நடையிலோ சொல்லியிருக்கிற விஷயங்கள் பளிச்சென்று தெளிவாகிவிடும் என்பதுதான் தாத்பர்யமா? அப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஈச்வர க்ருபையில், குரு க்ருபையில் இஹ – பர நலம் எதுவுமே கிடைக்க முடியும் என்னும்போது, நம் மூளையும் நன்றாகச் சாணை தீட்டிய மாதிரி தீட்டப்பெற்று மேலே சொன்னது போல மறைபொருளை, சிக்கலான விஷயத்தை ஸ்பஷ்டமாகப் புரிந்துகொண்டு விடுகிற திறமையைப் பெறக் கூடும்தான். ஆனால் ஆலோசித்துப் பார்த்தால் இப்படி மூளையின் சாதிப்போடு விஷயத்தை முடித்துவிட்டால் அது பிரயோஜனமில்லை என்று தெரியும். அத்யாத்ம உபதேசம் எதற்கு இருக்கிறது? மூளையின் திருப்திக்காகவா? இல்லையே! மூளையின் த்ருப்தி அஹங்காரத்தில் சேர்ப்பதல்லவா? அத்யாத்ம உபதேசமோ அஹங்காரம் அழிவதற்காக அல்லவா? ஆகையினால், மூளை ரீதியான ப்ரகாசத்தில் எதையோ தெளிவு செய்வதென்று வைத்துக் கொண்டால் கூட, இதுவும் ஆத்மாவிலே கொண்டுவிட உதவி செய்வதாயிருக்க வேண்டும் என்பதுதான் தாத்பர்யமாக இருக்கவேண்டும். அதாவது உபதேச லக்ஷ்யமான ஆத்மாநுபவங்கள் என்னென்னவோ அவையெல்லாம் மூளை லெவலில் புரிந்து கொண்டதாக மட்டும் முடிந்துபோகாமல் பிரத்யக்ஷமாக சிஷ்யனுக்கே நேராக அநுபவத்தில் வர வேண்டும். ‘ஸ்வாநுபூதி’ என்பது இப்படி ஒருத்தர் நேராக தானே ஒன்றை அநுபவிப்பதுதான். மூளைக்கும் ஆதாரமாக ஒரு ஜீவ சைதன்யம் இருக்கிறதல்லவா? ஜீவனின் உயிர் என்று சொல்வது அதைத்தான். அந்த உயிரின் அநுபவமாகவே விஷயம் ஆகும்போதுதான் ஸ்வாநுபூதி ஏற்படுகிறது. அப்புறம் ஜீவ சைதன்யம், ப்ரஹ்ம சைதன்யம் என்கிற பேதம் போய், விஷயம் – அதை அநுபவிப்பவன் என்ற பேதமும் போய்விட்ட நிலை. சாச்வதமான ஸத்யமாக ஆகிவிடுகிற நிலை. அத்வைதிகள் சொல்லும் மோக்ஷம் அது தான்.

“ஸ்வாநுபூதி” என்பதை “அபரோக்ஷாநுபூதி” என்றும் சொல்வார்கள். அந்தப் பெயரிலேயே ஆசார்யாள் ஒரு க்ரந்தம் எழுதியிருக்கிறார்.

பரோக்ஷம், அபரோக்ஷம் என்று இரண்டு. பரோக்ஷம் என்பது நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருப்பது, ரஹஸ்மாயிருப்பது. அபரோக்ஷம் அதற்கு ஆப்போஸிட் : நமக்கு நன்றாகத் தெரிவது. கேள்வியறிவு பரோக்ஷம், அநுபவ அறிவு அபரோக்ஷம். அநுபவத்துக்கு வராதவரையில் ஒன்றைப் பற்றிய அறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

குற்றாலம் அருவியைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் படிக்கிறோம். போய்விட்டு வந்தவர்கள் அதைப் பற்றி மணிக்கணக்காக வர்ணித்துக் கேட்கிறோம். ஆனாலும் இதனாலெல்லாம் அநுபவ ஆனந்தம் நமக்குக் கொஞ்சமாவது ஏற்படுகிறதா? நாமே போய், மணிக்கணக்கெல்லாம் வேண்டாம், நாலு நிமிஷம் அஞ்சு நிமிஷம் அதன் கீழே நின்றுவிட்டால் அப்போதுதானே நிஜமாக அதைத் தெரிந்தகொண்ட ஆனந்தம் ஏற்படுகிறது?

ஆத்மாவுக்கான ஸமாசாரங்களை டன் டன்னாகப் புஸ்தகத்தில் பார்த்தும் படித்தும் நெட்டுருப் போட்டும், quote பண்ணியும் ப்ரயோஜனமில்லை. குருவே உபதேசம் பண்ணியுங்கூட, அது காதுக்குள்ளே, காது வழியாக மூளைக்குள்ளே போனாலுங்கூட, ப்ரயோஜனமில்லை. அதுவரை அது பரோக்ஷம்தான். ஆத்மாவிலேயே அது அநுபவமாகப் பேசணும். அப்போதுதான் அபரோக்ஷம்.

