அப்புறம் கோவிலுக்குப் போய் த்யாகராஜாவிடம் விஷயத்தைச் சொன்னார். அவருக்கு அது (ஸ்வாமியிடம் பேசுவது) ஸஹஜமான ஸமாசாரம்!
த்யாகராஜா அதற்கு, “ஸுந்தரம்! நீ ஒன்று சொல்லி நான் செய்யாமலிருப்பதற்கில்லை. உனக்கு ஒருத்தன் கைங்கர்யம் பண்ணிவிட்டானென்றால் அவனுக்கு நான் கூடுதலாகவே செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். அதனாலே, உனக்காக அவனிடமிருந்து ஹவிஸ் வாங்கிக் கொள்வதற்கு நானே நேரில் போகிறேன். ஆனாலும் ஒன்று; இந்தப் ப்ராஹ்மணன் ரொம்பப் பெரிசாக ஆசைப்படுகிறான். அதை நான் அப்படியே நிறைவேற்றித் தருகிறதென்றால் நியாயமாகாது. ஆகையால், இந்த ரூபத்திலேயே போவேனென்று சொல்ல முடியாது. எந்த ரூபத்தில் போனாலும் அவன் புரிந்துகொண்டு கொடுத்தால் ‘ஆஹா’ என்று வாங்கிக்கொள்கிறேன்” என்றார்.
“ஆனால் ஸரி” என்று சொல்லிவிட்டு ஸுந்தரர் ஸோமாசிமாறரிடம் வந்து, “ஸ்வாமி வருவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார்” என்று மாத்திரம் சொல்லி, விட்டு விட்டார்.
“ஸ்வாமி வரேன்னு சொல்லிட்டாரா, சொல்லிட்டாரா?” என்று ஸோமாசி மாறருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
ஸந்தோஷமாக அம்பர் மாகாளத்துக்குத் திரும்பினார்.
எல்லோருடைய ஸஹாயத்தையும் கேட்டுப் பெற்றுப் பெரிதாக ஸோம யாகமும் பண்ணினார். வைகாசி மாஸம் ஆச்லேஷ (ஆயில்ய) நக்ஷத்ரம் கூடிய நல்ல நாளில் யஜ்ஞம் நடந்தது.
ஹவிஸ் கொடுக்க வேண்டிய ஸமயம். ‘ஸ்வாமி வல்லையே, வல்லையே! வருவானா, வருவானா? வராமல்கூட இருப்பானா?’ என்று ஸோமாசிமாறருக்குக் கிடந்து அடித்துக் கொள்ளும்போது…
‘ஐய்ய, இதென்ன இப்படி நடக்கக் கூடாத அநாசாரமாக நடந்துவிட்டது!’ என்று எல்லாரும் அருவருத்துக் கொண்டு மூக்கைப் பிடித்துக் கொள்கிற மாதிரி, ஒரே முடை நாற்றமும் அதுவுமாக, ஒரு புரிய புலையர் கூட்டம் தம்பட்டம் அடித்துக்கொண்டு திபு திபுவென்று யாக சாலைக்குள் நுழைந்துவிட்டது. ஒரு சேரியே படையெடுத்துவிட்டாற்போல இருந்தது. அத்தனை பேருக்கும் பிரதானமாக ஒரு புலையன். நடுவிலே அவன் – அவனைச் சுற்றித்தான் பாக்கிக் கூட்டம். அவன் கையில் நாலு நாய்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். பக்கத்தில் அவன் பெண்டாட்டி. அவள் தலையில், காத தூரத்துக்குக் காடி அடிக்கிற கள்ளுக்குடம்.
யஜ்ஞ ப்ராஹ்மணர்களுக்கு எப்படியிருக்கும்? “போச்சு, போச்சு. யாகமே பாழாப் போச்சு. பரிஹாரம், ப்ராயச்சித்தம் பண்ணிக்காட்டா நம்ப ப்ரஹ்மண்யமும் போயே போயிடும். இந்த அசட்டு மநுஷனுக்கு யாகம் நடத்தித்தர வந்ததற்கு நன்றாக அவஸ்தையை வாங்கிக் கட்டிக் கொண்டோம்” என்று அருவருத்துக் கொண்டு, ஆத்திரப்பட்டுக்கொண்டு எல்லாரும் அந்த இடத்தைவிட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.
