குருவுக்குக் குறை இருந்தாலும்… : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஈச்வர பக்தி என்று தனியாக ஒன்று செய்யாமல் குரு பக்தி மட்டுமே பண்ணிக் கொண்டிருந்தால் போதும் என்று சொல்வதை ஆக்ஷேபித்து ஒன்று சொல்லலாம். ‘ஒருத்தரிடம் பரிபூர்ண பக்தி, இவர் நமக்காக மோக்ஷ பர்யந்தம் எதுவும் அநுக்ரஹிப்பார் என்ற நம்பிக்கை எப்போது வரும்? அவரிடம் கொஞ்சங்கூட தோஷமே இல்லாமலிருக்க வேண்டும். அனந்த கல்யாண குணங்களும் நிரம்பியவராக அவர் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவரிடந்தான் நம் ஹ்ருதயத்தில் பூர்ணமான பக்தி உண்டாகும். அதே போல, அவர் ஸர்வசக்தராகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் நமக்கு எதையும் அநுக்ரஹிக்க முடியும், மோக்ஷ பர்யந்தம் எதுவும் தரமுடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். ஈச்வரன் இப்படிப்பட்ட தோஷமே இல்லாத அனந்த கல்யாண குண நிலயன்; அதோடு ஸர்வசக்தனும்; இஹம் பரம் இரண்டிலும் அத்தனையும் அநுக்ரஹிக்க முடிந்தவன் என்பதில் ஸந்தேஹமில்லை. யாருக்குமே இதில் கொஞ்சங்கூட ஸந்தேஹம் கிடையாது. ஆனால் இம்மாதிரி தோஷமென்பது கிஞ்சித்கூட இல்லாதவராகவும், நமக்காக எதையும் ஸாதித்துத் தரக்கூடிய ஸர்வசக்தி பொருந்தினவராகவும் இருக்கும் ஒரு குருவை நாம் பெறமுடியுமா? என்னதான் மஹான் என்றாலும் கோபம், கீபம் இப்படி ஏதோ ஒன்று, எதிலேயாவது அவருக்கும் ஆசை – த்வேஷம் என்றெல்லாம் கொஞ்சமாவது இருக்கிற மாதிரிதானே அவர்களும் தெரிகிறார்கள்? ஸர்வசக்தி என்று எடுத்துக்கொண்டாலோ, இவர் எதுவும் முடிகிற ஸர்வசக்தர் என்று காட்டுகிறபடி எந்த குருவாவது இருப்பதாகச் சொல்லமுடியுமா? அவர்களே போடுகிற ப்ளான்களில்கூட சிலது நிறைவேறாமல் போவதைப் பார்க்கிறோம். அவர்களும் தங்கள் கார்யங்கள் நடப்பதற்கு ஈச்வரனை ப்ரார்த்தித்துக்கொண்டு, அந்த சக்தியைத்தானே நம்பியிருக்கிறார்கள்?’ என்று கேட்கலாம்.

இருக்கட்டும். அவர்களும் ஈச்வர சக்தியைத்தான் depend பண்ணிக்கொண்டிருப்பதாகவும், அவர்களிடமுங்கூட தோஷ லேசங்கள் இருப்பதாகவுமே இருக்கட்டும். ஆனால் எங்கும் நிறைந்துள்ள ஈச்வரன் அவர்களுக்குள்ளும் இருக்கிறானா, இல்லையா? அவர்களையே தோஷ ரஹிதமான சுத்த வஸ்து, உத்தம குண ஸம்பன்னர், ஸர்வசக்தி மந்தர் என்று நினைத்து நாம் பக்தி பண்ணினால், நிஜமாகவே அவர்களுக்குள் அப்படி தோஷ ரஹிதமாயும், சுத்தமாயும் கல்யாணகுண பூரிதமாயும், ஸர்வசக்தி மயமாகவும் இருக்கிற ஈச்வரன் அந்த பக்தியை ஏற்றுக்கொண்டு, நமக்கான அநுக்ரஹத்தைப் பண்ணாமல் போவானா என்ன? நாயிடத்திலும், நாயைத் தின்கிறவனிடத்திலுங்கூட ஈச்வர பாவனை இருந்தால், வாஸ்தவமாகவே அவர்கள் மூலமாகவும் அவன் அருள் செய்வான் என்னும் போது, நம்மைவிட எவ்வளவோ மடங்கு சுத்தரான, நல்ல குணம், ஒழுக்கம், கல்வி முதலியவை நிரம்பியவரான, கருணையும் நம்மைக் காப்பாற்றும் எண்ணமும் உள்ளவரான, – நம்மை விட எவ்வளவோ மடங்கு அநுஷ்டான சக்தி, ஸாதனா பலம் ஆகியவையும், இவற்றால் பெற்ற அநுக்ரஹசக்தியும் உடையவரான – குருவின் மூலம் அவரையே மனஸார நம்பிக் கொண்டு கிடக்கிற நமக்கு அநுக்ரஹம் பண்ணாமல்கூட ஒரு ஈச்வரன் இருப்பானா என்ன?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பரமன் வைத்த பரீ¬க்ஷ
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குருபக்தியின் அநுகூலங்கள்
Next