இதிலே கொஞ்சம் வேடிக்கை. குரு உபதேசம் மூளை லெவலில் மட்டும் ஏறுகிறபோது நமக்கு ரஹஸ்யமாக இருக்கிற மாதிரி தோன்றவில்லை. மூளைக்கு நன்றாக விஷயம் தெரியத்தான் தெரிகிறது. ஆனாலும் அது உயிரின் அநுபவமாக இல்லாததால் அதை பரோக்ஷ ஞானம் என்றே வைக்கவேண்டும். எப்போது அது உயிருக்கு உள்ளேயே போய் அநுபவமாகிறதோ அப்போதுதான் அதற்கு அபரோக்ஷ அநுபூதி என்ற பெயர் கொடுத்திருக்கறது. இதிலேதான், முரண் மாதிரி இருக்கும் வேடிக்கை! வெளிப்பட குரு வாக்கியம் நன்றாகத் தெரிந்து, மூளைக்கு அது எட்டும்போது, அதற்கு ‘ஒளித்து வைத்தது’, ‘ரஹஸ்யமானது’ என்று அர்த்தம் கொடுக்கும் ‘பரோக்ஷ’ ப் பட்டம் ஒட்டிக்கொண்டிருக்கிறது! பரமரஹஸ்யமாக இருக்கப்பட்ட உயிரின் உள்ளுக்குள்ளே அதுவே தோய்ந்து, உறைந்து போய், வெளிப்படத் தெரிகிற வாக்கு, மூளை எல்லாம் மறைந்து போனபோது தான் ‘அபரோக்ஷம்’ என்று, அதாவது நன்றாக, வெளிப்பட ப்ரகாசிப்பதாக, பட்டம் பெறுகிறது!

இது எப்படி ஸரி என்றால்,

பால் ருசியாக இருக்கிற வஸ்து என்று நமக்குத் தெரியும். வெல்லமும் ருசியான வஸ்து என்று தெரியும். அதனால், பாலையும் வெல்லத்தையும் போட்டு நன்றாக ஸாரம் திரண்டு வரும்படி இறுகக் காய்ச்சினால் அந்தத் திரட்டுப் பால் பஹு ருசியாகத்தான் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது. அதாவது, மூளைக்குத் தெரிகிறது. இப்படி மூளையால் நிச்சயப்படுத்தித் தெரிந்து கொண்டுவிட்டாலும் அதனால் திரட்டுப் பாலில் உண்டாகிற ருசியநுபவம் கிடைத்துவிடுகிறதா? திரட்டுப் பாலின் பலனான அந்த இன்பத்தை அடைய என்ன பண்ணவேண்டும்? தின்று பார்க்கவேண்டும். வெளியிலே தெரிகிற திரட்டுப்பாலை உள்ளே தள்ளுகிறபோதுதான் அதைப் பற்றிய ஸரியான, நிஜமான அநுபவம் உண்டாகிறது. இங்கே வெளிப்பட இருந்த வஸ்து மறைந்துபோய் உள்ளுக்குள்ளே ரஹஸ்யமாக ஆன பிறகுதானே அதனால் என்ன பயனோ, அது எந்த லக்ஷ்யத்தை உத்தேசித்து செய்யப்பட்டதோ அது பூர்த்தியாகிறது? உள்ளுக்குள்ளே போனபின் அதன் ரூபம் மறைந்தாலும் அதன் பயன் அப்போதுதானே வெளிப்படுகிறது?

அதாவது ‘உள்’ ‘வெளி’ என்பதில் இரண்டு விதம் இருப்பதாகத் தெரிகிறது. ரூபத்தினால் வெளிப்பட ஒன்று இருக்கிறபோது அதனுடைய ஸாரமான பயன் பிரகாசிக்காமலிருக்கிறது. பிரகாசிக்காமலிருக்கிறது என்றால் ரஹஸ்யமாக ஒளிந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதாவது வேதாந்த பரிபாஷைப்படி அது ‘பரோக்ஷ’ மாகத்தானிருக்கிறது. உள்ளே போய் அதன் ரூபம் மறைந்து விடுகிறபோது அதன் ஸாரமான பிரயோஜனம் பிரகாசித்து ‘அபரோக்ஷ’ மாகிறது.

ஒரு வஸ்து ஸ்தூலத்தில் தெரிந்துகொண்டிருந்தாலும் அதனால் கிடைக்கக் கூடிய ஸாரமான பிரயோஜனம் கிடைக்கவில்லை என்றால் அது இருந்தாலும் இல்லாத மாதிரிதான். அது ஸ்தூலமாகத் தெரியாவிட்டாலும் அதன் ப்ரயோஜனம் நன்றாக வெளிப்பட்டுத் தெரிகிறது என்றால் அப்போதுதான் அதற்குப் பொருள் உண்டு. வஸ்துவின் வெளிவேஷத்தைவிட அதன் உள் ஸாரம்தான் முக்யம் என்பதை ஒப்புக் கொண்டோமானால் – இதை யாரும் ஒப்புக்கொள்ளாமலிருக்க முடியாது – அந்த ஸாரம் வெளியாகாத நிலையே நிஜத்தில் பரோக்ஷம், ஸாரம் வெளியாகிப் பயன் தரும் போதே அபரோக்ஷம் என்று ஏற்பட்டுவிடும். அப்போது மூளை லெவலில் உபதேசம் நிற்கிறபோதுகூட அதன் ஸார அநுபவ இன்பம் கிட்டாததால் அது பரோக்ஷம்தான், உபதேசமும் போய், மூளையும் போய் தன்னையே மறந்த ஸமாதி நிலையில் உபதேச ஸாரம் வெளிப்பட்டு உயிரில் உறைவதுதான் அபரோக்ஷம் என்று ஏற்பட்டுவிடும். அபரோக்ஷம், பரோக்ஷம் என்பவற்றை மாற்றி முரணாக வேடிக்கை பண்ணவில்லை; வாஸ்தவத்தைத்தான் உள்ளபடி சொல்லியிருக்கிறது என்று தெரியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is தெய்வ பக்தியும் குரு பக்தியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மூளையும் இதயமும்
Next