குருமுகமாக அறிவதன் சிறப்பு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

நாமாகவே தெரிந்து கொள்வதைவிட, அதாவது புஸ்தகம் படித்தும் ஸ்வய அநுபவங்களாலும் மட்டும் தெரிந்து கொள்வதைவிட குருமுகமாகத் தெரிந்து கொள்வதில் என்ன சிறப்பு என்றால், நாமாகத் தெரிந்துகொள்ளும் போது, ‘இவ்வளவு படித்தோம், இப்பேர்ப்பட்ட விஷயங்களை நம்முடைய அநுபவத்தாலேயே தெரிந்து கொண்டோம்’ என்ற அஹங்காரம் ஏற்பட இடமிருக்கிறது. புஸ்தகப் படிப்பும் வேண்டியதுதான். குருவே புஸ்தகத்திலிருந்தும் உபதேசிக்கிறார். ‘இது இது இன்னும் படி’ என்றும் சொல்வார். அதே மாதிரி, அல்லது அதை விடவும், ஸ்வய அநுபவத்தாலும் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். குரு உபதேசமெல்லாமும் ஸ்வாநுபூதியில் கொண்டு விடுவதற்குத்தானே? ஆனால் அப்படி ஒரு பெரியவரின் துணை, guidance இல்லாமல் நாமாகப் படிப்பு, அநுபவம் என்று போகும்போது (தலையைத் தொட்டுக் காட்டி) கனத்துப் போகிற அபாயம் இருக்கிறது. குரு என்று ஒரு பெரியவரை வரித்து விட்டால் அவரிடம் அடங்கியிருப்பது, சுச்ருஷை செய்வது என்று இருப்பதில் ஆத்மாவுக்கு மிகவும் ஹானிகரமான இந்த அஹங்காரம் அப்படியே நசிக்க வசதி ஏற்படுகிறது. வெறும் புத்திவ்ருத்தியாய் மட்டும் எல்லாம் முடிந்துபோய்விடாமல், அன்பு, தொண்டு ஆகியவற்றால் உள்ளம் பக்குவமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக புஸ்தகத்தில் சொல்லியிருக்கிறதும், மூளை லெவலில் மட்டும் புரிகிறதுமான தத்வங்கள், ஒரு அநுபவியின் மூலம் அவருடைய நிறைந்த அநுக்ரஹ சிந்தையோடு உபதேசமாக வரும் போது ஜீவனுள்ள சக்தியாக நமக்குள் போய் நம்மையும் ஸத்ய அநுபவத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறது. அந்தப் பெரிய அநுபவம் தனக்கு ஏற்படுவதிலும் சிஷ்யன் அஹங்காரப்பட முடியாது. ஏனென்றால் அஹங்காரம் நாசமாகி ஆத்மா மாத்திரம் பிரகாசிப்பதுதான் அந்த அநுபவமே! அதற்கு குருவின் அநுக்ரஹம் ரொம்ப அவச்யம்.

எல்லோரும் முடிந்த அளவு குரு பக்தி செய்து ச்ரேயஸை அடைய வேண்டியது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is எந்த பாவத்தினாலும் ஈசனருள் பெறலாம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மும்மூர்த்தியரை மூலப்பொருளாக அல்லாமல்
Next