ஸோமாசி மாறர் மட்டும் பரமானந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். அத்தனை நாளாக ஈச்வரனை வரவழைக்க வேண்டுமென்று அவருக்கு இருந்த ஆர்வம், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு அவர் ச்ரமம் பார்க்காமல் பண்ணின கைங்கர்ய பலன், அவரிடம் இவருக்கு இருந்த நம்பிக்கை, இவரிடம் அவருக்கு இருந்த அநுக்ரஹ சிந்தை எல்லாமாகச் சேர்ந்து ஸரியான ஸமயத்தில் அவருடைய கண்ணைத் திறந்து வைத்துவிட்டது. பரமேச்வரன் வைத்த பரீக்ஷையில் அவர் பாஸ் பண்ணிவிட்டார்.
‘நடுநாயகமாக நிற்கின்றானே ஒரு புலையன், இவன் வேறே யாருமில்லை – ஸாக்ஷாத் பரமசிவன்தான்! கள்ளுக்குடமும் தலையுமாக அவன் பக்கத்தில் நிற்கிறவள் அம்பாளே! நாலு வேதங்களையும்தான் நாய்களாகக்கிக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறான். சேரிப் பட்டாளம் முழுவதும் பூதகணங்கள்தான் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது!
காசியில் ஆசார்யாளிடம்கூட இப்படியே ஈச்வரன் தீண்டாதான் வேஷத்தில் வந்தான். அவர் முதலில் புரிந்து கொள்ளாத மாதிரி இருந்துவிட்டு, அப்புறம் அவனே வேதாந்தமாகச் கேள்வி கேட்ட பிறகு புரிந்துகொண்டாரென்று கேட்டிருப்பீர்கள். ஸோமாசிமாறர் தாமாகவே புரிந்துகொண்டு விட்டதாக இந்தக் கதை.
“ருத்ர” த்தில் ஸகலத்தையும் சிவ ஸ்வரூபமாகச் சொல்லிக்கொண்டு வரும்போது திருடன், புலையன் ஆகியவர்களாகவுங்கூட அவனே இருக்கிறானென்று இருக்கிறது. கீதையிலே* பகவான், “பூஸுரர்கள் என்று பூஜிக்கப்படும் உத்தமமான ப்ராஹ்மணன்; கோ பூஜை, கஜ பூஜை என்று வழிபாடு பெறும் பசு, யானை; இதற்கு மறுபக்கம் பரம நிக்ருஷ்டமாக (தாழ்வாக) க் கருதப்படும் நாய்; அந்த நாய் மாம்ஸத்தையும் சாப்பிடும் புலையன் என்றிப்படி ஸகல ப்ராணிகளிடமும் ஸமதர்சனம் உடைவன்தான் உண்மையாகக் கற்றுணர்ந்த பண்டிதன்” என்று சொல்லியிருக்கிறார்.
ஸோமாசி மாற நாயனார் எத்தனையோ காத்திருந்து கஷ்டப்பட்டு, ஈச்வரன் வருவானென்று உடலை வருத்திக் கொண்டு யஜ்ஞம் செய்து கடைசியில் சேரிக்கூட்டம் வந்த போது, ‘ஐயோ, அத்தனையும் வீணாப் போச்சே!’ என்று அழுது, ஆத்திரப்பட வேண்டிய ஸமயத்தில் அமைதியாக அன்புருவமாக இருந்துகொண்டு சேரித்தலைவனாக வந்தவன் அந்த ஈச்வரனே என்று தெரிந்துகொண்டு அவன் கையிலே ஹவிஸைக் கொடுத்தார்.
மற்ற ப்ராம்மணர்களையும், “ஓடாதேள், ஓடாதேள்! ஸ்வாமியேதான் ஸபரிவாரம் இப்படி வேஷம் போட்டுண்டு வந்திருக்கான். நான் சொல்றதை நம்புங்கோ” என்று முறையிட்டுக் கூப்பிட்டார். ஆனால் அவர்கள் அவரை நிந்தித்துவிட்டுப் போய்விட்டார்கள்.
அதனால் ஸ்வாமி அவர்களையே தீண்டாதாராகும்படி சபித்து விட்டாரென்றும், அப்புறம் அவர்களுக்காக ஸோமாசிமாறர் வேண்டிக்கொண்டதன் மீது ஹவிஸ் தந்த அந்த நேரத்தில் மட்டும் தினமும் அவர்களை ஒதுக்கி வைக்கவேண்டுமென்று சாபத்தை இளக்கினாரென்றும் மேலே கதை சொல்வார்கள்.
