‘ஸோமாசி’ என்றால் என்னவோ ஏதோ என்று சிரிக்க வேண்டாம். ஸோமயாகம் பண்ணிய ‘ஸோமயாஜி’ தான் ‘ஸோமாசி’ என்றாயிருக்கிறது!
நாயன்மார்களில் ஸமூஹத்தின் அத்தனை பிரிவைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள். தீண்டாதாராகப் பயிர் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாரிலிருந்து, வேடர் (கண்ணப்பர்) , செம்படவர் (அதிபத்த நாயனார்) , வண்ணான் வேலை பண்ணினவர் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார்) , குயவர் (திருநீலகண்டர்) என்றிப்படிப் போய் சேர, சோழ, பாண்டிய, பல்லவ ராஜாக்கள் வரையில் அத்தனை ஜாதிகளையும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பார்க்கிறோம். இவர்களில் ஞானஸம்பந்தர் உள்பட பன்னிரண்டு வைதிக ப்ராம்மணர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருத்தர்தான் ஸோமாசிமாறர்.
பேரளத்துக்குக் கொஞ்ச தூரத்தில் அம்பர், அம்பர் மாகாளம் என்று இரட்டை ஊர்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. அந்த அம்பரைச் சேர்ந்தவர்தான் ஸோமாசி மாறர். “அம்பரான் சோமாசி மாறனுக்கு” என்றே ‘திருத்தொண்டத்தொகை’ யில் ஸுந்தரமூர்த்தி அவரைச் சொல்லயிருக்கிறார். சுக்ல யஜுர் வேதியான அவர் ஸோமயாகம் செய்த இடம் என்று இன்றைக்கும் அம்பருக்கும் அம்பர் மாகாளத்துக்கும் நடுவிலுள்ள ஒரு மண்டபத்தைச் சொல்கிறார்கள். வைகாசி மாஸ ஆயில்யத்தில் அந்த யாகத்தை ஞாபகப்படுத்தி உத்ஸவம் நடத்துகிறார்கள். அதில் ஸ்வாரஸ்யமான அம்சங்கள் உண்டு. அது ஸம்பந்தமாகத்தான் கதை சொல்ல வந்தேன். நாமாக ஈச்வரனை வரவழைக்க முடியாத போது நமக்காக குருவை, அல்லது குருஸ்தானத்திலுள்ள ஒரு பெரியவரைக் கொண்டு அவனை வரவழைத்துக் கொண்டு விடலாம் என்கிற கதை.
பெரிய புராணத்தில் ஸோமாசி மாறரைப் பற்றிச் சொல்லும்போது அவர் யாக கர்மாவின் மூலமே பரமேச்வரனை ப்ரீதி செய்துவிடலாம் என்ற அபிப்ராயத்தை உடையவரென்றும், திருவாரூருக்குப்போய் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை ஆச்ரயித்து அதன் மூலமே சிவஸாயுஜ்யம் அடைந்தாரென்றும் மாத்திரம் சொல்லி அதோடு விட்டிருக்கிறது. ஸ்தல புராணங்களிலிருந்து அவர் பண்ணின ஸோம யாகக் கதையை – ஸ்வாரஸ்யமான கதை என்றேனே, அதை – தெரிந்துகொள்கிறோம். அநேக ஸ்தல புராணங்களைப் போல இது ஜனங்களுக்குத் தெரியாததாக இல்லாமல் அந்தச் சீமைகளில் இன்றைக்கும் ப்ரபலமாக இருப்பதால், இதற்காகவே உத்ஸவம்கூட நடத்துவதால், authentic – ஆனதுதான் (ஆதார பூர்வமானது தான்) என்று தெரிகிறது. இப்படிச் சொன்னதால், ஜனங்களுக்கு அதிகம் தெரியாத ஸ்தல புராணங்கள் authentic இல்லை என்று அர்த்தமில்லை.
‘ஸோம யாகத்தினால் பரமசிவனை ப்ரீதி பண்ண வேண்டும். அதிலே நாம் கொடுக்கிற ஆஹுதிகள் அக்னி முகமாக அவனைச் சென்றடைகின்றன என்று வெறுமனே ஒரு நம்பிக்கையின் மூலம் தெரிந்துகொண்டால் போதாது. ஈச்வரனே ப்ரத்யக்ஷமாக யஜ்ஞத்துக்கு வந்து ஆஹுதியை வாங்கிக்கொள்ளவேண்டும்’ என்று ஸோமாசிமாறருக்கு ரொம்பத் தாபமாக இருந்தது. அதே ஸமயத்தில், ‘நமக்காவது, ஈச்வரனே நேரே வந்து தர்சனம் தந்து, ஆஹுதிகளை வாங்கிக் கொள்வதாவது? அவனை வரவழைக்கிற அத்தனை சக்தி, பக்தி நமக்கு எது?’ என்றும் இருந்தது. ஆனாலும் ஆசை மட்டும் விடவில்லை. அதனால், ‘ஈச்வரனின் பரம பக்தராக, அவனோடு நெருங்கியிருப்பவராக யாராவது இருந்தால் அந்தப் பெரியவரிடம் போய் வேண்டிக்கொண்டு நம்மால் முடியாததை அவரால் நடத்திக் கொள்ளலாமே! இப்படி நமக்காக ஈச்வரனை வரவழைத்துத் தரக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்று தேடிக்கொண்டிருந்தார்.