ச்லோகப் பொருளில் மாறுதல் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படி ஆராய்ந்து பார்த்துக்கொண்டு போனால் முதலில் சொன்ன ச்லோகத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளும்படி ஆகும். (ச்லோகத்தில்) என்ன பார்த்தோம்? ‘எவனுக்கு ஈச்வர பக்தி இருக்கிறதோ, அதற்குக் குறைச்சலில்லாத குரு பக்தியும் இருக்கிறதோ அவனுக்கு ரஹஸ்யார்த்தங்களெல்லாம் ப்ரகாசிக்கும் – அதாவது ஞான ஸித்தி, மோக்ஷ ப்ராப்தி பர்யந்தம் எல்லாம் கிட்டிவிடும்’ என்று பார்த்தோம். இப்போது விசாரணை பண்ணிப் பார்த்ததில், ஈச்வரனையே குருவாக, அல்லது குருவையே ஈச்வரனாகக்கொண்டு ஒருவரிடம் ஒரே பக்தியை – இன்னொருவருக்கு மிச்சம் மீதி வைக்காமல் ‘அநன்யம்’ என்பதாக ஒருவரிடமே முழு பக்தியையும் – வைத்துவிட்டால் போதும்; அதுவே ஞான ப்ரகாசத்தைத் தந்து மோக்ஷத்தில் சேர்த்துவிடும் என்று தெரிகிறது.

நடுவிலே இன்னொரு விஷயமும் பார்த்தோம். எதுவுமே தானாகப் பலன் தராமல், பலதாதாவான ஈச்வரன்தான் பலன் தருகிறான் என்பதற்கேற்ப நம்முடைய பக்தியும் அதுவே ஞானம், மோக்ஷம் முதலானவற்றைத் தருவதற்கில்லை; நம்முடைய பக்தியைப் பார்த்து மெச்சி ஈச்வரன் காட்டுகிற க்ருபையினால்தான் பலன் கிடைக்கிறது என்று பார்த்தோம். அப்புறம் பல பேரைக் குறித்ததாகப் பல பக்திகள் இல்லை, ஒரே ஈச்வரனுக்கு உரித்தாகும் ஒரே பக்திதான் இருக்கிறது; இது போலவே பக்திக்கு ப்ரதியாகப் பெறும் க்ருபையும் பல பேர் பண்ணுவதில்லை, ஒரே ஈச்வர க்ருபைதான் பல பேர் மூலமாக வருகிறது என்று பார்த்தோம்.

இப்படிப்பட்ட பல ரூபங்களுக்குள் குரு ரூபத்தில் ஈச்வரன் க்ருபை பண்ணும்போதுதான் என்றும் அழியாத அமரமான ஸொத்தை ஒருவனுக்கு அநுக்ரஹிக்கிறான். ஞானச் செல்வத்தை அளித்து அவனை நித்யானந்தத்தில் சேர்க்கிறான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஒரே பக்திதான்;க்ருபையும் ஒன்றுதான்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஒருவரே போதுமெனில் அவர் ஈஸ்வரனா, குருவா?
Next