குருவையே ஈசனாகக் கொள்வதெப்படி? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

“அதெப்படி? அகிலாண்ட ப்ரபஞ்சங்களை ஆக்கிப் படைத்து ஆட்டுவிக்கிற ஈச்வரன் என்ற ஒருத்தனிடம் தனியாக பக்தி வேண்டாம் என்று, மநுஷ்ய ரூபத்தில் நம் மாதிரி இருந்து கொண்டிருக்கிற குருவிடமே அநன்ய பக்தி செலுத்துவது என்றால் அதெப்படி?”

அகிலாண்ட ப்ரபஞ்சங்களை ஈச்வரன் ஆக்கட்டும், ஆட்டி வைக்கட்டும், அழிக்கட்டும். அதைப் பற்றி உனக்கென்ன வந்தது? அந்த மஹா பெரிய சக்தியில் உனக்கு வேண்டியது என்ன? துளிப்போற க்ருபை – உன் அழுக்கைப் போக்கடிப்பதற்காக; ஸம்ஸாரத்திலே மாட்டிக்கொண்டு முழிக்கிற உன்னை ரிலீஸ் பண்ணுகிறதற்காக. உனக்கு வேண்டியது உன் விமோசனம்தான். அகிலாண்ட வியவஹாரம் அவன் ஸமாசாரம். மாயையோ, லீலையோ, actual ஸ்ருஷ்டியோ எதுவானாலும் அது அவன் கார்யம். அவனுடைய மாயை அல்லது லீலை அல்லது ஸ்ருஷ்டியாக இருக்கிற அகிலாண்டங்களை அவன் என்ன பண்ணிக்கொள்கிறானோ பண்ணிக் கொண்டு போகட்டும். அதிலே நீ தலையிட்டு உனக்கும் ஒன்றும் ஆகவேண்டாம். அவனுக்கும் ஒன்றும் ஆகவேண்டாம். உனக்குத் தெரிவது, உன் அழுக்கும், நீ கட்டிலே மாட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறதும்தான். இது போயாகணும். இதைப் போக்குகிறது எதுவோ அது ஒன்று தான் உனக்கு வேண்டியது. போக்கடிக்கிற வஸ்துவை எவர் தருகிறாரோ அந்த ஒருத்தர்தான் உனக்கு வேண்டும். ஆகையினால் உன்னை காப்பாற்றி, விமோசனம் தருகிற அந்த வஸ்துவான ஞானத்தைத் தருபவராக குரு என்று இருக்கிறாரே, இவரொருத்தரே உனக்குப் போதும். உன்னைக் கடைத்தேற்றுபவர்தான் உனக்கு வேண்டுமேயொழிய, இதற்கதிமாக அகிலாண்ட ப்ரபஞ்சங்களை ஆட்டி வைக்கிற மஹாசக்தன் என்பதற்காக ஒரு ஈச்வரன் வேண்டியதில்லை.

“ஆமாம், இந்த குரு எனக்கு ஞானம் தருகிறார் என்றால் அவருக்கு மட்டும் அந்த ஞானம் எங்கிருந்து வந்தது? அதை எனக்குத் தருகிற க்ருபை அவருக்கு இருக்கிறதென்றால் அதுவும் எங்கேயிருந்து வந்தது? எல்லாவற்றுக்கும் மூலம் ஈச்வரன்தானே?”

இருக்கட்டும்! நான்தான் சொன்னேனே, ஈச்வரன் ஸகலமும் நிரம்பிய ஸர்வசக்தி ஸமுத்ரமாகவே இருக்கட்டும். ஞான ஸமுத்ரமாக, க்ருபா ஸமுத்ரமாக எல்லாம் அவனே இருக்கட்டும். உன் அழுக்கை அலம்ப அத்தனை ஸமுத்ரமும் வேண்டாம்தானே? ஊற்றிலே, குழாயிலே கங்கை வருகிறதென்றால் அதைக் குடித்தாலே போதும்தானே? கங்கா ப்ரவாஹத்திலேயேதான் மொண்டாக வேண்டுமென்று இல்லையோல்லியோ? அந்த மாதிரி ஞானஸமுத்ரத்திலிருந்து, க்ருபா ஸமுத்ரத்திலிருந்து உனக்குப் போதுமான ஊற்றாக, குழாய் ஜலமாக குரு வந்திருக்கிறார். உனக்கு முடிந்த முடிவாக எந்த ரிலீஸ் வேண்டுமோ, எந்தப் பேரானந்தம் வேண்டுமோ அதைக் கொடுத்து தாஹம், தாபம் தணிவிப்பதற்கு அவரே போதும்.

யாரோ ப்ரபு லக்ஷ ப்ராம்மண போஜனம் செய்யப் போகிறார். அதற்காக மலை மலையாக சாப்பாட்டு வகைகள் கொட்டிக் கிடக்கிறது. ஆனாலும் உனக்கு வேண்டியது ஒரு இலைச் சாப்பாடுதானே? உனக்கு ப்ரபுவைத் தெரியாது. ஆனால் அவருக்கு வேண்டப்பட்ட ஒருவரைத் தெரியும். இவரிடம் கேட்டுக்கொண்டால் இவரே காரியரில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து நீ இருக்கிற இடத்திலேயே கொடுத்துவிடுவார். அப்புறம் ப்ரபுவிடம் போய் நீ எதற்கு நிற்கவேண்டும்? சாப்பாடு அவருடையதாகவே இருக்கட்டும். அதற்காகப் அவரைப் போய் நீ தொந்தரவு பண்ணவேண்டியதில்லை. அவர் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ‘உன்னிடம் வருகிறவர்கள் யாரானாலும் கொடுத்துவிட்டுப்போ’ என்று அந்த வேண்டப்பட்ட நபருக்கு அவரே தாராளமாக உரிமை கொடுத்திருக்கிறார். அவரும் (அந்த நபரும்) ப்ரபுவின் சாப்பாட்டைத்தான் தாம் போடுகிறோமே தவிர, தாமாகவே போடுவதாக பாத்யதை கொண்டாடிக்கொள்வதில்லை. ஈச்வரன்தான் ஞானத்தை அநுக்ரஹிக்கும் சக்தியை குருவுக்குக் கொடுத்திருக்கிறான். அவரும் தாமே ஞானம் அளிப்பதாகக் கொஞ்சம்கூட உரிமை பாராட்டுவதில்லை. ஆனாலும் ஈச்வரனே இப்படி ப்ரியப்பட்டு மற்றவர்களுக்கு ஞானம் வழங்கும்படியான சக்தியை இவருக்கு, குரு என்கிறவருக்கு, வழங்கியிருக்கிறானென்றால், தங்களைக் கடைத் தேற்றுவதான பரம லக்ஷ்யத்தை நிறைவேற்றிவிடும் இந்த குருவையே சிஷ்யர்கள் ஸகலமுமாக நினைத்து அவரிடமே அநன்ய பக்தி செலுத்துவதும் அவனுக்கு உகப்பாகத்தானே இருக்கவேண்டும்?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 'ஈசனே குரு'என்பதும், 'குருவே ஈசன்'என்பதும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குரு வழிபாட்டின் சிறப்பம்சங்கள்
Next