அப்படியே, ஈச்வரன் வேணுமா? அதற்கும் அவனைத் தான் நேரில் உபாஸிக்கணுமென்றில்லை. அவனைப் பிடித்துக் கொண்டுவர நம்முடைய உபாஸனா சக்தி போதவே போதாது. அதனால் ஒரு குருவைப் பிடித்துக் கொண்டு விட்டால் போதும். நமக்காக அவர் ப்ரார்த்தித்தோ சண்டை போட்டோ அவனை இழுத்துக்கொண்டு வந்து விடுவார்.
இப்படி தனக்குக் கிடைத்த ஈச்வர தர்சனம் தன்னுடைய சிஷ்யர்களுக்கு, அல்லது தன்னைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் கிடைக்கும்படியாகப் பல மஹான்கள் பண்ணியிருக்கிறார்கள்.
ஸோமாசி மாற நாயனார் கதையில் இப்படித்தான் பார்க்கிறோம். அவர் தம்மால் நேராக ஈச்வரனை வருவித்துக் கொள்ள முடியாதென்று ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளிடம் போய் வேண்டிக்கொள்ள, ஸுந்தரமூர்த்தி அப்படியே வரவழைத்து விட்டாரென்று கதை. இவர்களை குரு சிஷ்யர்களென்று சொல்ல முடியாது. ஆனாலும் இதிலிருந்தே ஈச்வரனோடு நெருங்கியிருக்கிற குரு, அவனை சிஷ்யனுக்கும் நெருக்கமாகக் கொண்டு வந்து விட முடியுமென்று தெரிகிறது.
அந்தக் கதையைக் கொஞ்சம் பார்க்கலாம். ஆழ்வார் கதை கேட்டோம். நாயன்மார்களில் ஒருத்தர் கதை கேட்க வேண்டாமா? இது இரண்டு நாயன்மார்கள் ஸம்பந்தப்பட்ட கதை.