யஜ்ஞத்தில் கலந்துகொள்ள யாருக்கு அதிகாரம் இருக்கிறது. யாருக்கு இல்லை என்று சாஸ்த்ரத்தில் எப்படிச் சொல்லியிருக்கிறதோ அதை அந்த ப்ராம்மணர்கள் பின்பற்றியதில் தப்பில்லைதான். ஆனால் இவர்களைவிட நல்ல சாஸ்த்ரஜ்ஞரான ஸோமாசிமாறர் படாத பாடுபட்டு இப்படி ஒரு யஜ்ஞம் பண்ணி, இப்போது இவர்களை இருக்கச் சொல்லி மன்றாடுகிறாரென்றால், அதற்கு ஏதோ காரணமிருக்க வேண்டுமென்று அவர்கள் கொஞ்சம் பொறுமையாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அப்படிப் பண்ணியிருந்தால் அவர்களுக்கும் ஈச்வர தர்சனம் கிடைத்திருக்கும். மாறாக அவரை இவர்கள் திட்டிவிட்டு வெளியேறியதாலேயே ஈச்வர சாபத்திற்கு ஆளாகும்படியாயிற்று.
நமக்கு இது முக்யமில்லை. ஸோமாசி மாறர் ஹவிஸை எடுத்துக்கொண்டு வந்தவுடன் சேரித்தலைவன் ரிஷபாரூடராக தர்சனம் தந்தான். அம்பாள், கணங்கள் ஆகியவர்களும் ஸ்வயரூபத்தில் காட்சி கொடுத்தனர்.
ஸோமாசிமாற நாயனாருக்கு ஜன்ம ஸாபல்யமாயிற்று. ஜன்ம நிவ்ருத்தியுமாயிற்று. சிவ லோகத்தை அடைந்தார்.
கதை எதற்குச் சொன்னேனென்றால், ஸ்வய பலத்தால், பக்தியால் ஈச்வர தர்சனம் பெறமுடியாது என்று அவருக்குத் தெரிந்தபோது, ஈச்வரனை நன்றாக அறிந்த பெரியவரின் மூலம் அதை அவர் பெற்றாரென்று காட்டுவதற்குத்தான்.
பச்சிலையைக் காட்டி ஒரு பசுவை வரவழைப்பதுபோல, ஒதுக்குப் புறத்தில் கிடந்த ஒரு கீரையை அவர் காட்டியதிலேயே ஈச்வரனுக்கு ஸ்நேஹிதர் ஸ்தானத்திலிருந்தவர் அவருக்குத் தாம் கடன்பட்டதாக நினைத்து அவனை வருவித்துக் கொடுத்துவிட்டார்.
(முதலில் ‘ஈச்வரனைப் பிடிப்பதற்காக நாம் பிடிக்க வேண்டிய ஸுந்தரமூர்த்தியையே எப்படிப் பிடிப்பது?’ என்று யோசித்து, ஸோமாசி மாறர் அர்ப்பணித்த கீரைதான் ஒரு விதத்தில் அவருக்காக ஸுந்தரரிடம் தூது போய் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. அதனால்தான் ‘தூதுளங்கீரை’என்ற பெயரோ என்னவோ? ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்திலும் இப்படியே ராமாநுஜருக்கு முன்னால் ஆசார்ய புருஷராயிருந்த ஆளவந்தார் என்பவர் ஆரம்ப நாட்களில் ராஜபோகத்துடன் வாழ்ந்துவந்த காலத்தில் மணக்கால் நம்பி என்பவர் தூதுளங்கீரை அனுப்பி வைத்தே அவருடைய கவனத்தைக் கவர்ந்ததாக இருக்கிறது. ஆனால் வித்யாஸமென்னவென்றால், அந்தக் கதையில் கீரை அனுப்பிவந்த மணக்கால் நம்பிதான் ஆளவந்தாருக்கு குரு ஸ்தானமாக ஆனவர். எப்படியானாலும் அந்தக் கீரைதான் இரண்டு பேருக்கு நடுவே தூது போகிற மாதிரிப் போய் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது!)
ஈச்வரனே வேண்டியதில்லை, குரு போதும்; அல்லது ஈச்வரன் வேண்டுமானாலும் அவனையும் குரு மூலமே ஸம்பாதித்துக் கொள்ளலாம் – என்று காட்டுவதற்குத்தான் கதை, புராணம் சொல்கிறேன்.
குரு செய்யும் பரமோபகாரத்துக்காக நாம் அவருக்குச் செய்யவேண்டியது பக்தி ஒன்றே.
நம்பிக்கை எல்லாவற்றுக்கும் மூலம், ‘இவர் நிச்சயம் கடைத்தேற்றுவார்’ என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும். பக்தி ச்ரத்தை என்பது அதைத்தான்.
* ஐந்தாவது அத்யாயம், பதினெட்டாவது ச்லோகம்.